180 கி.மீ வேகம்.. சின்ன அசைவு கூட இல்லை.. வாவ் வந்தேபாரத்!

வந்தேபாரத் ரயில் இந்திய ரயில்வே துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தேபாரத் ரயில்
வந்தேபாரத் ரயில்
Published on

இந்தியாவில் பல அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில், Gatiman Express மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. அதேபோல தேஜஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் பாதை, இது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாகும். புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தேபாரத் ரயில்கள் கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னை எப்.சி.எப். ல் தயாரிக்கப்படும் இந்த ரயில்கள் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடியது. ஆனால், தண்டாவளத்தின் தன்மை மற்றும் வளைவுகள் காரணமாக வந்தேபாரத் ரயில்கள் அதன் முழு வேகத்தில் இயக்கப்படவில்லை. பெரும்பாலும் 130 கி.மீ வேகத்தில்தான் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இந்தியாவில் பல நகரங்களுக்கிடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு மக்களிடத்திலும் அமோக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில்தான், உறங்கும் வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறது. விரைவில், இந்த ரயில்களும் பயன்பாட்டில் வரவுள்ளன. படுக்கை வசதி, வைஃபை, செல்போன் சார்ஜர் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 16 பெட்டிகள் கொண்டிருக்கும். 11 ஏசி 3 டயர் கோச்சுகள் 4 ஏசி 2டயர் கோச்சுகள் ஒரு முதல்வகுப்பு கோச்சுகளுடன் ரயில் இயக்கப்படும். ஒரு ரயிலில் 1,128 பயணிகள் பயணிக்கமுடியும்.

முழு வேகத்தை எட்டிய வந்தேபாரத் ரயில்
முழு வேகத்தை எட்டிய வந்தேபாரத் ரயில்

இந்த நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரயில்களை அதன் முழு வேகமான 180 கி.மீ வேகத்தில் இயக்கி பார்க்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக , ராஜஸ்தான் மாநிலம் Rohalkhurd–Indragarh–Kota பாதை தேர்வு செய்யப்பட்டது. பயணிகள் இருந்தால் ரயில் எவ்வளவு எடை கொண்டிருக்குமோ அதே எடையுடனும், அதேபோல பயணிகள் இல்லாமலும் 180 கி.மீ வேகத்தில் இந்த பாதையில் வந்தேபாரத் இயக்கப்பட்டது . இந்த சமயத்தில், ரயிலின் லோகோ பைலட் முன்னர் 3 கிளாஸ்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அருகில், செல்போன் ஒன்றும் ரயிலின் வேகத்தை காட்டியது. சோதனை இயக்கத்தின் போது, வந்தேபாரத் ரயில் முழுவேகமான 180 கி.மீ வேகத்தை எட்டிய போதும், ரயிலில் எந்த அதிர்வும் ஏற்படவில்லை. கிளாஸ்களில் இருந்த தண்ணீரும் ஒரு சொட்டு கூட சிந்தவில்லை. இந்த சோதனையின் போது, எமர்ஜன்சி பிரேக்குகளும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இது தொடர்பான, காட்சிகளை வீடியோவாக எடுத்து இந்திய ரயில்வே வெளியிட்டது. இந்த வீடியோ வைரலானது. ஏராளமானோர் வீடியோவைப் பார்த்துவிட்டு வியந்து போனார்கள்.

ரயில் தேவையில்லாமல் குலுங்கல், அசைவுகள் ஏற்படாத வண்ணம் அதிநவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதே இதற்கு காரணம். இந்த ரயில் வெற்றிக்கரமாக இயக்கி பார்க்கப்பட்டாலும், இன்னும் சில தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து விஷயங்களும் சரி செய்யப்பட்ட பின்னரே, ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். தற்போது இந்தியாவில் ஓடும் அதிவே ரயில்களில் வந்தேபாரத், பயணிகளுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். மக்களும் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயிலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் கட்டமாக டெல்லியில் இருந்து அகமதாபாத், போபால், பாட்னா போன்ற நகரங்களுக்கு வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

Puthuyugam
www.puthuyugam.com