உலகக் கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. இந்த முறை உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. இதனால், பல நாடுகள் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வரிசையில், North, Central America and Caribbean Association Football அமைப்பில் இருந்து கூராசாவ் என்ற சிறிய நாடு உலகக் கோப்பைக்கு முன்னேறியுள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 1,56,115 பேர்தான். 'பி ' பிரிவில் தனது கடைசி ஆட்டத்தில் ஜமைக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 12 புள்ளிகளுடன் கூராசாவ் (Curaçao) முதலிடத்தை பிடித்தது. இதன்மூலம், முதல்முறையான இந்த நாடு உலகக் கோப்பைக்கு முன்னேறியுள்ளது.
இந்த அணிக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த 78 வயதான டிக் அட்வாகட் பயிற்சியாளராக உள்ளார். நெதர்லாந்து, ரஷ்யா, தென்கொரியா, பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் இவர் பயிற்சியாளராக இருந்துள்ளார். முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கு 3.50 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து அணி முன்னேறியிருந்தது. அப்போது, உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற குட்டி நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றிருந்தது. தற்போது, அந்த பெருமையை கூராசாவ் நாடு பெற்றுள்ளது.
அதேபோல ,ஹைதி நாடும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த 1974ம் ஆண்டு ஹைதி உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறியிருந்தது
உலகக் கோப்பை தொடருக்கு ரொனால்டாவின் போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், கடந்த 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் இணைந்து பங்கேற்றார். ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ஆகியோரும் இந்த டின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடந்த 2022ம் ஆண்டு முதல் ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாஸர் அணிக்காக விளையாடி வருகிறார். டின்னரில் கலந்து கொண்ட ரொனால்டோவுக்கு அமெரிக்க அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது இளையமகன் பாரன், 'ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்றும் தனது மகன் பாரன் தனக்கு பிடித்த விளையாட்டு வீரரை இன்று சந்தித்து விட்டான் 'என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவில் ரொனால்டோ எந்த கால்பந்து போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் நகர ஹோட்டல் ஒன்றில் ரொனால்டோ , இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்தப் பெண்ணுக்கு 3,75,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து புகாரில் இருந்து ரொனால்டோ தப்பினார். இருவரின் சம்மதத்துடன் உறவு நடந்ததாக கூறி, ரொனால்டோவின் வழக்கறிஞர்கள் குற்றவியல் வழக்குப் பதியாமல் பார்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 2018ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்தில் வைத்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் செய்தியாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டார். சவுதி இளவரசர் உத்தரவின் பேரில்தான் , செய்தியாளர் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. இதை, முகமது பின் சல்மான் மறுத்திருந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, சல்மான் வெள்ளை மாளிகைக்கு செல்வதைத் தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கசோகியின் மனைவி ஹனான், ' வெள்ளை மாளிகையில் சவுதி இளவரசரை பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. எனது கணவரைக் கொன்றதற்காக என்னிடத்தில் நேரடியாக வந்து சவுதி இளவரசர் மன்னிப்பு கேட்க வேண்டும் 'என்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.