உலகை மாற்றிய ப்ளூ எல்இடி (Blue LED)

இருபதாம் நூற்றாண்டு ஒளிரும் விளக்குகளால் ஆளப்பட்டது என்றால், இருபத்தோராம் நூற்றாண்டு LED விளக்குகளால் ஆளப்படுகிறது’- என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டது.
Blue Led Lights
Blue Led LightsAI GENERATED
Published on

அறிவியலாளர்களிடம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஒரு குட்டி எல்இடி (LED) விளக்கின் கதைதான் இது. அது மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன், இப்போது இருப்பது போல இருந்திருக்க முடியாது. டிவிக்கள் இன்னும் CRT குண்டு டிவிக்களாகவே இருந்திருக்கலாம். லாப்டாப்புகள் ஒரே நிறத்தில் இயங்கிக் கொண்டிருந்திருக்கும். ஓடிடிக்கள் இருந்திருக்குமா என்பது சந்தேகமே! சம்பளத்தில் பாதியை மின்சாரக் கட்டணமாகவே கட்டிக் கொண்டிருந்திருப்போம். இப்படியான அத்தனைச் சிக்கல்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்றியது அந்தக் குட்டி நீல நிற எல்இடி விளக்குதான்!

அமெரிக்காவைச் சேர்ந்த நிக் ஹோலோனியாக் (Nick Holonyak Jr.) எனும் விஞ்ஞானி 1962ல் சிவப்பு நிற எல்இடியைக் கண்டுபிடிக்கிறார். அது சாதாரண ஒளிரும் விளக்குகளை விட 90% குறைவான மின்சார ஆற்றலைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது மற்றும் பிற விளக்குகளை விட நம்ப முடியாத அளவு பன்மடங்கு உழைக்கக்கூடியவை என்பதையும் அறிந்து உலகமே வியந்து நிற்கிறது. ஆனால், அவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டுமானால், சிவப்பு விளக்கு மட்டும் போதாது. அடிப்படை நிறமாலைகளை உருவாக்கிட, குறிப்பாக வெள்ளை நிற ஒளியை உருவாக்கிட பச்சை மற்றும் நீல எல்இடி விளக்குகளும் வேண்டும். அவ்வளவுதானே, கண்டுபிடித்தால் போயிற்று என அவ்வளவு எளிதாக மற்ற இரண்டையும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, 1972ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்பர்ட் மருஸ்கா (Herbert Maruska) பச்சை நிற எல்இடியைக் கண்டுபிடிக்கிறார்.

அதன் பின் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, அமெரிக்க விஞ்ஞானிகள் இது சாத்தியமில்லை என்று கைவிடும் நிலையில், ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகாசாகி (Isamu Akasaki), ஹிரோஷி அமானோ (Hiroshi Amano), ஷுஜி நகமுரா (Shuji Nakamura) எனும் மூவரணி இறுதியாக 30 ஆண்டுகள் உழைப்பின் பலனாக நீல நிற எல்இடியை உருவாக்குகிறார்கள். அதன்பிறகே எல் இடிக்களின் சகாப்தம் தொடங்குகிறது. இந்த நீல நிற எல்இடியின் கண்டுபிடிப்புக்காகவே இவர்கள் மூவரும், 2014ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினை பெற்றார்கள்.

Shuji Nakamura with Blue LEDs
Shuji Nakamura with Blue LEDsasianscientist.com

அறிவியல் உலகில், ஏன் இது ஒரு புரட்சியாக வர்ணிக்கப்படுகிறது?

நீல நிற எல்இடியின் வருகை ஒளி அமைப்பில் மூன்று முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒன்று, நீல நிற எல்இடியுடன் மஞ்சள் பாஸ்பரஸைச் சேர்ப்பதன் மூலம் மிகச்சிறந்த வெள்ளை ஒளியைப் பெற முடிந்தது. இது பாரம்பரியமான ஒளிரும் விளக்குகளுக்கு (Incandescent bulbs) தரமான மாற்றாக அமைந்தது. சாதாரண விளக்குகளை விட எல்இடி விளக்குகள் 90% குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன. மேலும், இவை மிக நீண்ட காலம் உழைக்கக்கூடியவை. பாதரசம் போன்ற நச்சுப்பொருட்கள் இதில் இல்லாததால், இவை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

நிஜ உலகில் அதன் தாக்கங்கள் மிக அதிகம். இன்று நாம் பயன்படுத்தும் LED TV, லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் திரைகள் மெல்லியதாகவும், துல்லியமான நிறங்களுடனும் இருப்பதற்கு இந்த நீல எல்இடியே காரணம். ப்ளூ-ரே (Blu-ray) தொழில்நுட்பம் மற்றும் அதிவேக ஒளிவழித் தகவல் தொடர்புகளில் இதன் பயன்பாடு அதிகம். குறைந்த மின்சாரத்தில் இயங்குவதால், சூரிய சக்தி மூலம் இயங்கும் விளக்குகள் சாத்தியமாயின. இது இல்லாவிட்டால், வெளிச்சத்துக்காக மட்டுமே உலகின் மின்சார உற்பத்தியில் 40% செலவிடப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கும். இதனால், மின்னுற்பத்தியும், அதற்கான செலவும் மனிதனுக்கு மிகப் பெரும் சுமையாக மாறியிருக்கும்.

’இருபதாம் நூற்றாண்டு ஒளிரும் விளக்குகளால் ஆளப்பட்டது என்றால், இருபத்தோராம் நூற்றாண்டு எல்இடி விளக்குகளால் ஆளப்படுகிறது’- என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டது. நமது பார்வையில், இது ஒரு சிறிய கண்டுபிடிப்பாகத் தோன்றினாலும், இதுதான் நம் உலகையே பசுமையான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. 

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது லேப்டாப்பானாலும், ஸ்மார்ட் போனானாலும் அதற்குள் லட்சக்கணக்கான பிக்சல்கள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு பிக்சலிலும் மூன்று நிற எல்இடிக்களும் இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒன்றாக நமது ப்ளூ எல்இடியும் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Puthuyugam
www.puthuyugam.com