

சிறிய குரங்கு, ஒரு ஓராங்குட்டன் பொம்மையைக் கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காட்சி மக்களை மிகுந்த வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது. காண இது ஒரு அழகான காட்சியாகத் தெரிந்தாலும், இதற்குப் பின்னால் பெரும் சோகம் மறைந்திருக்கிறது.
ஜப்பானில் உள்ள இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில், 'பஞ்ச்' என்ற 6 மாத குரங்குக்குட்டி உள்ளது. பிறந்த சிறிது நேரத்திலேயே தாயால் ஏதோ ஒரு காரணத்துக்காக கைவிடப்பட்டது பஞ்ச். கைவிடப்பட்டது என்றால் தாய்க்குரங்கு தன் கிட்டே வரவே விடவில்லை, இந்தக் குட்டியை. சில விலங்குகள் அப்படிச் செய்யும். இதைக் கண்ட உயிரியல் பூங்கா ஊழியர்களால்ம், இக்குரங்குக் குட்டி பராமரிக்கப்பட்டு வந்தது.
பின்னர், சக குரங்குகளுடன் வாழ்வதற்காக அது மற்றொரு உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. அங்கு, மற்றொரு தாய்க்குரங்கு அதைத் தத்தெடுத்துக் கொள்ளும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தன் இனத்தை சேர்ந்த மற்ற குரங்குகளுடன் பழகுவது பஞ்ச்சுக்கு சவாலாக இருந்தது. கூட்டத்தின் விதி முறைகள் தெரியாமல் பஞ்ச் வலம் வந்து கொண்டிருந்தது. சில பெரிய குரங்குகள் பஞ்சைத் துன்புறுத்தின. கூட்டத்தில் சேர விடாமல் தடுத்தன. இதனால், மற்ற குரங்குகளுடன் பழகுவது பஞ்சுக்கு சவாலாகவே இருந்தது.
இந்தத் தருணத்தில், பஞ்ச்சிற்கு, பூங்கா ஊழியர் ஒருவர் ஒரு ஒராங்குட்டன் பொம்மையை பரிசாக கொடுத்தார். தற்போது, அந்த பொம்மைதான் பஞ்ச்சின் உலகமாக மாறி விட்டது.
பஞ்ச் எங்கு சென்றாலும் அந்த பொம்மையை தன்னுடனையே தூக்கிச் செல்கிறது. தூங்கும்போது அதைக் கட்டியணைத்துக் கொள்கிறது; பயந்தால் அதனை இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறது. மற்ற குரங்குகளுடன் பழகத் தொடங்கினாலும், ஒரு வித பாதுகாப்பு உணர்வுக்காக அந்த பொம்மையை எப்போதும் தன் அருகிலேயே வைத்து கொண்டு வாழ்கிறது.
குழந்தைகள் தூங்கும்போது ஒரு குறிப்பிட்ட போர்வையையோ அல்லது பொம்மையையோ பக்கத்தில் வைத்திருப்பதை பார்த்திருப்போம். அதை கட்டிபிடித்துக் கொண்டோ அல்லது மேலே போட்டுக் கொண்டோ உறங்கும். அந்த துணியைப் பறித்தால் அழத் தொடங்கி விடும். தன்னை அறியாமல் உருவான ஒரு பாதுகாப்பு உணர்வுதான் இதற்கு காரணம். அப்படித்தான், ஓராங்குட்டன் பொம்மை பஞ்சிற்கு இப்போது ஆறுதலாக அமைந்துள்ளது.
பொதுவாக , குரங்குகள் தங்கள் குட்டிகள் மீது மிகுந்த பாசமானவை .அவ்வளவு எளிதாக தங்கள் குட்டிகளை கைவிட்டு விடாது. ஆனாலும், முதல் முறையாக குட்டியைப் பெற்றெடுக்கும் தாய்க்குரங்கு எப்போதாவது, குட்டியை கை விடுவது உண்டு. இதுதான், பஞ்ச் விஷயத்தில் நடந்துள்ளது. பிறக்கும் போது 500 கிராம் எடை மட்டுமே பஞ்ச் இருந்துள்ளது. அதிக மன அழுத்தம் காரணமாக தனது குட்டியைப்ப் பராமரிக்க முடியாமல் தாய்குரங்கு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தாய் கைவிடப்பட்ட நிலையில், மற்ற குரங்குகளுடன் சேர பஞ்ச் முயன்றாலும் முடியவில்லை. பெரிய குரங்குகள் அதனை விரட்டியடித்து விடுகின்றன. அல்லது தள்ளிவிட்டு விடுகின்றன. இதனால், பஞ்ச் மீண்டும் தனது பொம்மைத் தாயுடன் கட்டியணைத்து விளையாட வேண்டிய சூழலில்தான் வாழ்ந்து வருகிறது. இந்தக் காட்சியை கண்ட பலரும் உருக்கத்துடன் 'அவன் ஒரு குழந்தை. அந்த ... அழகான சின்னப் பையனைப் பாரு. அவன் ரொம்ப தனிமையா இருக்கான். தைரியமா இரு. குட்டிப் பஞ்ச், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக... ' என பஞ்சுக்கு ஆதரவு கரங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
தற்போது பஞ்ச் 2 கிலோ எடை உள்ளது. அது, மற்ற குரங்குகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதாகவே அதனை கண்காணித்து வரும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் இன்னொரு விஷயம்... மற்ற குரங்குகள் புறக்கணித்தாலும் கண்காணிப்பு ஊழியர்களில் ஒருவரைக் கண்டாலே ஓடித் தொத்திக்கொள்கிறது பஞ்ச். அவர் போகுமிடமெல்லாம் அவர் மீது தவ்விப் பிடித்துக்கொண்டே செல்கிறது. இதுவும் வெளியாகி 'அப்பாடா...' என்று பஞ்சின் 'ரசிகர்கள்' மகிழ்ச்சி அடைகின்றனர்.
பஞ்சின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால், அந்த பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. பூங்காவுக்கு வரும் அனைவரும் பஞ்சை காணவே ஓடோடி செல்கிறார்களாம்.