இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆட்டத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியை காண பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி வந்திருந்தார். இவரிடம்தான், இந்தியா வென்ற ஆசியக் கோப்பை உள்ளது. ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவரான, இவரிடத்திலிருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். இதனால், அவர் கோப்பையை கொடுக்காமல், தன்னிடத்தில் வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கொழும்பில் நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை காண மோஷின் நக்வி வந்திருந்தார். பாகிஸ்தான் பேட்டிங் சீர் குலைந்ததும், வி.ஐ.பி இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த மோஷின் நக்வி போட்டி முடிவதற்குள் எழுந்து சென்று விட்டார். பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால், மைதானத்துக்குள் சென்று தங்கள் அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஆசையில் மோஷின் நக்வி வந்துள்ளார். ஆனால், வழக்கமான ரிசல்ட்டே கிடைக்க, மைதானத்தில் இருந்து நழுவிவிட்டார்.
பாகிஸ்தான் தோல்விக்குப் பிறகு, மோஷின் நக்வியை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர், ''எங்கள் நாட்டில் ஒரு மனிதர் இருக்கிறார். அவருக்கு ஒன்றுமே தெரியாது. தான்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் என்பது கூட அவருக்கு தெரியாது. பாபர் அசாம் என்று ஒருவர் விளையாடுகிறார். எதற்காக அவர் களம் இறங்குகிறார் என்றே தெரியவில்லை. தகுதியில்லாத ஒருவருரிடத்தில் ஒரு பொறுப்பை கொடுப்பது உலகத்திலேயே மிகப் பெரிய கிரைம். அவர், கண்டிப்பாக அதை அழித்து விடுவார். இதைத்தான் மோஷின் நக்வி செய்துள்ளார். இந்தியாவை தோற்கடிப்பது பற்றி இனி கனவில் கூட பாகிஸ்தான் நினைத்துப் பார்க்க முடியாது'' என்று கடுமையாக சாடியுள்ளார். 'பாகிஸ்தான் அணிக்கு சரியாக தோற்கக்கூட தெரியவில்லை' என்றும் அந்த நாட்டு மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளனர்.
''பாகிஸ்தான் அணியின் ஷாகீன், பாபர் அசாம், ஷாஹாப் கான் ஆகியோரை இனி எஞ்சியுள்ள ஆட்டங்களில் பெஞ்சில் அமர வைக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் '' என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றையை போட்டியின் போதும், டாஸ் போட்டு முடித்ததும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலியுடன் கை குலுக்க மறுத்து விட்டார். போட்டி முடிந்ததும் இரு நாட்டு வீரர்களும் கை குலுக்கவில்லை. எனினும், மைதானத்தில் பாசிடிவான விஷயங்கள் அரங்கேறாமல் இல்லை. இந்த டி 20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தூதராக உள்ளார். இவர், கொழும்பில் நேற்று நடந்த ஆட்டத்தை காண சென்றிருந்தார். அப்போது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாஷிம் அக்ரம் வர்ணணையாளர் என்ற வகையில் மைதானத்துக்குள் நின்று கொண்டிருந்தார். வாஷிம் அக்ரத்தை கண்டதும் , அவரை நோக்கி சென்ற ரோகித் சர்மா கட்டி தழுவினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானை வீழ்த்தியதையடுத்து, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. பாகிஸ்தான் அணி அடுத்து நமீபியா அணியுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.
டி 20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 8 முறை இந்தியாவுடன் மோதி, ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுடன் 8 முறை மோதி 8 முறையும் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.