உலகக்கோப்பை கால்பந்து : ஈரான் புறக்கணித்தால், என்ன நடக்கும்? #worldcupfootball #iran

உலக ரேங்கில் 20வது இடத்திலுள்ள ஈரான் அணி இந்த முறை 'சி' பிரிவில் பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
Iran footballteam
Iran footballteam
Published on

போர் முற்றியுள்ள நிலையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து ஈரான் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய பிரிவில் இருந்து முதல் அணியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணி ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.

2026ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது. இந்த முறை 48 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன. உலக ரேங்கில் 20வது இடத்திலுள்ள ஈரான் அணி இந்த முறை 'சி' பிரிவில் பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. லீக் சுற்றில், ஈரான் அணி ஆடும் மூன்று போட்டிகளுமே அமெரிக்க மண்ணில்தான் நடைபெறுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரு ஆட்டங்களும் சீட்டல் நகரில் ஒரு ஆட்டமும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் , அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையே போர் முற்றியுள்ளது. இதனால்,உலகக் கோப்பை தொடரைப் புறக்கணிக்கும் முடிவில் ஈரான் இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக, ஈரானிய கால்பந்து சங்கத் தலைவர் மெஹ்தி தாஜ் கூறுகையில், '' அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நாடுகள் தாக்குதல் நடத்துவது உலகக் கோப்பை தொடருக்கு நல்ல சகுனமாக இல்லை. எங்கள் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்பு நிலைமையை மதிப்பாய்வு செய்வார்கள் . சமீப காலத்தில், தகுதிவாய்ந்த ஒரு அணி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மறுத்த சம்பவம் நடந்தது இல்லை. இந்த விஷயத்தில் முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது '' என்கிறார்.

இது தொடர்பாக , விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், ''இந்த உலகக் கோப்பையில் ஈரான் விளையாடியானலும் இல்லையென்றாலும் கவலைப்படப் போவதில்லை '' என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் கால்பந்து அணியை அமெரிக்க மண்ணில் அனுமதிப்பது குறித்து டிரம்ப் விளக்கம் அளிக்கவில்லை.

iran football team
iran football team

1974ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை ரஷ்யா புறக்கணித்தது. ஈரான் உலகக் கோப்பை கால்பந்து தொடரை புறக்கணித்தால், அந்த வகையில் இரண்டாவது அணி ஆகும். ஆனால், அதற்கு பிறகு ஈரான் அணி பல சவால்களை சந்திக்க நேரிடும். பிஃபா ஈரான் அணிக்கு வருங்காலத்தில் பல தடைகளை விதிக்கலாம். 5 லட்சம் ஸ்விஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்படும். அதோடு, உலகக் கோப்பைக்கு அணிகளை தயார்படுத்த ஒவ்வொரு அணிக்கும் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிஃபா வழங்கியுள்ளது. அந்த நிதியையும் ஈரான் திருப்பிக் கொடுக்க நேரிடும். உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டாலே, 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை உண்டு. இதையும் ஈரான் இழந்து விடும்.

தற்போது, ஆசியாவில் இருந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற ஒரே ஒரு அணிக்கு வாய்ப்புள்ளது. அதாவது, ஈராக் இன்னும் ஒரு சர்வதேச பிளே - ஆப் சுற்றில் விளையாட வேண்டியது உள்ளது. மார்ச் 31ம் தேதி மெக்சிகோவில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. பொலிவியா அல்லது சூரிநாம் நாடுகளை எதிர்த்து ஈராக் ஆட வாய்ப்புள்ளது. இதில், ஈராக் வெற்றி பெற்று விட்டால் , நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விடும். இந்த சூழலில், ஆசிய ரேங்கிங்கில் அடுத்த நிலையிலுள்ள ஐக்கிய அரபு அமீரகம் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற வாய்ப்பு ஏற்படும். ஈராக் தோல்வியடைந்து விட்டால், ரேங்கிங்கின் அடிப்படையில் ஈராக் அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறலாம். ஆசியா மற்றும் ஓசானியா பிரிவில் இருந்து சவுதிஅரேபியா , கத்தார், தென்கொரியா , ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான், உஸ்பெஸ்கிஸ்தான், ஜோர்டான் ஆகிய 8 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.

Puthuyugam
www.puthuyugam.com