உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. 48 அணிகள் பங்கேற்பதால், பல குட்டி நாட்டு அணிகளும் முதன்முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று களம் காண தயாராக இருக்கின்றன.
ஜோர்டான், கேப் வெர்டே, உஸ்பெஸ்கிஸ்தான், Curacao போன்ற நாடுகள் முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இதில், Curacao நாட்டின் மொத்த மக்கள் தொகையே 1.50 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு ஜூன் 11ம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூலை 11ம் தேதி நிறைவடைகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ பழம்பெருமை வாய்ந்த அஸ்டகா ஸ்டேடியத்தில் தென்ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது.
இறுதி ஆட்டம் ஜூலை 19ம் தேதி நியூஜெர்சியிலுள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 82,500 பேர் போட்டியைக் காண முடியும்.
இந்த உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளின் ஆரம்பகட்ட விலையே 4 ஆயிரம் டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது, கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விண்ணைத் தொட்ட டிக்கெட் விலைக்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து, டிக்கெட்டுகள் விலையை குறைந்த பட்சமாக 60 டாலர்கள் என்று பிஃபா நிர்ணயித்துள்ளது.
அதாவது, தொடக்க போட்டியில் இருந்து இறுதிப் போட்டி வரை இரு அணிகளின் LOYAL ரசிகர்களை கருத்தில் கொண்டு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 1,000 டிக்கெட்டுகள் மட்டுமே இந்த விலையில் விற்பனை செய்யப்படும். அதாவது, இரு அணிகளைச் சேர்ந்த தலா 500 ரசிகர்களுக்கு இந்த விலையில் டிக்கெட் ஒதுக்கப்படும். எனினும், கத்தாரில் நடந்த உலகக் கோப்பை தொடரை விட 2026ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான டிக்கெட் 7 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து ஆதரவாளர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே, உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத் தொகையை பிஃபா அறிவித்துள்ளது. அதன்படி, சாம்பியன் அணிக்கு 450 கோடி பரிசு அளிக்கப்படும். ரன்னர்ஸ் அப் அணிக்கு 300 கோடி கிடைக்கும். மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு 260 கோடியும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 244 கோடியும் பரிசாக வழங்கப்படும்.
33 முதல் 48வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு 81 கோடி பரிசாக வழங்கப்படும். இதுதவிர, போட்டிக்கு தயாராவதற்காக தனியாக 10 கோடி வழங்கப்படும். அந்த வகையில், கடைசி இடமான 48வது இடம் பிடிக்கும் அணிக்குக்கூட பரிசாக 95 கோடி கிடைக்கும். மொத்தம் 727 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.