கொல்கத்தாவையும் கால்பந்து ஆட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதைப் போலவே கொல்கத்தாவையும் டிராம் வண்டியையும் பிரித்துவிட முடியாது. தற்போது, ஆசியாவில் டிராம் ஓடும் ஒரே நகரம் கொல்கத்தா மட்டுமே. 1873ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி கொல்கத்தாவில் முதன் முதலாக டிராம் ஓட தொடங்கியது. முதலில், குதிரைகளே இவற்றை இழுத்து சென்றன. 10 ஆண்டுகளுக்கு பிறகு நீராவி டிராம்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1902ம் ஆண்டு கொல்கத்தாவில் டிராம் சேவை முற்றிலும் மின்மயமாக்கப்பட்டது. மின்சார டிராம் சேவை கொண்ட முதல் ஆசிய நகரம் என்ற பெருமையும் கொல்கத்தாவுக்குக் (அப்போது கல்கத்தா) கிடைத்தது. 'கல்கத்தா டிராம்வேஸ்' என்பது இந்த நிறுவனத்தின் பெயராகும். சுதந்திரத்துக்குப் பிறகும், இந்த நிறுவனம் லண்டனில் இருந்து இயங்கிக் கொண்டுதான் இருந்தது. ஹவுராவை தலைமையிடமாகக்க்ச் கொண்ட பர்ன் ஸ்டான்டர்ட், ஜெஸ்ஸாக் அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள் டிராம் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.
பல வங்கமொழி படங்களில் டிராம்கள் இடம் பெற்றிருக்கும். சத்யஜித்ரே இயக்கத்தில் 1963ம் ஆண்டு வெளியான 'மகாநகர் 'படத்தின் முதல் காட்சியே டிராம் வண்டியில் இருந்துதான் தொடங்கும். மலையாளப் படங்களில் சென்னையைக் காட்ட வேண்டும் என்றால் சென்ட்ரல் ஸ்டேஷனையும், எல்.ஐ.சி பில்டிங்கையும் கத்திப்பாரா மேம்பாலத்தையும் காட்டுவார்களல்லவா.. அதேபோல , திரைப்படங்களில் கொல்கத்தாவை காட்டவேண்டும் என்றால் நகரில் டிராம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் காட்சிதான் காட்டுவார்கள். அப்படி, கொல்கத்தா மக்களுடன் பிணைந்திருந்தவை டிராம் வண்டிகள்.
ஒரு காலத்தில் கொல்கத்தா முழுவதும் 37 வழித்தடங்களில் இயங்கிய டிராம்கள் வேகம் குறைவு , பராமரிப்புச் செலவுகள் காரணமாக படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது. தற்போது எஸ்பிளனேட் - மைதான் மற்றும் ஷியாம்பஜார் ஆகியே இரு வழித்தடங்களில் மட்டுமே டிராம் சேவை பயன்பாட்டில் உள்ளது.
கொல்கத்தா டிராம்களில் 'கீதாஞ்சலி' என்ற பெயர் கொண்ட டிராம் மிகவும் பாப்புலர். இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில் நானாபோகுர் மையத்தில் இது கட்டப்பட்டது. ஜப்பான் குண்டு போட்டு கொண்டிருந்த காலத்தில் , மெழுகுவத்தி வெளிச்சத்தில் இந்த டிராம் உருவாக்கப்பட்டது. இது மரத்தால் செய்யப்பட்ட டிராம் என்பதும் கூடுதல் தகவல். 1980ம் ஆண்டு வரை, இந்த டிராம் சேவையில் இருந்தது. பின்னர், டெப்போக்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது டிராம் நிறுவனத்தில் மட்டும் 7 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் டிராம் அறிமுகப்படுத்த தினமான பிப்ரவரி 24ம் தேதி கீதாஞ்சலி டிராம் , கரியாகட் டிராம் டெப்போவில் இருந்து ஷியாம்பஜார் வரை சிறப்புப் பயணமாக இயக்கப்பட்டது. மக்கள் இந்த டிராமில் ஏறி பழைய நினைவுகளை அசை போட்டபடி பயணித்தனர். கொல்கத்தா டிராம் பயணிகள் நல சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கீதாஞ்சலியில் பயணித்து குதூகலித்தனர்.
தற்போது, உலகில் மெல்பர்ன் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் உலகின் பழமையான டிராம் சேவைகளைக் கொண்டுள்ளன. மெல்பர்னிலும் டிராம் சேவையை முற்றிலும் நிறுத்த அரசு முயன்ற போது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சூரியசக்தியை கொண்டு அங்கு டிராம்கள் இயக்கப்படுகின்றன. டெல்லி, மும்பை ஆகிய இரண்டு நகரங்களிலும் ஒரு காலத்தில் டிராம் சேவைகள் இருந்தன . இந்த இரண்டு நகரங்களுமே டிராம் சேவைகளை அகற்றிவிட்டன. டிராம் சேவையை தக்க வைத்திருக்கும் ஒரே இந்திய நகரம் கொல்கத்தா தான். எனவே, இது அந்த நகரின் அடையாளமாகவும் மாறி போனதில் வியப்பில்லை.கொல்கத்தாவில் டிராம் சேவையை முற்றிலும் நிறுத்த டிராம் பயணிகள் நலச்சங்க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.