சடலங்களுடன் வாழும் மக்கள்! எங்கே இந்த விநோதம்?

இறப்பை மக்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த விநோதம் எங்கே நடக்கிறது?
People dressing up their ancestors-Toraja Death ritual
People dressing up their ancestors-Toraja Death ritual @BlogTolkien
Published on

எகிப்தில் மம்மிகள் பற்றி கேள்வி பட்டிருப்போம். இறந்த உடல்களை பதப்படுத்தி காலத்துக்கும் பாதுகாக்கப்படுவதுதான் மம்மிகள். இந்த மம்மிகள்தான் பிரமீடுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் சில மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் , நிகழ்காலத்திலும் தங்கள் இனத்தில் யாரேனும் இறந்தால் உடலை அடைக்கம் செய்யாமல் பாதுகாத்து வரும் பழங்குடியின மக்கள் இந்தோனேஷியாவில் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் டானா டோராஜா என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு, டோராஜா பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே, நீங்கள் சென்றால் இறந்த பதப்படுத்தப்பட்ட சடலங்களுடன் மக்கள் இயற்கையாக வாழ்வதை நாம் பார்க்க முடியும். உலகிலேயே இறப்பை கொண்டாட்டமாகப் பார்க்கும் மக்கள் இவர்கள் மட்டும்தான். டோராஜா மக்கள் தங்கள் இனத்தில் யாராவது இறந்தால், உடலைப் பதப்படுத்தி தங்கள் வீடுகளிலேயே வைத்து கொள்கின்றனர். பண்டிகைக் காலங்களில் இறந்தவர்களுக்குப் புத்தாடை அணிவித்து அழகு பார்க்கிறார்கள். அவற்றுடன் பேசுகிறார்கள். சாப்பிடவில்லையென்றாலும், பண்டிகை காலங்களில் சடலங்களை வெளியே எடுத்து உணவு கொடுத்து மகிழ்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்கு தங்கள் மூதாதையரை அறிமுகம் செய்து பெருமிதம் கொள்கிறார்கள். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. இந்த சடலங்களை இறுதிச்சடங்கு செய்ய இரண்டு வருட காலம் வரை பிடிக்குமாம். என்னவென்றால், இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யவே பல லட்சங்கள் வரை டோராஜா மக்கள் செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

Mummified body of old Man
Mummified body of old Man@BlogTolkien

ஏனெனில், அங்கே இறுதிச் சடங்கு பெரிய திருவிழாவாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை சடலத்தை வைத்து விழா எடுக்கிறார்கள். வீட்டுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். நாடு முழுவதுமுள்ள தங்கள் இன மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கான எருமைகள் மற்றும் பன்றிகளைப் பலியிட்டு சுடச்சுட ஐந்து நாட்களும் விருந்தளிக்க வேண்டும். ஐந்தாவது நாள் கொண்டாட்டத்தின் இறுதியாக, இறந்தவர்களுக்காக புதிய குடிசை வீடு கட்டி, அதில் சடலத்தை வைத்து எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்கிறார்கள்.

இதன் காரணமாக, தங்கள் வீட்டில் இறப்பு நிகழ்ந்தவுடன் அம்மக்கள் பணத்தை சேகரிக்கத் தொடங்குகிறார்கள். எப்போது, தேவையான பணம் சேருகிறதோ, அப்போதுதான் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்து உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கு ஓரிரு ஆண்டுகள் பிடிக்கலாம். சில சமயங்களில் செலவைக் குறைப்பதற்காக, வீட்டில் வயது முதிர்ந்த தந்தை இறந்து விட்டால், தாய் இறக்கும் வரை காத்திருக்கிறார்கள். பின்னர், இருவர் உடலையும் பதப்படுத்தி இறுதிச்சடங்கு செய்கிறார்கள்.

Mummified corpse of a couple
Mummified corpse of a couple@BlogTolkien

டானா டோராஜா பகுதி மலைகள் நிறைந்த அழகிய பகுதியாகும். இதனால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு மலையேற்றத்தில் ஈடுபடுவது உண்டு. மலையேற்றம் செய்பவர்கள் வெறும் படங்களை எடுப்பதற்காக மட்டும் அங்கு செல்வதில்லை. உள்ளூர் கலாச்சாரத்தைக் கண்டறியவும் இது போன்ற விநோதமான தனித்துவமான இறுதிச் சடங்குகளை காணவும்தான் அங்கு செல்கிறார்கள். சமீபத்தில் சரண்யா ஐயர் என்ற Travel Vlogger இந்தப் பகுதிக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த சடலங்களை எல்லாம் பார்த்து வியந்து போய் வீடியோ எடுத்தார். அந்த மக்களும் சடலங்களை குழந்தை போல தூக்கி வீடியோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, டோராஜா பழங்குடியின மக்களின் விசித்திரமான இறுதிச்சடங்கு பற்றி மக்கள் பேச தொடங்கினர்.

இந்தோனேஷியாவில் மொத்தமாக டோராஜா இன மக்கள் 11 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 4.50 லட்சம் பேர் டானா டோராஜா மலை பகுதியில் வசிக்கின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com