'ICC செய்வது சரியா?' - நாசர் ஹூசைன் #BCCI #ICC #T20WorldCup

இந்தியாவிடம் ஐ.சி.சி அமைப்பால் ரூல்ஸ் பேச முடியுமா? இந்திய அணியை தொடரில் இருந்து வெளியேற்றிவிடும் துணிவு ஐ.சி.சியிடம் உள்ளதா?
மைக்கேல் ஆர்தர்டன் மற்றும் நாசர் ஹூசைன்
மைக்கேல் ஆர்தர்டன் மற்றும் நாசர் ஹூசைன்sky sports
Published on

ஐசிசி நடத்தும் 10வது ஆடவர் டி.20 உலக கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம்தேதி வரை நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 'ஏ ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் வரும் 15ம் தேதி மோத உள்ளன. ஆனால், இந்தப் போட்டியை புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 'தொடரைப் புறக்கணித்தால் நிதி பகிர்வு நிறுத்தப்படுவதுடன், வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்' என ஐ.சி.சி எச்சரித்துள்ளது.

ஆனாலும்,பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், “டி20 உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடமாட்டோம். ஏனெனில், விளையாட்டுத் துறையில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. வங்கதேசத்துடன் முழுமையாக இணைந்து நிற்க வேண்டும் என கவனமாக முடிவு செய்துள்ளோம். இது மிக பொருத்தமான முடிவுதான்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் ஐ.சி.சி ஒரு தலைபட்சமாக இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மைக்கேல் ஆர்தர்டனுடன் தனது கருத்தை நாசர் ஹூசைன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

''சமீப காலமாக அரசியலுக்குள் விளையாட்டை கலப்பது அதிகரித்துள்ளது. அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுவது கிரிக்கெட் வீரர்களே கைகுலுக்க மறுப்பது, வெற்றிக் கோப்பையை பெற மறுப்பது என பல சம்பவங்கள் அரங்கத்தில் நடக்கின்றன. முன்பெல்லாம் கிரிக்கெட் நாடுகளை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்டது. இப்போது கிரிக்கெட் அதிலிருந்து விலகிச் செல்வதை பார்க்க முடிகிறது.

ICC T20 Trophy
ICC T20 Trophyenergyradio88.8fm

எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு ஐ.சி.சியால் பதிலளிக்க முடியுமா? ஐ.சி.சி. நடத்தும் முக்கியமான தொடரில் இருந்து இந்திய அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக இந்திய அணி பங்கேற்க முடியாமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணியை நடத்துவதை போல, இந்திய அணியை ஐ.சி.சியால் நடத்த முடியுமா? அப்போதும், ஐ.சி.சி உறுதியாக நின்று, இந்தியாவை தொடரில் இருந்து வெளியேற்றி விடுமா? இந்திய அணியிடத்தில் ஐ.சி.சி. ரூல்ஸ் பேச முடியுமா? அத்தகைய துணிவு ஐ.சி.சியிடம் உள்ளதா? வங்க தேசத்தை, பாகிஸ்தான் அணியை நடத்துவது போன்று அனைத்து அணிகளையும் சமமாக நடத்த வேண்டுமென்பதுதான் எனது ஆசை.

பணம் நிறைய வைத்துள்ளதால் , நீங்கள் வேறு எங்காவது சென்று அழுங்கள் என்று இந்திய ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால், அதிகாரம் வந்தால், அதோடு பொறுப்பும் வந்து விடுகிறது என்பதை மறக்க வேண்டாம். இத்தகைய நடத்தை பாகிஸ்தான், வங்கதேசத்தில் கிரிக்கெட் வளர்ச்சியை பாதித்து விடும். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் கண்டது போன்ற மிகச் சிறந்த ஆட்டங்களை காண முடியாத நிலைக்கு உங்களை தள்ளி விடும். இந்திய அணி பாகிஸ்தான் அல்லது வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆடும் போது, ஒன்சைடு ஆட்டங்களாக மாறி விட்டால் களத்தில் சுவாரஸ்யம் இருக்குமா? அதோடு, அரசியல்வாதிகள் கிரிக்கெட் அணிகளை தங்களது வெறுப்பைப் பரப்பும் காரணியாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, இந்திய ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களால், பாகிஸ்தான், வங்கதேச அணி வீரர்களை வாங்க முடியாத சூழல் உள்ளது. ''

இவ்வாறு நாசர் ஹூசைன் பேசியுள்ளார்.

முஸ்தாஃபிசூர் ரஹ்மான்
முஸ்தாஃபிசூர் ரஹ்மான்Wikipedia

பின்னணி என்ன?

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக வங்கதேச வீரர் முஸ்தாஃபிசூர் ரஹ்மான் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். சமீப காலமாக,வங்கதேசத்தில் இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதால், இந்திய அரசு முஸ்தாஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா அணியில் இருந்து நீக்க வேண்டுமென்று நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து, கொல்கத்தா அணி அவரை நீக்கி விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்போம் அல்லது இந்தியாவில் விளையாட மாட்டோம் என்று கூறியது. ஆனால், ஐ.சி.சி. ஏற்கனவே, ஒப்புக் கொண்டது போல இந்தியாவில்தான் வங்கதேசம் விளையாட வேண்டுமென்று உறுதிபட கூறி விட்டது. இதையடுத்து, அந்த அணி உலகக் கோப்பை தொடரை புறக்கணித்துள்ளது.

வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடுமென்று அறிவித்துள்ளது. வங்கதேச அணிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், ஐ.சி.சியின் செயல்பாடுகளை கண்டித்து பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாட முடியாது என்று அறிவித்துள்ளது . இதனால், பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடும் . பிப்ரவரி 7ம் தேதி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தான் சந்திக்கிறது. முதல் ஆட்டத்தில், தோல்வி கண்டால் பாகிஸ்தானுக்கு மிகுந்த சவால் உருவாகும். லீக் சுற்றோடு, தொடரை விட்டு வெளியேற வாய்ப்பும் உருவாகி விடும்.

Puthuyugam
www.puthuyugam.com