AI நாம் கேட்டதைத் தேடி எடுத்துக்கொடுக்கிறது, ஏதாவது புரியவில்லை என்று சொன்னால், உட்கார வைத்து விளக்கிச் சொல்கிறது. படம் வரைந்து தருகிறது, ஆடியோ உருவாக்கித் தருகிறது, விடியோக்களையும் உருவாக்கித் தருகிறது. AI நுட்பத்தில் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு அம்சம் வைரலானால் நாமும் ஆவலோடு அதை முயன்று பார்க்கத்தான் செய்கிறோம்.
ஆனாலும், AI ஐ கூகுள் போல பயன்படுத்தாதீர்கள், பொம்மை போல பயன்படுத்தாதீர்கள் என்று சிலர் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். அப்படியானால், அவற்றை வைத்துக்கொண்டு நாம் என்னதான் செய்வதாம்?
அவற்றை விளக்கிச் சொல்ல, இதுவொன்றும் டெக்னிகல் கட்டுரையுமல்ல, நானும் ஒரு கணினி விற்பன்னனுமில்லை! உங்கள் தொழிலில் AI ஐ பயன்படுத்தும் வழியிருக்கிறதா, உங்கள் புரடக்டிவிட்டியை மேம்படுத்திக்கொள்ள AI உதவுமா என்று பாருங்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்படியானால், ஒரு எழுத்தாளனான எனக்கு, AI தமிழில் ஏதாவது கதை எழுதுமா என்று சோதித்துப் பார்க்கலாமே என்று தோன்றிற்று. அந்த முயற்சியில் என்ன நடந்தது என்பது கீழே:
Gemini, Perplexity, ChatGPT மூன்றிடமும் சில குறிப்புகளைக் கொடுத்து கதை எழுதச் சொன்னேன். எனது குறிப்பு இதுதான்:
“ஒருத்தன் தன் மனைவியைக் கொலை செய்ய தன் நண்பனையே பிளாக்மெயில் செய்து சம்மதிக்க வைக்கிறான். ஆனால், எதிர்பாராத விதமாக அனைத்தும் சொதப்பலாகி, அவன் நினைக்காத சம்பவங்கள் எல்லாம் நடந்துவிடுகின்றன. இதை வைத்து நூறு வார்த்தைகளுக்குள் ஒரு திரில்லர் கதை எழுதிக்கொடு.”
ராமின் கைகள் நடுங்கின, அவன் நண்பன் அசோக் அவனது மனைவியைக் கொல்ல வேண்டும். ஆனால், திட்டம் மாறியது. ராமின் மனைவி ஜான்வி திட்டமிட்டதை விட சீக்கிரமாக வீடு திரும்பினாள். அசோக் நிலைமையை உணர்ந்து, அவளைக்
கொல்லாமல் அங்கிருந்து தப்பித்துவிட்டான். ராம் ஜான்வியை அணுகி, "அசோக் உன் பணத்தைத் திருடத்தான் வந்தான்" என்று கூறி சமாளித்தான்.
அதை நம்பி ஜான்வி, அசோக்கிற்கு போன் செய்து அவனை எச்சரிக்க, அசோக் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டான். "ராம் உன்னைக் கொல்லத்தான் என்னைக் கூப்பிட்டான். அவனது நோக்கம் பணம் அல்ல, உனது உயிர்தான்" என்று கூறி உண்மையை உடைத்தான். இதைக் கேட்டு அதிர்ந்த ஜான்வி, ராமிடம் உண்மையைச் சொல்லும்படி வற்புறுத்தினாள். ராம் மாட்டிக்கொண்டான்! கொலைக்கு திட்டம் தீட்டியவன், தான் அசோக்கிடம் அசிங்கமான ரகசியத்தை வைத்து பிளாக்மெயில் செய்ததால்தான் அவன் இதைச் செய்தான் என்றும், ஆனால், தற்போது அவனின் இந்த செயலால், என் ரகசியம் வெளியில் தெரிந்துவிட்டது என்றும் அதிர்ந்தான்.
இப்போது அசோக்கிற்கு தேவை ராமின் ரகசியத்தை ஜான்வியிடம் கூறுவது அல்ல. அவனுக்குத் தேவை ராமின் பணம்தான். அசோக் ராமிடம், "எனக்கு என் கௌரவம்
முக்கியம். உன்னைப் போல் நான் ஆகிவிடக்கூடாது. எனக்குத் தேவை பணம் மட்டுமே. உனக்கு தேவை ரகசியம் வெளியில் தெரியாமல் இருப்பது. இரண்டும் ஒரே நேரத்திற்கு நடக்கும். இது உன் கடைசி வாய்ப்பு. இல்லையென்றால், நான் உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும்." என்று கூறி பணம் கேட்டான். ராம்
சம்மதித்தான், அதனால் அவனுடைய ஆச்சரியமான ரகசியம் ஜான்விக்கு இன்னும்தெரியவில்லை.
அவன் மனைவியை அழிக்கத் திட்டமிடுகிறான். நண்பனை பிளாக்மெயில் செய்து கொலை செய்ய வைக்கிறான். இரவு நேரம், நண்பன் வீட்டுக்குள் நுழைகிறான். ஆனால் மனைவி அங்கே இல்லாமல், கையில் இரத்தத்துடன் அவனே தரையில்
விழுந்திருக்கிறான். யாரோ முன்பே உண்மையை அறிந்து, இருவரையும் சிக்கவைக்க காத்திருந்தார். கதவைத் திறந்த போலீஸ் அதிகாரி அவனை நோக்கி சிரித்தார். “உன் திட்டம் நம்ம நடுவே வந்து சிக்கிச்சு!”
ரவி, தனது மனைவியைக் கொலை செய்ய வேண்டுமென முடிவு செய்கிறான். தனியாக துணிவு இல்லாததால், பழைய குற்றச்செயலை வெளிப்படுத்துவேன் என மிரட்டி நண்பன் அருணை சம்மதிக்க வைக்கிறான். இரவில் திட்டமிட்டபடி அருண் வீட்டுக்குள் நுழைகிறான். ஆனால் மனைவியின் அறையில் அவள் இல்லை, பதிலாக ரவி தானே குத்தப்பட்டு இறந்தபடி கிடக்கிறான். குழப்பத்தில் சிக்கிய அருண் போலீசால் பிடிக்கப்படுகிறான். சாட்சி, சதியின் சிக்கல், எல்லாம் அவனையே குற்றவாளியாக்குகிறது. உண்மையில் ரவியின் மனைவி முன்பே உணர்ந்து, தற்காப்பிற்காக எல்லாவற்றையும் திருப்பிவிட்டாள். திட்டமிட்டவன் சிக்கிக்கொண்டான்.
ChatGPT யும், Perplexity யும் கதை எழுத ஆர்வமில்லாத ஓர் எழுத்தாளனைப் போல 50 வார்த்தைகளுக்குள் முடித்துக்கொண்டன. இரண்டுமே நான் சொன்னதையே
திரும்பச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணுக்குப் பதிலாக கொலையைத் திட்டமிட்டவன் இறந்துபோனான் என்றும், கொலை செய்ய வந்தவன் போலீசாரிடம் மாட்டிக்கொண்டான் எனவும் ஒரே மாதிரி எழுதியிருக்கின்றன. Perplexity யாரோ
மாட்டிவிட்டார்கள் என்கிறது, ChatGPT டிபிகல் தமிழ் சினிமா மாதிரி அந்தப் பெண்ணே திட்டத்தை உணர்ந்துகொண்டு திசை திருப்பிவிட்டாள் என்கிறது
தரப்பட்ட வார்த்தைகளைத் தாண்டி ஆர்வத்தோடு 150க்கும் மேற்பட்ட வார்த்தைகளில் கதை எழுதினாலும் கேரக்டர்கள், பெயர்கள், சூழல், அவர்களது உணர்ச்சிகள், வசனங்கள் என தெளிவாக எழுத ஆரம்பித்தது Geminiதான். ஜெமினியின் தமிழ், ஓர் எழுத்தாளனை (ஓரளவு) ஒத்ததைப் போலிருக்கிறது. ஆனால், பெரிய குழப்பமாக இரண்டாவது பாராவில் சொன்ன கதையை அதுவே புரிந்துகொள்ளாமல், மூன்றாவது பாராவில் வேறொரு கதையை எழுதி வைத்திருக்கிறது. திருத்தச் சொல்லியிருந்தால், சாரி சொல்லிவிட்டு நன்றாகவே திருத்தித் தந்திருக்கும் என நினைக்கிறேன். மேலும் தொடர் பிராம்டுகளால் ஒரு நல்ல கதையை உருவாக்கவும் முடிந்திருக்கும் எனவும் நம்புகிறேன்.
இப்போதே, பிராம்ப்டுகள் மூலமாக சினிமா உருவாக்கும் முயற்சிகளில் பலரும் களமிறங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. வருங்காலத்தில் இது இன்னும் மேம்படும் என நம்பலாம். எழுத்துலகிலும் சிறுகதை, நாவல் என AI கால் பதிக்கும் நாள் வெகுதூரமில்லை என்று தெரிகிறது.