அர்ஜுனா ரணதுங்காவின் ஸ்லிம் சீக்ரெட்!

தோனிக்கு முன்னதாக, மிஸ்டர் கேப்டன் கூல் என்று அர்ஜுனா ரணதுங்காவை தாரளமாக சொல்லலாம். எந்த விஷயத்துக்கும் அலட்டிக் கொள்ள மாட்டார். துணிந்து முடிவுகளை எடுக்க கூடியவர்.
சனத், டி சில்வா, ரணதுங்கா, முரளீதரன்
சனத், டி சில்வா, ரணதுங்கா, முரளீதரன்twitter - sanath jeyasuriya
Published on

கடந்த 1996ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். அதுவரை, கத்துக்குட்டியான அணியாக கருதப்பட்ட இலங்கை அணி விஸ்வரூபம் எடுத்திருந்தது. இந்த மாற்றத்திற்கு வித்திட்டவர் அப்போதைய அணி கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெயசூர்யா, கலுவிதரன ஆகியோரை களம் இறங்கி அதிரடியாக ஆட வைத்தவர் இவர்தான். கேப்டன் கொடுத்த தைரியத்தால்தான் ஜெயசூர்யாவும், கலுவிதரனவும் அவுட் ஆவதைப் பற்றி கவலையே படாமல் முதல் ஒவரிலேயே சிக்ஸர், பவுண்டரிகளை அடிக்க தொடங்கி விடுவார்கள். ஏனென்றால், அடுத்து களம் இறங்கும் குருசிங்காவும், அரவிந்த டி சில்வாவும் எப்படியும் இன்னிங்ஸை கட்டமைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ரணதுங்காவுக்கு இருந்தது.

எதிரணி பந்துவீச்சாளர்கள் கதறும் அளவுக்கு இந்த ஓபனிங் ஜோடி பந்தை நாலாபுறமும் துவம்சம் செய்யும். அந்த 1996 உலகக் கோப்பைத் தொடரில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை கோப்பையை வென்றது. வெற்றிக்கான ரன்களை அடித்ததும் ரணதுங்காதான். இலங்கை அணி முதன் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.

தோனிக்கு முன்னதாக, மிஸ்டர் கேப்டன் கூல் என்று அர்ஜுனா ரணதுங்காவை தாரளமாக சொல்லலாம். எந்த விஷயத்துக்கும் அலட்டிக் கொள்ள மாட்டார். துணிந்து முடிவுகளை எடுக்க கூடியவர். கடந்த 2000ம் ஆண்டு முற்றிலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

விளையாடிய காலக்கட்டத்தில் அர்ஜூனா ரணதுங்கா என்றதும் குள்ளமான உடல்வாகுள்ள உருவம்தான் நினைவுக்கு வரும். ஆனால் சமீபத்தில் ஜெயசூர்யா பகிர்ந்த புகைப்படத்தை கண்டதும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்தப் புகைப்படத்தில் அர்ஜுனா ரணதுங்கா உடல் மெலிந்து காணப்பட்டார். இந்தப் புகைப்படம் சமீபத்தில் கொழும்புவில் நடந்த தமிழ் யூனியன் அமைப்பின் 125வது ஆண்டு விழாவில் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அர்ஜூனா ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, முத்தையா முரளீதரன், ஜெயசூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போதும், இப்போதும் ரணதுங்கா
அப்போதும், இப்போதும் ரணதுங்கா

இந்தப் புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களுக்கும் இது ரணதுங்காவா என்று நம்பமுடியாமல் கேள்வி எழுப்பினர். அவருக்கு ஏதும் உடல் நல பாதிப்பா என்றும் சந்தேகங்களால் துளைத்தனர். சிலர் இப்போது 20 வயது குறைந்து போல ரணதுங்கா காணப்படுகிறார் என்று பாசிடிவாக கமெண்ட் செய்தனர்.

அர்ஜுனா ரணதுங்கா கடுமையான உழைப்பின் காரணமாகவே தனது உடல் எடையைக் குறைத்துள்ளார். தான் விளையாடும் காலக்கட்டத்திலேயே உடல் எடை காரணமாக பல பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார். அப்போது, பெயின்கில்லர் ஊசிகளைப் போட்டுக் கொண்டு விளையாடியதாகவும் பேட்டிகளில் அவர் சொன்னதும் உண்டு.

தற்போது 61 வயதான ரணதுங்கா 2024 ஆம் ஆண்டில், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்குப் பிறகு ரணதுங்கா ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்து வருகிறார். விளைவாக ஸ்லிம் பாயாக மாறி விட்டார்.

இது குறித்து, ரணதுங்கா கூறுகையில், "எனது தோற்றம் உடல்நலப் பிரச்சினையுடன் தொடர்புடையது. அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்குப் பிறகு மிகவும் நன்றாக உணர ஆரம்பித்தேன். என்னால் படிகளில் ஏற முடிந்தது. தரையில் உட்கார முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளாக என்னால் செய்ய முடியாத பல விஷயங்களை இப்போது, என்னால் செய்ய முடிந்தது. எனக்கு தூங்கும் போது மூச்சுத்திணறல் இருந்தது. நீரிழிவு நோய் நெருங்கியது. இப்போது எல்லாம் போய்விட்டது. நான் மட்டுமல்ல எனது குடும்பத்தில் பலரும் இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இப்போது, முறையான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சி காரணமாக இளம்வயது போல உணருகிறேன்' என்கிறார்.

Puthuyugam
www.puthuyugam.com