ஒரு சிறிய வட்டத்துக்குள்… உலகின் பெரும்பகுதி மக்கள்! #ValeriepierisCircle

இந்த வரைபடத்தைப் பார்த்தவுடன் நமக்கு வரும் முதல் எண்ணம், ’இவ்வளவு சின்ன இடத்துக்குள்ளே இவ்வளவு பேர் எப்படி?’ எனும் வியப்புதான். அதனால்தான் இந்தக் கருதுகோளும் இத்தனை தூரம் பரவலாகியிருக்கிறது.
Valeriepieris_Circle
Valeriepieris_CircleNasa
Published on

உலக வரைபடத்தில் ஒரு சின்ன வட்டத்துக்குள்தான், உலகத்தின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. அந்த வட்டத்துக்குத்தான் ‘வலெரிப்பியெரிஸ் சர்கிள் (Valeriepieris Circle) என்று பெயர்.

மியான்மர், சீனா எல்லைக்கருகே இருக்கும் மோங்கெட் எனும் ஊரை மையமாக வைத்து சுமார் 4000 கிமீ ஆரத்துக்கு ஒரு வட்டம் வரைந்தால், அந்த வட்டத்துக்குள்தான் இவ்வுலகின் 60% மக்கள் வசிக்கிறார்கள். இது ஓர் அறிவியல் ஆய்வு முடிவாக இல்லாமல், 2014 சமயத்தில் Reddit பயனாளி ஒருவர் தற்செயலாகச் சொன்ன ஒரு விஷயமாகும். அதன் பின்னர், இது மிகப்பரவலாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, உலக மக்கள் தொகை  குறித்த விவாதங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒரு கருத்தாக  இப்போது மாறிவிட்டது.

இந்த வட்டத்துக்குள் சீனா, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து உட்பட பல நாடுகள் அல்லது அவற்றின் பகுதிகள் இடம்பெறுகின்றன. இது உலகின் மொத்த தரைப்பரப்பான 15 கோடி சதுரகிலோமீட்டரில் வெறும் 10% மட்டுமே! இதற்குள்தான் உலகின் மொத்த மக்கள்தொகையில் 60% பேர் வாழ்கிறார்கள்.  மீதி 40% சதவீதம் மக்கள்தான், அந்த வட்டத்துக்கு வெளியே இருக்கும் 90% நிலப்பரப்பில் பரவி வாழ்கிறார்கள்.

இந்த வரைபடத்தைப் பார்த்தவுடன் நமக்கு வரும் முதல் எண்ணம், ’இவ்வளவு சின்ன இடத்துக்குள்ளே இவ்வளவு பேர் எப்படி?’ எனும் வியப்புதான். அதனால்தான் இந்தக் கருதுகோளும் இத்தனை தூரம் பரவலாகியிருக்கிறது.

Valeriepieris_circle
Valeriepieris_circlecmglee - Wikipedia

இதற்கான காரணங்கள் மிக எளிதானவைதான். இந்த வட்டத்துக்குள்தான் உலகின் பெரும்பாலான பெரிய நதிகள் ஓடுகின்றன. யாங்சே, லேங்காங், மஞ்சள் நதி, முத்து நதி போன்ற சீன நதிகளும்,  கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, கோதாவரி, நர்மதா போன்ற இந்திய நதிகளும் இந்த வட்டத்துக்குள் குறிப்பிடத்தகுந்தவை. இவைதான் மனித நாகரிகத்தின் தொட்டில்களாக இருந்திருக்கின்றன. நீர் இருந்த இடத்தில் விவசாயம், விவசாயம் இருந்த இடத்தில் உணவு, உணவு இருந்த இடத்தில் மக்கள்! அதோடு, இந்தப் பகுதியின் முக்கிய நிலவமைப்பான இமயமலைதான் இத்தகைய நீர் வளங்களுக்கும், மனித வாழ்வுக்கு ஏற்ற காலநிலைகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த வட்டத்துக்குள் இருக்கும் நாடுகளைக் கவனித்தால், உலகின் மிகப் பெரிய நகரங்களும், அதே நேரத்தில் மிக அதிக கிராமங்களும் பரவலாக இடம்பிடித்திருப்பதைக் கவனிக்கலாம். உலகின் பெரும் தொழிலாளர் பலம், நுகர்வோர் சந்தை, இளையோர் மக்கள் தொகை  என எல்லாமே இந்த வட்டத்துக்குள்தான் அதிகமாக இருக்கிறது.

இதில், இந்தியாவின் பங்கைச் சொல்லவே வேண்டாம். மக்கள் தொகைப் பெருக்கத்தில் நாம் ஏற்கனவே, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துவிட்டோம். வரலாற்றுக் காலங்களிலிருந்தே இத்தகைய மக்கள் நெருக்கம் இந்தப் பகுதிகளில் அதிகம்தான் எனினும், தற்போது இந்த நெருக்கத்தினால் தான், இங்கே வேலைவாய்ப்புப் பிரச்சினைகளும், நகரமயமாக்கல் பற்றிய கவலைகளும், வளங்களின் பற்றாக்குறை பற்றிய அச்சமும் நிலவுகின்றன.

ஒரு பக்கம், ’Man Power’ எனப்படும் மனித வளம் இங்கே அதிகம் எனும் விசயம், பலமாகப் பார்க்கப்பட்டாலும், அதுவே வளப்பற்றாக்குறை எனும் அழுத்தமாகவும் மாறி நிற்கிறது. வட்டம் சின்னது, ஆனால், அதற்குள் இருக்கும் அழுத்தம் பெரிது. வலெரிப்பியெரிஸ் சர்க்கிள் நமக்கு சொல்லும் முக்கியமான பாடம் இதுதான். உலகத்தில் இடத்துக்குக் குறைவில்லை. ஆனால், அதில் மனிதர்கள் வாழ விரும்பும் இடங்கள்தான் குறைவு.

அத்தகைய இடங்களை எப்படிப் பாதுகாக்கிறோம், எப்படிச் சமநிலையோடு பயன்படுத்துகிறோம் என்பதுதான், எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.

Puthuyugam
www.puthuyugam.com