வங்கிகள் கடன் கொடுத்து வசூலிக்க முடியாமல் திணறுவது உண்டு. அந்த வகையில் இந்தியத் தொழிலதிபர்கள் 15 பேர் மட்டுமே தேசிய வங்கிகளுக்கு 58 ஆயிரம் கோடி வாராக்கடன் வைத்துள்ளனர். இந்தக் கடன்களை வசூலிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவருமே தற்போது, லண்டனில் வசிக்கின்றனர். வாராக்கடன் போலவே, மக்கள் பணமும் வங்கிகளிடம் கோடிக்கணக்கில் குவிந்து கிடக்கிறது. அப்படி மட்டும் தேசிய வங்கிகளிடம் ரூபாய் 58,331 கோடியும் தனியார் வங்கிகளிடம் ரூபாய் 8,673 கோடியும் மக்கள் பணம் குவிந்துள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐயிடம் மட்டும் ரூ.19,330 கோடி உள்ளது. அடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூ. 6,911 கோடியும் கனரா வங்கியிடம் 6,278 கோடியும் உள்ளன.
தனியார் வங்கிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் 2,063 கோடியும் ஹெச்.டி.எப்.சி வங்கியிடம் 1,610 கோடியும் ஆக்சிஸ் வங்கியிடம் 1,360 கோடியும் உள்ளது. இந்தப் பணத்தை மக்களிடமே திருப்பி கொடுக்க ஒரு திட்டத்தை ரிசர்வ் வங்கி உருவாக்கியது. அதன் பெயர் , 'உங்கள் பணம் , உங்கள் உரிமை' ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் தேசிய வங்கிகள் ரூ.9,466 கோடியையும் தனியார் வங்கிகள் ரூ. 841 கோடியையும் மக்களுக்கே திருப்பி செலுத்தியுள்ளன.
இதற்காக, UDGAM என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இதில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் போன்றவற்றை குறிப்பிட்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்கள் கணக்கில் பணம் இருந்தால், நீங்களோ அல்லது உங்கள் வாரிசுதாரரோ நேரடியாக வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம். 10 ஆண்டுகளாக உங்கள் தொகையை நீங்கள் கேட்கவில்லையென்றால், அந்தப் பணம் ரிசர்வ் வங்கியின் Depositor Education and Awareness (DEA) Fund- க்கு மாற்றப்படும். அப்படி, மாற்றப்பட்டாலும் நீங்கள் உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு, வட்டியும் உண்டு. எந்தச் சமயத்திலும் நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். வங்கிகள் மக்கள் பணத்தை கையாள்வதில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கின்றன என்பதை வெளிக்காட்டவே இந்த திட்டம் இயற்றப்பட்டது.
சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்ட் அக்கவுண்ட், முதிர்வடைந்த டெபாசிட்ஸ், டிவிடெண்ட் வாங்காமல் இருப்பது என பல வழிகளில் மக்கள் பணம் வங்கிகளிடம் குவிந்து கிடக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு 10. 24 கோடி மக்களின் 35 ஆயிரம் கோடி பணம் வங்கிகளிடம் இருந்தது. இரு ஆண்டுகளில் இந்தத் தொகை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நமது பணத்தை எப்படித் திரும்ப பெற வேண்டும் என்கிற விழிப்புணர்வு இல்லாததால், மக்கள் 'போனால் போகட்டும்' என்று விட்டுவிடும் மனநிலையில் உள்ளனர். மற்றொன்று தேசிய வங்கிகளில் வாடிக்கையாளர் சேவைக் குறைபாடு காரணமாகவும் மக்கள் வங்கிகளுக்கு செல்லவே தயங்குவதாகவும் கூறப்படுகிறது. எனினும் உங்கள் பணம் உங்கள் உரிமை திட்டத்தின் கீழ் எளிதாக மக்கள் தங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.