பத்தாம் வகுப்பு முடித்திருக்கலாம், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்கலாம், கல்லூரியில் இருக்கலாம் அல்லது கல்லூரியை முடித்தும் இருக்கலாம்... இப்படியான வயதுகளில் உங்கள் வீட்டில் ஒரு பையன் இருந்தால், ஒரு கேமிங் கான்சோல் வாங்குவதைப் பற்றிய ஆலோசனை ஒருமுறையாவது வந்து போயிருக்கும். அது நல்லதா, அவர்களை மேம்படுத்துமா அல்லது அவர்களது நேரத்தை வீணடிக்குமா என்பதை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தால், அது அந்த வயதிற்கான கனவு. நமக்குள்ளும் இருக்கும் அந்த வயது சிறுவனையோ, இளைஞனையோ நாம் இன்னும் தாண்டிச் செல்லாமலிருந்தால் அந்தக் கனவினை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
அந்தக் கனவினை புரிந்து கொண்டிருக்கிறோமோ அல்லது பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் வாங்கித் தருகிறேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறோமோ, காரணம் எதுவாக இருந்தாலும் இப்போது PS5 வாங்கலாமா அல்லது Xbox- Series X வாங்கலாமா என்ற யோசனை போய்க்கொண்டிருக்கிறதா? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான்.
மாடர்ன் கேமிங் கான்சோல்கள் அறிமுகமாகி 30 வருடங்களுக்கு மேலாகிறது. அவ்வப்போது அப்படியான கம்ப்யூட்டர் கேம்களை பற்றிக் கேள்விப்படும்போது, 95 லிருந்து இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவற்றின் தரமும், தொழில்நுட்பமும் எவ்வளவு தூரம் வியப்பூட்டும்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
சோனி ப்ளேஸ்டேஷன், மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ போன்ற போன்ற பெருநிறுவனங்கள் இந்தத் துறையில் தொடக்கத்திலிருந்தே கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. எனினும் 10 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளேஸ்டேஷனுக்கும், எக்ஸ்பாக்ஸுக்கும் இடையே இருந்த, வீரியமான தொழில்போட்டி இப்போது வெகுவாகக் குறைந்திருப்பதைக் காணமுடிகிறது. மைக்ரோசாஃப்ட் இந்தப் போட்டியிலிருந்து பின்வாங்குவதாக துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதனால் ப்ளேஸ்டேஷன் தனிப்பெரும்பான்மையுடன் மார்க்கெட்டைக் கைப்பற்றும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில், இன்னொரு பெருநிறுவனம் ஒன்று கேமிங் கான்ஸோல் களத்தில் குதித்திருக்கிறது.
அது VALVE STEAM. இது, கான்ஸோல் சந்தைக்குத்தான் புதிதே தவிர, இந்த கேமிங் துறைக்கு அல்ல. 2005 லிருந்தே கேமிங் கான்ஸோல்களுக்கு கேம்களை உலகளாவிய அளவில் விநியோகிக்கும் நிறுவனம்தான் இந்த ஸ்டீம்!
இந்த ஸ்டீம் தான் இப்போது Steam Machine எனும் பெயரில் ஒரு புதிய நவீன கான்ஸோலுடன் களத்துக்கு வந்திருக்கிறது. இவர்களிடம் எக்ஸ்பாக்ஸ், ப்ளேஸ்டேஷன் போன்ற கான்ஸோல்களுக்காக உருவாக்கப்பட்ட ஏராளமான கேம்களின் உரிமை இருப்பதால், இது எளிதாகச் சந்தையைக் கைப்பற்ற முடியும் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.
அதோடு, இந்த Steam Machine ஒரு கேமிங் கான்ஸோலாக மட்டும் செயல்படாமல், ஒரு சக்தி வாய்ந்த கணினியாகவும் செயல்படும் என்று சொல்லப்படுகிறது. எக்ஸ்பாக்ஸ் மற்றும் ப்ளேஸ்டேஷன் இதிலொன்றை இப்போது நாம் வாங்குவதாக இருந்தால் சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியிருக்கும். அதோடு, அதற்கான ஒவ்வொரு கேம் சிடிகளுக்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. ஆனால், இந்த மெஷின் கூடுதலாக ஒரு கணினியாகவும் செயல்படும் என்பது நாம் கவனிக்க வேண்டிய செய்தி. ஏற்கனவே, கணினிகளிலும் நம்மால் இப்படியான வீடியோ கேம்களை விளையாட முடியும் எனினும், கேம்களுக்கான தரமான கணினிகள் கட்டமைக்க நிச்சயமாக 50,000 விடவும் அதிகமாக செலவு பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக, ஒரே விலையில் நமக்கு ஒரு கேமிங் கான்ஸோலும், ஒரு கணினியும் கிடைத்து விடுகிறது என்பதுதான் இதில் இருக்கும் கவர்ச்சிகரமான விஷயம். அதோடு ஒரு எளிய மாதத் கட்டணத்தில், ஆன்லைனில் ஸ்டீம் கேம்களை நம்மால் விளையாட முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
அப்படியென்றால், Steam Machine-ன் விலை என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போது நம் முன்னால் இருக்கும் ஒரே கேள்வி. Steam Machine இன்னும் ஓரிரு மாதங்களில் சந்தைக்கு வரவிருக்கிறது. ஒரு ப்ளே ஸ்டேஷன், ஒரு தரமான கணினி இரண்டுக்கும் ஆகும் விலையை விட இது அதிகமாக இருக்குமானால் இதை எளிதாகத் தவிர்த்து விடலாம். குறைவாக இருக்கிறது எனில், அந்த விலையைப் பொறுத்தும், பிற விஷயங்களைப் பொறுத்தும் Steam Machine-னை முயற்சிக்கலாமா என்ற முடிவை எடுக்கமுடியும். ஆகவே, கொஞ்சம் பொறுத்திருங்கள்!