ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் உருவான கதை; மைசூரு மகாராஜாவின் தாராளம்! #HAL

1940ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க தொழிலதிபரான வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவர் சீனாவில் சொந்த விமானத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
Mysore King - Jayachamarajendra Wadiyar
Mysore King - Jayachamarajendra WadiyarWikipedia
Published on

பெங்களூரில் உள்ள 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்' (HAL) நிறுவனம் இந்தியாவில் விமானத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஹெலிகாப்டர்களையும் தயாரிக்கிறது. இஸ்ரோவுடன் இணைந்து தேஜஸ் போன்ற போர் விமானங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கடந்த 1940ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு டிசம்பர் 23ம் தேதி நிறுவனர் தின நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 86 ஆண்டுகள் ஆகிறது. இந்த HAL நிறுவனம் கர்நாடகத்துக்கு வந்ததே ஒரு தனிக்கதை.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பிறந்தவர் வால்ச்சந்த் ஹீராசந்த். பிறப்பால், இவர் குஜராத்தி. மிகப் பெரிய தொழிலதிபர். வால்சந்த் குழுமம் என்ற மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கியவர். இந்தியாவில் முதல் கப்பல் கட்டும் தளம்; முதல் விமானத் தயாரிப்பு நிறுவனம்; முதல் கார் தயாரிப்பு (பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ்) நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்தவர். இவை தவிர பல்வேறு நிறுவனங்களையும் நடத்தினார். இவருக்கு இந்தியாவில் மிகப் பெரிய விமானம் தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்க வேண்டுமென்பது லட்சியம்.

இன்னொருபுறம், - 1940ம் ஆண்டு - இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க தொழிலதிபரான வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவர் சீனாவில் விமானத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதற்காக, Central Aircraft Manufacturing Company என்ற நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார். ஆனால், போரின் உக்கிரம் சீனாவில் கடுமையாக இருந்தது. ஜப்பான் அடிக்கடி சீனாவை தாக்கிக் கொண்டிருந்தது. இதனால், வில்லியம் டக்ளஸ் பாவ்லே சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். மாற்று இடம் தேடிக் கொண்டிருந்தார்.

Dhruv_Ecuador - Manufactured by Hindustan Aeronautics Limited
Dhruv_Ecuador - Manufactured by Hindustan Aeronautics Limited By G-BYGB

இந்த சமயத்தில் வால்சந்த் ஹிராசந்த், வில்லியம் டக்ளசை தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து பரோடா , குவாலியர் மன்னர்களைச் சந்தித்து தங்களது லட்சியத்தைக் கூறி, உதவி கேட்டனர். ஆனால், யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. வட இந்தியாவில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, தென்னாட்டில் பிரபல மன்னரான மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜேந்திரா உடையாரைச் சந்தித்து தங்களது விமானத் தயாரிப்பு நிறுவனம் பற்றிக் கூறி உதவி கேட்டனர். மைசூரு மகாராஜா உடனடியாக கேட்ட உதவிகளை செய்து கொடுத்தார்.

ஒரு விஷயத்தை சொன்னால், இப்போது நம்மால் நம்பவே முடியாது. அதாவது 72 மணி நேரத்தில் 700 ஏக்கர் நிலம் தொழிற்சாலை அமைக்க ஒதுக்கப்பட்டது. 25 லட்சம் ஆரம்ப முதலீடாக செய்யப்பட்டது. பிற, வசதிகள் அனைத்தும் மின்னல்வேகத்தில் கிடைத்தன. 1940ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பதியப்பட்டது. 1941ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த நிறுவனத்தில் பணிகள் தொடங்கி விட்டன. சீனாவில் Central Aircraft Manufacturing நிறுவனத்தில் இருந்த அனைத்து இயந்திரங்களும் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. (எதிர்பார்த்தது போலவே அதன்பின் Central Aircraft Manufacturing நிறுவனத்தின் மீது ஜப்பான் குண்டு வீசி அழித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது).

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரன்வே அமைக்கப்பட்டது. நிறுவனத்துக்காக முதல் கட்டடமும் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் விமானம் Harlow Trainer என்பதாகும். இது, மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இப்படித்தான் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தனது பயணத்தைத் தொடங்கியது.

Hindustan Aeronautics Limited
Hindustan Aeronautics LimitedHAL

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது , இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு, Air Force's No. 129 Squadron அதாவது, மைசூரு ஸ்குவாட்ரானை உருவாக்க முடிவு செய்தது. அப்போதே ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை மைசூரு மகாராஜா பிரிட்டிஷ் அரசுக்கு தானமாக வழங்கினார். உலகப் போரின் போது, மைசூரு ஸ்குவாட்ரான் பல அளப்பரிய சாதனைகளை செய்தது. 1945ம் ஆண்டு உலகப்போர் முடிவடைந்தது. அப்போது, மைசூரு மகாராஜா ஹெச்.ஏ.எல் தயாரிப்பான Mysore Dakota VT-AXX ரக விமானத்தை சொந்தமாக வாங்கினார். இதில், 21 பேர் பயணிக்க முடியும். பைலட் சுந்தரம் என்பவர்தான் மகாராஜாவின் தனி விமானத்தை இயக்குவார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டிலேயே முதன்முறையாக தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க முன் வந்தார் மைசூரு மகாராஜா.

அப்போது, துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் , பல சமஸ்தான மன்னர்களை சந்தித்து இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருநதார். இந்த சமயத்தில் , சர்தார் வல்லபாய் படேல் பயணிக்க, தனது தனி விமானத்தை வழங்கினார் மைசூரு மகாராஜா . வல்லபாய் படேலுக்கும் பைலட் சுந்தரம்தான் விமானத்தை இயக்கினார். இந்த விமானத்தில் பயணித்து வல்லபாய் படேல் 560 மன்னர்களை சந்தித்ததாக சொல்கிறார்கள். இது, நாட்டை ஒருங்கிணைப்பதில் மைசூரு மகாராஜாவின் அக்கறையை காட்டியது. 1948ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நாட்டில் முதன்முறையாக பெங்களூரு அருகேயுள்ள ஜக்குர் என்ற இடத்தில் விமான பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது. இதற்கு வருகை தந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் மைசூரு மகாராஜாவின் தனி விமானத்தில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமாக திகழ மைசூரு மகாராஜா ஜெயசாம்ராஜேந்திரா உடையார் போட்ட விதைதான் காரணம் என்றால் அது மிகையல்ல. தற்போது, ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடியை இந்த நிறுவனம் வருவாயாக ஈட்டுகிறது. கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக HAL அறிவிக்கப்பட்டது.

Puthuyugam
www.puthuyugam.com