ஆன்லைன் மோசடிகள்: சில எச்சரிக்கைகள்!

இது போன்ற விசயங்களெல்லாம் எங்கோ, யாருக்கோ நடப்பது என்பதாக ஒரு மாயை நமக்கிருக்கிறது. கீழ்வரும் தகவல்களை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், எதிர்பாராத இழப்புகளிலிருந்து நம்மைக் காக்க இவை உதவலாம்.
Online Fraud
Online Fraud
Published on

சமயங்களில் சாஃப்ட்வேர் துறையில் பணி செய்பவர்களே கூட ஆன்லைன் மோசடிகளில் சிக்கி, லட்சங்களை இழப்பதைக் கேள்விப்படும்போது வியப்பாகவே இருக்கும். இது போன்ற விசயங்களெல்லாம் எங்கோ, யாருக்கோ நடப்பது என்பதாக ஒரு மாயை நமக்கிருக்கிறது. சீக்கிரமே அந்தச் சிக்கல் நமக்கும் நேரக்கூடும். ஆகவே முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. கீழ்வரும் தகவல்களை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், எதிர்பாராத இழப்புகளிலிருந்து நம்மைக் காக்க இவை உதவலாம்.

இணையத்தில் நடக்கும் பல விதமான மோசடிகளுள் முக்கியமான சில:

1.     ஃபிஷிங் (Phishing): வங்கிகள், சமூக வலைத்தளங்கள் அல்லது வேறு நிறுவனங்கள் போல மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்பி, உங்கள் ரகசியத் தகவல்களைத் திருடும் முயற்சி. உதாரணமாக, உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது, அதை சரிசெய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யுங்கள் என்று போலி மின்னஞ்சல்கள் வரலாம். சந்தேகத்துக்குரிய, அடையாளமற்ற மின்னஞ்சல்களைக் கிளிக் செய்யாதீர்கள். பெருநிறுவன மின்னஞ்சல்களாகத் தோற்றமளிக்கும் மெயில்களில் அவற்றின் URL-லின் துல்லியத்தை முதலில் சரிபாருங்கள்.

  1. மால்வேர் (Malware): தீங்கிழைக்கும் மென்பொருட்கள் (வைரஸ், ஸ்பைவேர்) உங்கள் கணினியிலோ அல்லது மொபைலிலோ நுழைந்து, உங்கள் தகவல்களைத் திருடுவது அல்லது உங்கள் சாதனத்தை முடக்குவது. போலி மென்பொருட்களைப் பதிவிறக்கும்போது இது நடக்கலாம். சரியான நிறுவனங்களின் மென்பொருட்களை மட்டுமே தரவிறக்கம் செய்யுங்கள். மொபைல் செயலிகளை, கூகுள் ஸ்டோர் போன்ற நம்கத்தன்மை உள்ள இடத்திலிருந்து மட்டுமே தரவிறக்கம் செய்யுங்கள்.

  2. போலி வேலைவாய்ப்பு (Fake Job Offers): அதிக சம்பளம் தரும் வேலை இருப்பதாகக் கூறி, அதை வாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலில் செலுத்தும்படி கேட்பது. இதில் துளியும் உண்மையிருக்காது.

  3. போலிப் பரிசு (Prize Scams): நீங்கள் ஒரு பெரிய தொகையை அல்லது பரிசை வென்றுள்ளதாகக் கூறி, அதைப் பெறுவதற்காக ஒரு சிறிய தொகையை கட்டணமாய் செலுத்தும்படி கேட்பது. இவற்றை நம்பாதீர்கள், உடனடியாக இந்த நம்பர்களை பிளாக் செய்துவிடுங்கள்.

online hacker
online hacker

இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு சில முக்கிய வழிமுறைகள்:

  • பாஸ்வேர்டுகள் (Passwords): எந்த வலைத்தளமாயினும், செயலியாயினும் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துங்கள். எளிதில் யூகிக்க முடியாத பெரிய, சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறியீடுகள் சேர்ந்த கலவையைப் பயன்படுத்துங்கள். ஒரே பாஸ்வேர்டை பல தளங்களில் பயன்படுத்தாதீர்கள்.

  • இரண்டு-நிலை சரிபார்ப்பு (Two-Factor Authentication - 2FA): உங்களின் முக்கியமான கணக்குகளுக்கு இந்த பாதுகாப்பைச் செயல்படுத்துங்கள். இதன்மூலம், பாஸ்வேர்ட் தெரிந்தாலும், உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) அல்லது வேறொரு சரிபார்ப்பு குறியீடு இல்லாமல் ஸ்கேமர்களால் உள்நுழைய முடியாது.

  • மென்பொருள் அப்டேட் (Software Updates): உங்கள் கணினி மற்றும் மொபைலில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் செயலிகளை எப்போதும் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்யுங்கள். அப்டேட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.

  • வைரஸ் பாதுகாப்பு (Antivirus Software): கணினிகளில் சரியான வைரஸ் பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்தவும். இது மால்வேரைக் கண்டறிந்து தடுக்கும்.

  • தனித்தகவல்கள்: சமூக வலைத்தளங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களான முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி போன்றவற்றை அவசியமில்லாது பொதுவில் பகிர வேண்டாம்.

  • பொது வைஃபை (Public Wi-Fi): பொது வைஃபை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். முக்கியமான பரிவர்த்தனைகளை (பேங்கிங்) பொது வைஃபை நெட்வொர்க்கில் செய்ய வேண்டாம்.

  • மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள்: உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளைச் சரிபார்த்து, அதில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யுங்கள்.

  • போலியான வலைத்தளங்கள்: நீங்கள் எந்தவொரு ஆன்லைன் ஷாப்பிங் அல்லது வங்கி இணையத்தளத்திற்குச் சென்றாலும், அதன் URL-ஐ (இணைய முகவரி) சரிபார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும், ஒரு பாதுகாப்பான இணையதளத்தின் முகவரி 'https' என்று தொடங்கும்.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும்.

Puthuyugam
www.puthuyugam.com