சாலையோரத்தில் பரிதாபமாக அமர்ந்திருந்த பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள்! #Hockey

' பிரதமருக்கு கிரிக்கெட் மீதுதான் கவனம் உள்ளது. மற்ற விளையாட்டுகளை பற்றி கவலை இல்லை'- சமியுல்லா
சாலையோரத்தில் அமர்ந்துள்ள பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள்
சாலையோரத்தில் அமர்ந்துள்ள பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் Khalid Baig x page
Published on

ஹேட்டல் பில் செலுத்த போதிய நிதி இல்லாத காரணத்தினால், பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தெருவில் சுற்றும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FIH Pro League தொடரில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவதற்காக கடந்த 12ம் தேதி பாகிஸ்தான் ஹாக்கி அணி, கான்பெர்ரா நகருக்கு சென்று இறங்கியது. வீரர்களுக்கு அங்கு, நான்கு நட்சத்திர விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டதாக முதலில் கூறப்பட்டது . அந்த ஹோட்டலுக்குச் சென்று தங்களது அறை குறித்து பாகிஸ்தான் வீரர்கள் விசாரித்த போது, 'பணம் செலுத்தாததால் அறை தர முடியாது' என்று பதில் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டல் இருந்த சாலையில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் அணி வீரர்கள் சாலையோரத்தில் அமர்ந்திருந்த காட்சியை. காஷ்மீரைச் சேர்ந்த இந்தியரான காலித் பெய்க் என்பவர் புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் வைரலானது. ஆஸ்திரேலியாவில் தங்களது நிலை குறித்து பாகிஸ்தான் ஹக்கி அணியின் பயிற்சியாளர் பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விளக்கியுள்ளார்.

தொடர்ந்து , பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பு கொஞ்சம் தொகை அனுப்பியுள்ளது. கான்பெர்ராவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்களும் உதவியுள்ளனர். பின்னர், ஒரு சிங்கிள் அறையில் 2 அல்லது 3 வீரர்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஹாக்கி அணி வீரர்கள் இப்படி தவிக்கவிடப்படுவது, இது முதன்முறையல்ல. கடந்த வருடம் மலேசியாவில் நடந்த அஷ்லான்ஷா கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியது. அப்போதும், ஹோட்டல் பில் 10 ஆயிரம் டாலர்களை செலுத்த முடியாமல் பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பு தடுமாறியது. இதற்கு முன்னதாக, அர்ஜெண்டினா அணியுடன் பாகிஸ்தான் அணி ப்ரோ லீக் தொடரில் பங்கேற்றது. அப்போது, வீரர்களுக்கு டெய்லி அலவன்ஸ் (115 அமெரிக்க டாலர்கள்) அளிக்கத் தவறியதாக பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பில் போதிய நிதி இல்லாத காரணத்தினால், இத்தகைய சம்பங்கள் நடப்பதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சமியுல்லா,''பாகிஸ்தான் பிரதமர் எப்போதும் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி மட்டும்தான் சிந்திக்கிறார். பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பின் பேட்ரானும் அவர்தான். ஹாக்கி அமைப்பில் என்ன நடக்கிறது என்பதையும் பாகிஸ்தான் பிரதமர் கவனிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது'' என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Pakistan Hockey team
Pakistan Hockey team

பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் சர்தார், ''இப்படிப்பட்ட சூழலில் வீரர்கள் எப்படி திறமையை வெளிப்படுத்த முடியும். ஒரு தேசிய அணி வீரர்களை இப்படி நடத்துவதுதான் உங்கள் லட்சணமா? இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது மட்டுமல்ல ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விசா பெறுவதற்கான நடைமுறையிலும் பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பு குளறுபடியைச் செய்துள்ளது. இதனால், முதன்முறை விண்ணப்பிக்கப்பட்ட விசா மறுக்கப்பட்டுள்ளது. பின்னர், மாற்று விண்ணப்பம் ரெடி செய்து பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா பெறப்பட்டுள்ளது . இதன் காரணமாக, ஒரு வார காலம் தாமதமாக கடந்த 12ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் அணி சென்றுள்ளது. முதலில் பிப்ரவரி 5ம் தேதி பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா புறப்படத் திட்டமிட்டிருந்தது.

அதே வேளையில், ''பாகிஸ்தான் அணி வீரர்கள் சாலையில் தவிக்கவிடப்பட்டதாக இந்திய மீடியாக்கள்தான் வதந்தியை பரப்புகின்றன. பாகிஸ்தான் அணியின் சுற்றுப்பயணத்தில் முதலில் குளறுபடி இருந்தாலும், உடனடியாக அது, சரி செய்யப்பட்டது'' என்று பாகிஸ்தான் பத்திரிகை டான் செய்தி வெளியிட்டுள்ளது.

எது எப்படியோ... கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை!

Puthuyugam
www.puthuyugam.com