காலை 8.30 மணி பேருந்தைப் பிடித்தால்தான், நீங்கள் நேரத்துக்கு அலுவலகம் சென்றடைய முடியும். ஒரு நாள் ஏதோ காரணத்தால் தாமதமாகி, நீங்கள் பேருந்து நிலையத்துக்கு 8.40 மணிக்கு போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அன்று உங்களது வழக்கமான 8:30 மணி பேருந்தும் தாமதமாகி 8.41க்கு வந்தால், அதன் பெயர்தான் அதிர்ஷ்டம்.
முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்வோம். இப்படியான அதிர்ஷ்டம் (Luck) என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த அதிர்ஷ்டத்துக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை. இரண்டும் வேறு வேறானவை. பேருந்து நிலையத்துக்கு நீங்கள் அரக்கப்பறக்க ஓடி வரும் போது, ’கடவுளே என் பேருந்தும் தாமதமாக வரவேண்டும்’ என்று வேண்டிக் கொண்டே வந்தீர்கள், அதனால்தான் அந்தப் பேருந்து தாமதமாக வந்தது என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அது வேறு விதமானது. உங்களுக்கு கடவுள் அருள் நிறையவே இருக்கிறது, நீங்கள் பெய் என்று சொன்னால் மழையும் கூடப் பெய்யலாம் என்பது பொருள். நாம் இந்தக் கட்டுரையில் அதைப் பற்றிப் பேசப்போவதில்லை. மாறாக, தற்செயல் (Chances) நிகழ்வுகளையும், உழைப்பையும் குழப்பிக் கொள்வதைப் பற்றிப் பேசலாம்!
இந்த அதிர்ஷ்டம்தான் ஒரு சிலரால், நேரம் எனக் குறிப்பிடப்படுகிறது. விரும்பத் தகாதது எதுவும் நடந்து விட்டால், ’நேரம் சரியில்லை’ என்றும், நல்ல வேலை, திருமணம் போன்ற விசயங்கள் தாமதமானால் ’எதற்கும் நேரம் கூடி வரவேண்டாமா?’ என்று சொல்வதும் இந்தத் தற்செயல் நிகழ்வுகளைத்தான். போலவே, பலரும் சோதிடம் பார்ப்பதும், கடவுளை வணங்குவதும் கூட இந்த அதிர்ஷ்டத்திற்காகத்தான். ஆனால், தற்செயல் என்பது இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.
ஒரு சிலர், பேருந்து நிலையத்துக்கு 8.45 மணிக்கு வந்தால் கூட 8.30 பேருந்து மட்டுமல்லாது, 8.00 மணி பேருந்து கூட முக்கால் மணி நேரம் தாமதமாக வந்து நிற்கும். ஏன், 9.00 மணி பேருந்து கூட கால் மணி நேரம் முன்னதாக வந்து அவர்களுக்காகக் காத்திருக்கும். நம்மைப்போல ஒரு பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக, நிதானமாக சன்னலோர இருக்கை காலியாக இருக்கும் பேருந்தைத் தேர்ந்தெடுத்து வசதியாகச் செல்லுவார்கள். ஆனால், நாம் 8.30 மணி பேருந்தைப் பிடிக்க 8.28க்குப் போனாலும் கூட, அது ஒரு நிமிடம் முன்னதாக 8.27க்கே கிளம்பிப் போயிருக்கும். நம் அதிர்ஷ்டத்தை நொந்துகொண்டு, முன்னதாகவே எழுந்து, கிளம்பி 8:20க்கே போய் காத்திருந்தால், அன்று அந்தப் பேருந்து 9.20க்கு வரும். 9.00 மணிக்கு வரவேண்டிய பேருந்தும் கூட, 9.20க்கு அதோடு ஜோடி போட்டுக்கொண்டு வரும். மேலும், ஆகிப்போன தாமதத்தால், இரண்டு பேருந்துகளும் படிகொள்ளாத அளவுக்கு, புளி மூட்டை போல கூட்டத்தை வேறு திணித்துக்கொண்டு வரும். மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கும் நமக்கு!
அலுவலகத்திலும் நாம் இத்தனை வருடங்களாக நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்கிறோம், ஆனால் நேற்று வந்தவர் எளிதாக சம்பள உயர்வையோ, பதவி உயர்வையோ பெற்றுவிடுகிறார்.
நாம் என்னதான் செய்வது? அதிர்ஷ்டத்தை வேண்டிக் கொண்டு உட்கார்ந்து விட வேண்டியதுதானா?
அதிர்ஷ்டம் என்பது அறிவியல் பூர்வமாக நிகழ்தகவு சார்ந்தது. ஒரு நாணயம் சுண்டப்படும் போது எப்போதும் தலை மட்டுமே விழுந்து கொண்டிருப்பதில்லை. நமது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை நிகழ்தகவின் கையில் ஒப்படைத்து விட முடியாது. நமது முன்னேற்றம் என்பது நம்முடைய அறிவில், திறமையில், உழைப்பில், திட்டமிடுதலில் இருக்கிறது. அதை, துரதிர்ஷ்டம் ஒரு போதும் தடுத்துவிட முடியாது.
8.30 மணி பேருந்து, ஒரு நாள் தாமதமாகவோ அல்லது சற்று முன்னதாகவோ வந்துவிடக்கூடும்தான். அது உங்கள் கையில் இல்லை. ஆனால், நீங்கள் தினமும் 8:25க்கு பேருந்து நிலையத்துக்கு வருவதை வழக்கப்படுத்திக் கொண்டீர்கள் என்றால் 98% சதவீத நாட்களில் உங்கள் பேருந்தை சரியான நேரத்தில் பிடித்து விடுவீர்கள். நம் செயல்பாடுகளோ, அதில் வெற்றியோ, தோல்வியோ, மனிதர்களோ, அவர்தம் கலைப்படைப்புகளோ, சித்தாந்தங்களோ என இங்கே எதுவுமே முழுமையானது (Perfection) அல்ல! 100% நாட்களும் உங்கள் பேருந்தைப் பிடித்துவிட நினைத்து, தவறவிடும் நாட்களை துரதிருஷ்டம் என்று எண்ணிக் குலைந்து போவதும் அப்படியானதுதான். வாழ்க்கையின் அழகே எதிர்பாராத தன்மையிலும், சிற்சிறு களங்கங்களிலும்தான் (Imperfections) இருக்கின்றன.
அதிர்ஷ்டம் வரட்டும், வராமல் போகட்டும். ஆனால், நாம் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை அது தீர்மானிக்கக் கூடாது.