நோபல் அமைதி பரிசு: யார் இந்த மரியா கொரினா மச்சோடா?

கடந்த 14 மாதங்களாக மரியா, தலைமறைவாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரியா கொரினா மச்சோடா
மரியா கொரினா மச்சோடா
Published on

இந்த ஆண்டுக்காக நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த போராளி மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டி பல ஆண்டுகாலமாக போரடி வந்ததற்காக, அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் என் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதில், சமாதானத்துக்கு வழங்கப்படும் நோபல் பரிசுதான் உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். நார்வே நாட்டை சேர்ந்த குழுதான் நோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்து அறிவிக்கும். கடந்த ஜனவரி 31ம் தேதி நோபல் பரிசுக்கு 229 பேர் பரிந்துரை செய்திருந்தனர்.

அவர்களில் இருந்து இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் இவர் நடத்திய போராட்டங்கள் அனேகம். கடந்த 14 மாதங்களாக இவர், தலைமறைவாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'பல போர்களை நிறுத்தியிருக்கிறேன். அமைதிக்கான நோபல் பரிசு பெற நான்தான் தகுதியானவன். எதுவும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில மாதங்களாகப் புலம்பி கொண்டிருந்தார். இப்போது, நோபல் பரிசுக் குழுவின் முடிவு டிரம்புக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Maria Corina Machado
Maria Corina Machadox

சரி... யார் இந்த மரியா கொரினா?

1967ம் ஆண்டு பிறந்த மரியா கொரினா கடந்த 20 ஆண்டுகளாக வெனிசுலா நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடி வந்தவர். அடிப்படையில் இன்ஜினியரிங் பட்டதாரியான மரியா 2013ம் ஆண்டு "வென்டே வெனிசுலா" என்கிற பெயரில் தனியாக அரசியல் கட்சியை தொடங்கினார். 2010 முதல் 2015 ம் ஆண்டு வரை வெனிசூலா நாட்டின் எம்.பியாகவும் இருந்தார்.

கடந்த 2017 ம் ஆண்டு அவர் “Soy Venezuela” என்ற அரசியல் கூட்டணியைத் தொடங்க உதவினார் . இது வெனிசுலாவின் பல்வேறு அரசியல் பிரிவுகளை இணைத்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒருமித்த சக்தியாக இயங்கத் தொடங்கியது. 2023 ம் ஆண்டு மரியா ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார். மக்களிடையே மிகுந்த ஆதரவு கிடைத்தது. ஆனால் அரசு அவரைத் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது

இதையடுத்து வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கோன்சோலஸ் என்பவரை வேட்பாளராக நிறுத்தின. இவருக்கு ஆதரவாக மரியா தீவிர பிரசாரம் செய்தார். எனினும், தேர்தல் முடிவுகளில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து , வெனிசுலா அரசு மரியாவைக் கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்டவர் ஜாமீனில் வெளி வந்து தலைமறைவாகி விட்டார். ஆனால், அவர் எந்தக் காலத்திலும் தனது தாய்நாட்டை விட்டு வெளியேறவில்லை. இதன் காரணமாகவே, அவரை "இரும்புப் பெண்மணி" என்று அழைக்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு டிரம்புக்கு வழங்கப்படவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த ஜனவரி 31ம் தேதியே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான நாமினேசன் முடிந்து விட்டது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற 10 நாட்களில் நாமினேசன் முடிவுக்கு வந்திருந்தது.

இந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான ராஜ்யரீதியான உறவுகள் உருவாக டிரம்ப் எடுத்த முயற்சிகளை மேற்கோள் காட்டி, நியூயார்க் எம்.பி கிளாடியா டென்னி மட்டுமே நோபல் குழுவுக்கு டிரம்ப் பற்றி தகுதியுள்ள ஒரு நாமினேசன் செய்திருந்ததாக சொல்கிறார்கள்.

இதனால், இந்த ஆண்டு நோபல் பரிசு மிஸ்ஸானாலும் , அடுத்த ஆண்டு டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, நோபல் பரிசு குறித்து நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசிய டிரம்ப், 'மரியா என்னை போனில் அழைத்தார் 'உங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நோபல் பரிசை ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால், நீங்கள் உண்மையிலேயே அதற்குத் தகுதியானவர்' என்று தன்னிடத்தில் கூறியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நல்ல விஷயம்' என்று டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

Puthuyugam
www.puthuyugam.com