கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் ஆகாசா விமான நிறுவனம் நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை உள்நாட்டு விமானங்களில் பயணம் செல்ல அனுமதித்தது. 'பெட்ஸ் ஆன் ஆகாசா' (Pets of Akasa) என்ற பெயரில் இந்த சேவை தொடங்கப்பட்டது. 10 கிலோ வரை எடையுள்ள நாய்கள் கேபினில் உரிமையாளர்களுடனேயே பயணிக்கலாம். அதற்கு மேற்பட்ட எடையுள்ளவை சரக்கு பிரிவில் வைத்து கொண்டு செல்ல முடியும். தடுப்பூசி சான்றிதழ், Fit to Fly போன்ற சான்றிதழ்கள் பயணத்தின் போது அவசியம். பிறந்து 3 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட செல்லப்பிராணிகள் மட்டுமே விமானத்தில் அனுமதிக்கப்படும்.
மேலும் 24 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு விமானத்தில் பொதுவாக மூன்று செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படுகின்றன. கேபினில் இரண்டும், சரக்கு பிரிவில் ஒரு செல்லப்பிராணியும் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. செல்லப்பிராணிகள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் உணர வேண்டுமென்பதால், அதற்கென பிரத்யேக கூண்டில் (Carrier) வைக்கப்பட்டிருக்க வேண்டும் .
இந்த சேவை தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரம் செல்லப்பிராணிகள் ஆகாசா விமானத்தில் பயணம் செய்துள்ளன. இவற்றில் 60 சதவிகிதம் நாய்கள் 40 சதவிகிதம் பூனைகள். 93 சதவிகித உரிமையாளர்கள் கேபினில் தங்களுடனேயே தங்களது செல்லப்பிராணிகள் பயணிப்பதை விரும்புகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. 26 சதவிகித பெட் ஓனர்ஸ் தங்களது செல்லப்பிராணிகளுடன் ஒரு முறைக்கு மேல் பயணம் செய்துள்ளனர்.
குறிப்பாக, விழாக்காலமான அக்டோபர் மற்றும் டிசம்பர் மாத காலக்கட்டத்தில் விமானங்களில் பயணிக்கும் செல்லபிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டின் 35 சதவிகித செல்லப்பிராணிகளின் விமான பயணம் விழாக்காலங்களில் நடந்துள்ளது. சராசரி மாதங்களை விட விழாக்கால மாதங்களில் செல்லப்பிராணிகளின் விமான பயண எண்ணிக்கை 63 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இது விழாக் காலங்களில் தங்களுடன் தங்களது செல்லப்பிராணிகளும் இருக்க வேண்டும் என்கிற உரிமையாளர்களின் மனநிலையை காட்டுவதாக ஆகாசா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி - பெங்களூரு மார்க்கத்தில்தான் இந்தியாவிலேயே அதிகபட்சமாக - 13. 66 சதகிதம் என்கிற அளவில் - செல்லபிராணிகள் பயணம் செய்துள்ளன.
இந்தியாவில் 26 நகரங்களுக்கு ஆகாசா விமான நிறுவனம் செல்லபிராணிகளை கொண்டு செல்ல உதவுகிறது. விமானத்தில் செல்லப்பிராணிகள் பயணிக்கும் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால், கேபினில் 3 செல்லப்பிராணிகளை அனுமதிக்க ஆகாசா விமான நிறுவனம், தற்போது முடிவு செய்துள்ளது.
செல்லப்பிராணிகள் பயணம் நடைமுறை என்ன?
இந்தியாவில் 10 பேரில் 6 பேராவது செல்லப் பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் தங்களது செல்ல பிராணிகளுடன் வேறு நகரங்களுக்கோ அல்லது சொந்த ஊருக்கோ செல்ல சிரமத்தை சந்தித்து வந்தனர். இதற்கு, செல்லப்பிராணிகளின் பயணததுக்கான சிக்கலான நடைமுறைகள் மற்றும் அதிக செலவு பிடிப்பது காரணமாக சொல்லப்பட்டது. உள்நாட்டுக்குள் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல போக்குவரத்து செலவாக ரூ. 20,000- ரூ.60,000 வரை செலவாகும் என கூறப்படுகிறது. சர்வதேச பயணத்திற்கு ரூ. 2 லட்சத்தில் தொடங்கி ரூ.5 லட்சம் வரை ஆகலாம். செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல IATA சான்றிதழ் பெற்ற பெட்டிகள் தேவைப்படுகின்றன. விமானப் பயணத்தின் போது, செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக இந்தப் பெட்டியில்தான் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு பெட்டியின் விலை ரூ. 5,000 முதல் 40,000 வரை இருக்கலாம். செல்லப்பிராணியின் மருத்துவச் சான்றிதழகள் மற்றும் ரேபிஸ் சோதனை தடுப்பூசி விவரங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.