ச்தீபாவளி மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். எத்தனை பண்டிகை வந்தாலும் தீபாவளிக்கு என்று ஒரு தனி குதூகலம் கொண்டாட்டமும் இருக்கத்தான் செய்கிறது. சமஸ்கிருதத்தில் தீபாவளி என்ற சொல்லுக்கு "விளக்குகளின் வரிசை அல்லது சரம்" என்று பொருள். பரிசுகள் இனிப்புகள் என்று வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது மிகவும் பிரபலமாகக்கொண்டாடப்படும்.
இப்படி பரிசுகள் கொண்டாட்டங்கள் இனிப்பு புத்தாடை பட்டாசு என்று களைக்கட்டும் தீபாவளியானது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல… ஐந்துநாட்கள் கொண்டாட்டம் . அதைப்பற்றி பார்க்கலாம்.
தீபாவளியின் முதல்நாள் தன்வந்திரியை போற்றுவதற்காக தந்தேராஸ் அல்லது தனத்ரயோதசிஎன்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலர் பாத்திரங்கள் மற்றும் தங்க நகைகள் போன்ற புதிய பொருட்களை வாங்குவார்கள். இந்நாளில்தான் பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த பொழுது அதிலிருந்து தன்வந்தரி அவதரித்ததாக புராணங்கள் கூறுகிறது. ஆகவே இந்நாளில் தன்வந்திரியை வணங்கி நோய் நொடியின்றி வாழ பிரார்தித்துக்கொள்கின்றனர்.
இரண்டாம்நாள் தீபாவளி … அன்றுதான் கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தநாள். , இந்நாளை வடமாநிலத்தவர்கள் சோட்டி தீபாவளி என்று அழைக்கின்றனர்
தீபாவளியின் மூன்றாம் நாள், குபேர லட்சுமிபூஜை செய்யப்படுகிறது. இந்நாளில் செல்வச் செழிப்பிற்காக மக்கள் லட்சுமி தேவியை வழிபடுகிறார்கள், மேலும் இந்நாளில் கிருஷ்ணர் வெண்ணெய் திருடியதற்காக அவரது தாயார் யசோதாவால் உரலில் கட்டுண்டு இருக்கும் சமயம் , சாபத்தினால் மரங்களாக இருந்த இரண்டு தேவர்களை விடுவித்தது இதே நாளாகும். மேலும் தீபாவளி அன்றுதான் தான் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர், அயோத்திக்குத் திரும்பி, பேரரசராக முடிசூட்டப்பட்ட தினமாகும். அந்தநாளில் அயோத்தி மக்கள் இந்த மகிழ்ச்சியான நிகழ்வை தீபாவளியாக நகரம் முழுவதும் விளக்குகளை ஏற்றி கொண்டாடினர். இந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.
நான்காவது நாள் கிருஷ்ணாரின் கோவர்த்தனகிரி நிகழ்வை நினைவுக்கூறும் பொருட்டு கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது
இந்த நிகழ்வு கிருஷ்ணர், இந்திரனுக்கு யாகம் செய்வதற்குப் பதிலாக கோவர்த்தன மலையை வழிபடுமாறு பிருந்தாவனவாசிகளுக்கு கூறியபோது வெகுண்ட இந்திரன் பிருந்தாவனத்தில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினான். அப்பொழுது பிருந்தாவன மக்களை காக்கும் பொருட்டு கிருஷ்ணன் கோவர்த்தனமலையை தன் சுண்டுவிரலால் உயர்த்தி அனைத்து ஜீவராசிகளை காப்பாற்றி இந்திரனுக்கு பாடம் கற்பித்தார். இந்தநாள் தீபாவளி நான்காம் நாள் என்று கூறப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் பகவான் கிருஷ்ணருக்கு பல்வேறு வகையான உணவு வகைகளை வழங்கி, அவற்றை பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.
தீபாவளியின் ஐந்தாவது நாள் பிரத்ரு த்விதியா அல்லது பாய் தூஜ் என்ற சடங்கு கொண்டாடப்படுகிறது, இன்றைய நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் மீது நெற்றியில் திலகம் வைக்கும் சடங்கைச் செய்கிறார்கள், அதைத் தொடர்ந்து ஒரு விருந்து வைக்கிறார்கள், பதிலுக்கு, சகோதரர்கள், தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகளை வழங்கி அவர்களைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறார்கள்.
ஆக… தீபாவளியின் ஐந்து நாட்களும் ஆன்மீக நினைவுகளும், பண்டிகைகளாலும் நிறைந்துள்ளன. ஆகவே தீபாவளியின் ஐந்து நாட்களையும் ஆன்மிக அறிவு பக்தி மற்றும் சரணாகதியால் நம் வாழ்க்கையை ஒளிரச்செய்து கடவுளின் அனுக்கிரகத்தை பெறுவோம்.