அலோகா... உலக சமதானத்தின் சின்னம்! #AlokaThePeaceDog

அலோகா என்ற பெயர் கொண்ட இந்த இந்திய நாய் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது. காரணம் என்ன?
அலோகா
அலோகா
Published on

நான்கு கால் விலங்குகளாலும் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். இதற்கு, உதாரணமாகியுள்ளது இந்தியாவின் நாட்டு நாய் ஒன்று. இந்த நாயின் பெயர் அலோகா. இதற்கு, சமஸ்கிருதத்தில் 'வெளிச்சம் ' என்று அர்த்தம். இந்த அலோகா நாய் அமெரிக்காவில் அமைதி வேண்டி நடைபயணம் மேற்கொண்டுள்ள புத்த துறவிகளுடன் இணைந்து நடந்தே 10 மாகாணங்களை கடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரத்திலுள்ள Huong Dao Vipassana Bhavana மையத்தில் இருந்து கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 19 புத்த துறவிகள் வாஷிங்டன் நகரம் வரை அமைதி நடை பயணத்தை தொடங்கினர். அவர்களுடன் சேர்ந்து அலோகாவும் நடைபயணம் மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, இதே துறவிகள் இந்தியாவில் 112 நாட்கள் அமைதிப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, இந்தியாவில் வசித்து வரும் நாய்களை போல அலோகாவும் தங்க நிரந்தர இடமின்றி, உணவின்றி தெருவில் வசித்து வந்தது. கொல்கத்தாவுக்கு இந்த துறவிகள் வந்த போது, அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளது. பல நாட்கள் துறவிகளை பின் தொடர்ந்து, சென்றதால், அவர்கள் அந்த நாயை அரவணைத்துக் கொண்டனர். பின்னர், அலோகா என பெயரிட்டு தங்களுடன் அழைத்து சென்றனர்.

Welco

நடைபயணம் என்பது நகர்ந்து கொண்டே செய்யும் தியானம் போன்றது என்று புத்த மதம் சொல்கிறது.' புத்த மத வரலாற்றில், நடந்து செல்வது என்பது ஒரு வகையான செயல்முறைத் தியானமாகக் கருதப்படுகிறது. துறவிகளாகிய நாங்கள் ஒரு இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மட்டும் நடக்கவில்லை; பேராசை, கோபம், அகங்காரம் போன்ற மனப் பிரச்னைகளை அகற்றுவதற்காகவே நடக்கிறோம். அமெரிக்கா முழுவதும் நடப்பதன் மூலம், யாருக்கு எதிராகவும் நாங்கள் போராடவில்லை; வசை பாடவில்லை. மாறாக, எங்களுக்குள் உள் அமைதியை வளர்ப்பதற்காக நடக்கிறோம். இது எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது' என்று புத்த துறவிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தெருநாய்களுக்கு எதிரான மன நிலை தீவிரமான காலக்கட்டத்தில் அலோகாவும் இந்த புத்த துறவிகளுடன் சேர்ந்து கொண்டது. லட்சக்கணக்கான தெருநாய்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்ற எண்ணத்தையும் உலக மக்களிடத்தில் அலோகாவின் நடை பயணம் விதைத்துள்ளது. தற்போது வரை, அலோகா அமெரிக்காவில் 3,700 கி.மீ தொலைவுக்கு நடந்துள்ளது. நடக்கும் போது, தன்னைக் காண வரும், தலையை வருட வரும் மக்களிடத்தில் அன்புடன் நடந்து கொள்கிறது. யாரை பார்த்தும் குரைப்பது இல்லை. முறைப்பது இல்லை... கடிக்கவும் முயற்சி செய்வதில்லை. பொறுமையாக அனைவரிடத்திலும் நடந்து கொள்கிறது. இதனால், பலரும் உண்மையிலேயே, அலோகா அமைதியின் சின்னம்தான் என்றே குறிப்பிட்டுள்ளனர். நடை பயணத்தின் போது, அலோகாவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் புத்தத் துறவிகள் செய்து கொடுத்துள்ளனர்.

Welco

புத்தத் துறவிகளும் அலோகா தங்களுடன் வருவது கூடுதல் உற்சாகத்தைத் தருவதாகக் கூறுகின்றனர். நல்லதொரு கம்பெனியனாக, அமைதியான ஆன்மா ஒன்று தங்களுடன் சேர்ந்து நடந்து வருவதை தாங்கள் உணர முடிவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நடை பயணத்தைத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஒரு கார் ஒன்று அலோகாவை அடித்து விட்டது. பலத்த காயத்துக்குப் பிறகு, குணமடைந்த அலோகா சோர்வடைந்து விடவில்லை. புத்தத் துறவிகளை விட்டு விலகி, ஓடி விடவும் இல்லை. அவர்களுடனே தொடர்ந்து இருந்தது. அதன் உறுதித்தன்மையை கண்டு வியந்த புத்தத் துறவிகள் தங்களின் அடுத்தக்கட்ட பயணத்துக்காக அமெரிக்காவுக்கு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு,தெருவில் வாழ்ந்த நாயாக பார்க்கப்படாமல் ஒரு கருணையின் அடையாளமாகவே அலோகா பார்க்கப்பட்டது. #alokathepeacedog என்ற இன்ஸ்டா பக்கத்தில் அலோகவை 1,60,000 பேர் பின் தொடருகின்றனர். அலோகாவின் தினசரி நடவடிக்கைகள் இந்தப் பக்கத்தில் வீடியோவாக வெளியிடப்படுகிறது.

அலோகா ஸ்வெட்டர் அணிந்து கொண்டு அதிகாலையில் புத்தத் துறவிகளுடன் நடப்பது, ஓய்வெடுப்பது, பயணத்தின் போது, குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற வீடியோக்களை மக்கள் விரும்பி ரசிக்கிறார்கள். 'வாக் ஃபார் பீஸ்' இணையதளத்தில் உள்ள ஜிபிஎஸ் வழியாக அலோகாவின் சரியான இருப்பிடத்தையும் கண்டுபிடிக்கலாம். புத்தத் துறவிகள் அலோகாவை ஒரு மார்க்கெட்டிங் உத்தியாகப் பார்க்கவில்லை. அதே வேளையில், இந்த டிஜிட்டல் உலகத்தில் தெருநாய்களின் பிரச்னையை உலகளவில் எடுத்து செல்ல அலோகா ஒரு கருவியாக செயல்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com