முழுமையான மாரத்தான் போட்டியை நீங்கள் கடக்க வேண்டுமென்றால் 42.2 கி.மீ தொலைவு நீங்கள் ஓட வேண்டும். 25 வயது இளைஞர்களால் கூட, முழு மாரத்தான் போட்டியை எளிதாகக் கடந்து விட முடியாது. விஷயம் இப்படியிருக்கையில், 74 வயது டாக்டர் ஒருவர் டெல்லியில் கடந்த 22ம் தேதி நடந்த மாரத்தான் போட்டியில் 42.2 கி.மீ தொலைவை அசால்ட்டாக கடந்து 3வது இடத்தை பிடித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருஷேத்ராவைச் சேர்ந்தவர் சோம்நாத் சேத்தி. டாக்டரான இவர் தனது 340வது மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு இந்த அரிய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார்.
சோம்நாத் சேத்தி சிறு வயதில் இருந்தே மராத்தான் போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மாரத்தான் போட்டியில் ஓடிய போது , விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இடது கால் உடைந்து போனது... கூடவே முட்டு பகுதியும். 3 மாத காலம் படுக்கையில் இருந்து கொண்டே சிகிச்சை பெற வேண்டிய சூழல். 'இனிமேல் நீங்கள் ஓடக் கூடாது, நடக்க மட்டும் செய்யுங்கள்' என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியிருந்தனர். ஆனால், மாரத்தானில் ஓடுவதுதான் அவரது இலக்காக இருந்தது. தொடர்ச்சியாக பயிற்சி செய்து 2015ம் ஆண்டு மீண்டும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க தொடங்கி விட்டார்.
இது குறித்து டாக்டர் சோம்நாத் சேத்தி கூறுகையில், ''நான் எனது நோயாளிகளிடத்தில் கூட,மருந்துகளை எடுப்பதைக் காட்டிலும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதுதான் நல்லது என்று அறிவுரை கூறுகிறேன். தினமும் 8 அல்லது 9 மணி நேரம் நன்றாக உறங்குகிறேன். ஜங்க் புட் முற்றிலும் தவிர்த்துவிடுவேன். மது, சிகரெட்டைத் தொட்டது கூட இல்லை. அசைவ உணவு சாப்பிடுவதில்லை. முற்றிலும் காய்கறி உணவுதான் சாப்பிடுகிறேன். எனக்குக் காயம் ஏற்பட்ட போதுகூட நான் சீரான முயற்சியில் ஈடுபட்டுதான் மீண்டும் ஓட வந்தேன். மாரத்தான் பயிற்சிக்கு முன், முழுமையாக உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதயப் பரிசோதனை முக்கியமாக செய்ய வேண்டும். உடல் பிட்னஸ் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். முழு மாரத்தான் ஓடுவதற்கு முதலில் 20 வாரங்கள் பயிற்சி எடுக்க வேண்டும். டாக்டர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அறிவுரையின்படி, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். முதலில் 3 கி.மீ, 5 கி.மீ என்று ஓடிப் பயிற்சி எடுத்து தூரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். முறையான காலணி, ஜெர்சி, ஷார்ட்ஸ் போன்றவை அணிந்து கொண்டுதான் பயிற்சி எடுக்க வேண்டும் . மாரத்தான் ஓடுவதற்கு இதயமும் தசைகளும் கொஞ்சம் கொஞ்சமாக பழக வேண்டும். ஏனென்றால், மாரத்தான் ஓட்டத்தின் போது, இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். அந்த அழுத்தத்துக்கு இதயம் பழக வேண்டும். அதனால், சீராக ஓடும் தூரத்தை அதிகரித்துப் பயிற்சி பெற வேண்டும். முன் பயிற்சியோ அனுபவமோ இல்லாமல் மாரத்தான் போட்டியில் பங்கேற்கக் கூடாது. நீங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது, அசவுகர்யமாக உணர்ந்தால் , உடனே ஓட்டத்தை நிறுத்தி விட வேண்டும். உடனடியாக, மருத்துவக்குழுவை அணுக வேண்டும்'' என்கிறார்.
மாரத்தான் ஓட்டம் என்றால் என்ன?
முழு மாரத்தான் ஓட்டம் என்பது 42.19 கி.மீ தொலைவு கொண்டது. அரை மாரத்தான் 21 கி.மீ தொலைவு கொண்டது. 21 கி.மீக்கு குறைவாக ஓடுவதை மாரத்தான் ஓட்டமாக கருத முடியாது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக உலகம் முழுக்க மாரத்தான் ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன. உலகில் முதன்முதலில் 1897ம் ஆண்டு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. டோக்கியோ , பாஸ்டன், லண்டன், பெர்லின், சிகாகோ, நியுயார்க் மாரத்தான் ஓட்டங்கள் உலக புகழ்பெற்றவை. இந்தியாவில் 'டாடா மும்பை மாரத்தான்' ரொம்பவே பாப்புலர்.