"என் ரோல் மாடல் இவர்தான்!" சுந்தர்பிச்சை புகழ்ச்சி... கவாஸ்கர் நெகிழ்ச்சி!

எனக்கு சிறுவயதில் கவாஸ்கர்தான் ரோல் மாடல் என்று மைதானத்தில் புகழ்ந்தார் சுந்தர்பிச்சை. இதனால், நெகிழ்ந்தார் கவாஸ்கர்.
ரவி சாஸ்திரியுடன் நினைவுகளை பகிர்ந்த சுந்தர் பிச்சை
ரவி சாஸ்திரியுடன் நினைவுகளை பகிர்ந்த சுந்தர் பிச்சை jiohotstar
Published on

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். ஆட்டம் தொடங்கும் முன், டி20 உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கருடன் சேர்ந்து சுந்தர் பிச்சை ரசிகர்களிடையே அறிமுகம் செய்து வைத்தார்.

போட்டியின் நடுவே வர்ணனையாளர் அறைக்குச் சென்ற சுந்தர் பிச்சை, அங்கு ரவி சாஸ்திரியுடன் இணைந்து வர்ணணையில் ஈடுபட்டார். சுந்தர் பிச்சை தனது பேச்சில் , "சுனில் கவாஸ்கர்தான் எனக்கு ரோல் மாடல். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழில் வரும் அவரது போஸ்டர்களைக் கிழித்து எனது அறையிலுள்ள சுவர்களில் ஒட்டி வைப்பேன். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மோதல் நடந்தால், ரேடியோவில் எனது தாத்தாவுடன் சேர்ந்து வர்ணணை கேட்பேன். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் உண்டு'' என்று பேசியிருந்தார்.

Icc President Jay Shah with Sundar Pichai
Icc President Jay Shah with Sundar Pichai@JayShah X

தன்னைப் பற்றி சுந்தர் பிச்சை கூறியதை கேட்ட கவாஸ்கர் நெகிழ்ந்து போனார். இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், ''நான் இதற்கு முன்னரே சுந்தர் பிச்சையை சந்தித்துள்ளேன். அவரின் அறையில் எனது போஸ்டர்களை ஒட்டி வைத்தது குறித்து என்னிடம் கூறியிருக்கிறார். உலகளவில் தொழில்நுட்பத்தில் சாதித்த ஒருவர் என் மீது அபிமானம் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் இருவரும்தான் உலகக் கோப்பையை இந்த மைதானத்தில் அறிமுகப்படுத்தினோம். அப்போது, மார்ச் 8ம் தேதி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தக் கோப்பையை வெல்ல இருவரும் வேண்டிக் கொண்டோம் '' என்றார்

கூகுள் நிறுவனம் ஐசிசி தொடரின் ஸ்பான்சராக இருப்பதால் இந்தப் போட்டியை நேரில் காண சுந்தர் பிச்சை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் இணைந்து கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்தார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி ஜெய்ஷா கவுரவித்தார்.

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதனால், அடுத்து வெஸ்ட் இண்டிஸ், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயமாக வெற்றி பெற்றேயாக வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. குறிப்பாக இளம் வீரர் அபிஷேக் சர்மா விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் 3 முறை டக் அவுட் ஆகியுள்ளார். திலக் வர்மாவும் சோபிக்கவில்லை. இதனால், இனி வரும் ஆட்டங்களில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சனை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Sundar Pichai and Sunil Gavaskar
Sundar Pichai and Sunil Gavaskar@xtratimeindia

சிறந்த ஆல்ரவுண்டரான அக்ஷர் படேல் அணியின் துணை கேப்டனாக இருந்தும், அவரைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் களம் இறக்காதது சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் முடிவையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து, 18 டி20 போட்டிகளில் விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார். இந்த ஆட்டத்தில் டேவிட் மில்லரின் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி கைப்பற்றியிருந்தார். முன்னதாக, மற்றொரு இந்திய வீரரான அர்ஷ்தீப் சிங்,தொடர்ந்து 17 டி20 சர்வதேச போட்டிகளில் விக்கெட் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthuyugam
www.puthuyugam.com