’நம்ம பாட்டன், பூட்டன் எந்த யூனிவர்சிட்டிலடா படிச்சான்? அவன்லாம் சந்தோசமா இல்லாம நாசமாவாப் போயிட்டான்? படிப்பாடா முக்கியம்? தற்சார்புதாண்டா முக்கியம். ஆடு மாடு வளர்த்து, விவசாயம் பார்த்து வாழும் போது நமக்குக் கிடைக்கிற நிம்மதி, கைகட்டி இன்னொருத்தன்கிட்ட வேலை பாத்தா கிடைச்சிடுமாடா? ஆடுமாடு மேய்க்கிறதை கவர்மெண்டு வேலையாக்குறேன் பாரு, சாணியள்ளுறதையும், வறட்டி தட்டுறதையும் கம்ப்யூட்டர்ல கணக்கு பாக்க வைக்கிறேன் பாரு’ என்று தொண்டை நரம்பு புடைக்க ஆவேசமாக சிலர் கத்திக்கொண்டிருக்கிறார்கள். அது நம் இளைஞர்கள் சிலருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஏன் இந்தப் பேச்செல்லாம் சிலருக்கு மிகவும் பிடிக்கிறது?
மனிதன் ஆதாரமாக உழைக்கவும், சிந்திக்கவும் தலைப்படுபவன். அந்தப் பண்புதான் அவனுக்குப் பரிணாம வளர்சியைக் கொடுத்து இந்தப் பூமியில் உயிர்பிழைத்து, நிலைபெற வைத்துள்ளது. அவனது உடல், உழைப்பைக் கோருகிறது. நடப்பது, ஓடுவது, வேட்டையாடுவது, தூக்குவது, சுமப்பது போன்ற வேலைகளை அவன் செய்தாக வேண்டும். அல்லது அவனது உடற்திறனும், உள்ளுறுப்புகளின் செயல்பாடும் ஒவ்வொன்றாகக் குன்றிப்போகும். போலவே, அவனது மூளை சிந்தனையைக் கோருகிறது. தகவல்களை நினைவில் கொள்வது, அதனை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி ஆய்வு செய்வது, அதன் மூலம் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, திட்டமிடுவது போன்றவற்றை அவன் செய்தாக வேண்டும். அல்லது அவனது மூளை துருப்பிடித்து செயல்படாது போய்விடும்.
இந்தக் குணங்கள்தான், பெரும் ஆபத்துகளிலிருந்து அவனை உயிர்பிழைக்க வைத்தன. ஆனால், இன்று உயிராபத்து கிட்டத்தட்ட இல்லை! குறைந்தபட்ச உணவு, உடை, இருப்பிடத்துக்கான ஏற்பாடுகள் அவனிடம் இருக்கிறது. அப்படியானால், உடலும், மனமும் அதற்கு அடுத்த கட்டத்துக்குப் போகிறது. கடும் வேட்டையாடுதலில் உடலும், சிந்தனையும் ஒருமுகப்பட்டு உழைத்த பின்னர் அவனுக்கு அடுத்த தேவை ரீசார்ஜ்! ஓய்வு மற்றும் கேளிக்கை! அதுவும் மிக அவசியமான ஒரு பகுதிதான். மறுநாளின் வேட்டைக்கான சக்தி அப்போதுதான் சேகரமாகும்.
ஆனால், இன்றைய நமக்குத்தான் நாளைக்கான உணவு, உடை, இருப்பிடத்துக்கான பிரச்சினை இல்லையே! பிறகேன், நான் காலையில் எழுந்து கிளம்பி, நடந்தும், சைக்கிளிலும், பஸ்ஸிலுமாக பள்ளி, கல்லூரிகளைத் தேடி ஓட வேண்டும்? அவர்கள் தரும் பாடங்களை என் மூளைக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும்? நாளைய உணவு தயாராக இருக்கும் போது, ஓய்வைத்தானே மூளை விரும்பும்? அதுதானே டிசைன்? பிறகேன் அல்ஜீப்ராவையும், கால்குலஸையும், ஜியாமெட்ரியையும் ஊன்றிப் படித்து என் மூளையை வேலை வாங்க வேண்டும்? மைக்ரோ பயாலஜியையும், கம்ப்யூட்டர் சைன்ஸையும், சைக்காலஜியையும், மெட்ராலஜியையும் நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
நாளைய நம் தேவை என்பதுதான் இங்கே மிக முக்கியமானது. ஆதி மனிதனுக்கு இருந்ததைப் போல நமது நாளை என்பது நாளைக்கான வேட்டை மட்டுமே அல்ல, அது இப்போது வேறு வடிவம் கொண்டிருக்கிறது. அதுவே சிறப்பான நமது எதிர்காலம்! சமூகப் பொருளாதார வளர்ச்சி! செம்மையான வாழ்வு!
‘ஏன் கஷ்டப்பட்டு நாம் படிக்க வேண்டும்?’ எனும் கேள்வியைக் கேட்கும் இளைஞர்களுக்கான பதில் இதுதான். ‘உங்களது வளமான எதிர்காலத்துக்காக உழைப்பையும், சிந்தனையையும் நீங்கள் தந்து படித்தாக வேண்டும். உங்களது நாளைய உணவை உறுதிப் படுத்தியிருக்கும் இந்தச் சமூகத்துக்கு அது உங்களது கடமையாகிறது’. ஆனால், இதை எடுத்துச் சொல்லாமல், அவர்களுக்குப் பிடித்தமான ஓய்வை முன்னிறுத்தி,
’கலைஞர், காமராசர், கமல்ஹாசன், இளையராஜா, சச்சின் போன்றோர் படித்தார்களா என்ன? வா, படிக்காமல் முன்னேறுவோம்!’ என்று பசப்புவார்கள். அது நம் மூளைக்கு இதமான, இனிமையான, மகிழ்வான பதில்! ஆனால், அது உண்மையல்ல! படிக்காத லட்சம் பேரில் ஒரு கலைஞரும், ஒரு காமராசரும் தோன்றுவார்கள். ஆனால், மீதி அத்தனை பேரின் கதி? படுகுழிதான்! ஆனால், படிப்பு லட்சத்தில் 99% பேரின் வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்திவிடும். அதோடு, அதிலிருந்து இன்னும் வீரியமான படித்த கலைஞர்களும், காமராசர்களும் கூட நிச்சயம் தோன்றுவார்கள்.
அப்படியானால், விவசாயமும், தற்சார்பும் என்னாவது? ஆஹா, இந்த வீணர்கள் எப்போதும் நம்மையேதான் நமக்கு எதிராக நிறுத்துவார்கள். அப்படியானதுதான் இதுவும். அவற்றை யார் வேண்டாம் என்று சொல்வது? படித்துவிட்டு விவசாயத்துக்கும், தற்சார்புக்கும் இன்னும் மேம்பட்ட வடிவங்களில் செயலாக்கம் கொடுங்கள். கல்வி உங்களுக்குத் தருவது அறிவியல், கணித அறிவை மட்டுமல்ல, பொருளாதார, சமூக, விவசாய அறிவையும்தான்! அதோடு, கல்வி உங்களை ஒரு சமூக அறிவுள்ள மனிதனாக்குகிறது. மனிதனின் ஆதாரமே சமூக அமைப்புதான். சமூக அறிவுதான், உண்மையையும், பொய்யையும் பிரித்துப் பார்த்து பகுத்தறியும் திறனையும், யோசித்துக் கேள்வி கேட்கும் திறனையும், அதிகாரத்தை எதிர்க்கும் துணிவையும் தருகிறது.
கடைசியாக சொல்லப்பட்ட துணிவு, அது உங்களுக்குக் கிடைத்துவிடக்கூடாது என்பதுதானே, உங்களைத் திசை திருப்பும் வீணர்களின் பிரதான நோக்கமாகவே இருக்கிறது!