நீரோடு பிணைந்த வாழ்க்கை: ஆலப்புழா

இப்பகுதி மக்களின் பொருளாதாரம் பெரும்பாலும் நீரைச் சார்ந்தே அமைகிறது. மீன்பிடித்தல், இவர்களின் முதன்மையான தொழில். சிறிய படகுகள் மூலம் அதிகாலையிலேயே மீன்பிடிக்கச் சென்றுவிடுவார்கள்.
Alappuzha Boat Beauty
Alappuzha Boat BeautyAugustus Binu - Wikipedia
Published on

கிழக்கின் வெனிஸ் (Venice of the East) என்றழைக்கப்படும் ஆலப்புழா, கேரளமாநிலத்தின் அழகிய சுற்றுலா நகரமாகும். ஆலப்புழாவின் புவியியல் அமைப்பு என்பது மிகவும் தனித்துவமானது. இங்கே நிலமும், நீரும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. கடல்நீர் உள்வாங்கி நிற்கும் கழிமுகத்தில் அமைந்துள்ள இந்த நகரம், அதனாலேயே புகழ்பெற்றிருக்கிறது. கழிமுகம் எனப்படும் பேக்வாட்டர்ஸின் அழகு, அதில் மிதந்துகொண்டிருக்கும் படகுவீடுகள் என சுற்றுலாப்பயணிகளின் இலக்காக இருக்கும் ஆலப்புழாவின் பின்னணியில், இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் எதார்த்தமான, சவால்கள் நிறைந்த வாழ்க்கை மறைந்துள்ளது. அவர்களின் ஒவ்வொரு விடியலும் நீரின் அலைகளுடனேயே தொடங்குகிறது.

இதில் ஓர் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இத்தகையச் கழிமுக நீர்ப்பகுதி என்று புகழப்படும் ஆலப்புழாவில், கடல்நீர் உள்ளே வரும் புகுமுகம் எதுவுமே இல்லை என்பதுதான். கடல்நீர் உள்ளே புகும் புகுமுகப்பகுதிகள் அனைத்தும் கொச்சியில்தான் அமைந்துள்ளன. கொச்சியில் உள்வாங்கும் கடல் நீர்தான், தெற்கே சுமார் 55 கிலோமீட்டர் வரை, அதாவது ஆலப்புழா வரை பரவி, பிரம்மாண்டமான வேம்பநாடு ஏரியாக மாறி நிற்கிறது. கடல்நீர் மட்டுமல்லாது, சுற்றிலுமிருந்து, பம்பா, மணிமாலா, மூவாற்றுப்புழா போன்ற பல சிறு நதிகளும் இந்த வேம்பநாட்டு ஏரியில்தான் வந்து கலக்கின்றன. இதனால்தான் இந்தப் பகுதியின் ஒரு பிரம்மாண்டமான நீர்வழிப்பாதை இயற்கையாகவே அமைந்திருக்கிறது. அதோடு 18ம் நூற்றாண்டில், வணிக நோக்கத்துடன் செயற்கையாகவும், பல கால்வாய்கள் வெட்டப்பட்டன. அதெல்லாம் சேர்ந்துதான், ஆலப்புழாவின் இத்தகைய அழகுக்கும் காரணமாகி நிற்கின்றன.

இப்பகுதி மக்களின் பொருளாதாரம் பெரும்பாலும் நீரைச் சார்ந்தே அமைகிறது. மீன்பிடித்தல், இவர்களின் முதன்மையான தொழில். சிறிய படகுகள் மூலம் அதிகாலையிலேயே மீன்பிடிக்கச் சென்றுவிடுவார்கள். கறிமீன் எனப்படும் முத்துச் சிமிட்டி மீன்கள் இவர்களின் அடையாளமாகும். தென்னை மரங்கள் செறிந்த இப்பகுதியில், தேங்காய் நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழில் பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கடல் மட்டத்திற்குக் கீழே விவசாயம் செய்யும் உலகின் மிகச்சில இடங்களில் குட்டநாடு பகுதியும் ஒன்று. இங்குள்ள மக்கள் நீரைத் தேக்கி, அதன் மூலம் நிலத்தை உருவாக்கி, அதில் நெல் விவசாயம் செய்கிறார்கள்.

Public water transport organised by Kerala State Transport Agency for long-distance transport within the back waters of Kerala
Public water transport organised by Kerala State Transport Agency for long-distance transport within the back waters of KeralaFredydmathewskerala - Wikipedia

இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளும், அதைச் சுற்றிலும் நிறைந்திருக்கும் பசுமையான தென்னை மரங்களும், படகு வீடுகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு, மருத்துவமனை, ஆம்புலன்ஸ், காய்கறிச் சந்தைகள், குடிதண்ணீர் வழங்கல், போக்குவரத்து, வீட்டு உபயோகப்பொருள் தொடங்கி, கட்டுமானப் பொருள் வரைக்குமான சரக்குப் போக்குவரத்து என எல்லாமே படகுகளால்தான் நடக்கிறது.

சுற்றுலாப் பயணிகளுக்குப் பரவசத்தைத் தரும் இந்த நீர்நிலை, அங்கு வாழும் மக்களுக்குச் சில சிரமங்களையும் தரத்தான் செய்கிறது.

1. இங்கே படகுகளே பேருந்துகள். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை அனைவரும் அரசுப் படகுகளையே (Water Transport) நம்பியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் வாசலில் ஒரு சிறிய 'வள்ளம்' நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.


2. சுற்றிலும் நீர் இருந்தாலும், அது உவர் நீராகவோ அல்லது மாசடைந்த நீராகவோ இருப்பதால், நல்ல குடிநீருக்காக இவர்கள் நீண்ட தூரம் பயணித்துப் படகுகளில் எடுத்து வர வேண்டியுள்ளது.


3. மழைக்காலங்களில் நீர்மட்டம் உயரும்போது, வீடுகளுக்குள் நீர் புகுவது இவர்களின் வழக்கமான துயரம். 2018 பெருவெள்ளத்திற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கை முறை பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது.

இந்த மக்களின் வீரத்தையும், ஒற்றுமையையும் பறைசாற்றுவது நாமனைவரும் அறிந்த, சிறப்புமிக்க 'வள்ளங்களி' எனப்படும் படகுப் போட்டி. ஓணம் பண்டிகையின் போது நடைபெறும் ’நேரு ட்ராஃபி’ படகுப் போட்டி இவர்களின் வாழ்வின் ஒரு அங்கமாகும். ஆலப்புழா மக்கள் அமைதியானவர்கள், விருந்தோம்பல் பண்பு மிக்கவர்கள். நவீன உலகம் எவ்வளவோ முன்னேறினாலும், இன்றும் ஒரு சிறிய படகில் அமர்ந்து கொண்டு அமைதியாகத் துடுப்புப் போடும் அந்த மனிதர்களின் வாழ்க்கை, இயற்கையோடு எப்படி இயைந்து வாழ வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.

Puthuyugam
www.puthuyugam.com