இனவெறித் தாக்குதலால் ஆஸி கிரிக்கெட் வீரர் எடுத்த முடிவு!

சிட்னி போண்டி பீச்சில் நடந்த தாக்குதலையடுத்து, உஸ்மான் கவாஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா Welco
Published on

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் கடந்த டிசம்பர் 14ம் தேதி யூதர்கள் தங்களின் ஹனுக்கா பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடியிருந்தனர். அப்போது, ஷாஜீத் அக்ரம் அவரின் மகன் நவீத் அக்ரம் ஆகியோர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த போது, அல் அஹ்மது என்ற மற்றொரு இஸ்லாமியர் தீவிரவாதிகளைத் தடுத்து, பலரின் உயிரைக் காப்பாற்றினார். முதலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக வதந்தி பரவியது. ஆனால், பின்னர் தாக்குதல் நடத்திய ஷாஜீத் அக்ரம் தெலங்கனா மாநிலம் ஹைதரபாத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட ஷாஜீத் அக்ரம் சிட்னி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எனினும், போண்டி தாக்குதலையடுத்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது சமூக வலைதளங்களில் இனவெறி ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டது. கவாஜா அவரது மனைவி ரேச்சல், குழந்தைகள் பற்றியும் தரக்குறைவான கருத்துக்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்களைப் பலரும் பகிர்ந்தனர். பாகிஸ்தானைப் பூர்வீகத்தை கொண்டவர் என்பதால், கவாஜாவை, ' பாகிஸ்தானுக்கு போ' என்றும் சிலர் பதிவிட்டிருந்தனர்.

''எங்கள் மகள்களை எதிர்காலத் தீவிரவாதிகள், புற்றுநோய் ரத்தம்' என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். பாகிஸ்தானுக்குத் திரும்பச் செல்லும்படி கூறுகின்றனர். இஸ்லாமோபோபியா போன்ற இனவெறி எதற்கும் நாம் துணை நிற்கக்கூடாது. முன்னெப்போதையும் விட இப்போது நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்" என்று உஸ்மான் கவாஜா உருக்கமாக ஆஸ்திரேலிய மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Welco

இந்த நிலையில், 39 வயதான உஸ்மான் கவாஜா கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக அவர் கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வந்தார். சிட்னி மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் 5- வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளார். இது, ஆஸ்திரேலிய அணிக்காக அவர் ஆடவுள்ள 88வது டெஸ்ட் ஆட்டம் ஆகும். இதே மைதானத்தில்தான் கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக உஸ்மான் கவாஜா முதல் ஆட்டத்தில் களம் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்காக கவாஜா 6,206 டெஸ்ட் ரன்களை அடித்துள்ளார். சராசரி 43.39 ஆகும். கடந்த 2025ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 232 ரன்கள் அடித்துள்ளார். இதுதான், அவரின் அதிகபட்சம் ஆகும். ஆஸ்திரேலிய அணிக்காக 40 ஒருநாள் மற்றும் 9 டி 20 ஆட்டங்களிலும் கவாஜா விளையாடியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் பிறந்த கவாஜா, குழந்தையாக இருந்தபோதே, பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து விட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. ஓய்வு குறித்து கவாஜா கூறுகையில், ''நான் ஒரு முஸ்லிமாக இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். ஆனால், இனிமேல், ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் எண்ணம் இல்லை . இந்தச் சூழலில் நான் மட்டும் இல்லை, வேறு யாராக இருந்தாலும் இத்தகைய முடிவைத்தான் எடுத்திருப்பார்கள். இனரீதியாக தாக்குதலுக்குள்ளாவது எனக்கு புதிதல்ல ''என்று தெரிவித்துள்ளார்.

Puthuyugam
www.puthuyugam.com