சமீபத்தில் முடிவைடைந்த மகளிர் உலகக் கோப்பை தொடரில் வங்க தேச அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பாகிஸ்தானுடன் மட்டுமே வங்கதேசம் வெற்றி பெற்றது. இந்தியாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட, மற்ற 5 ஆட்டங்களிலும் வங்கதேச அணி தோல்வியை கண்டது. இந்த அணியின் கேப்டனாக இருந்தவர் நிகர் சுல்தானா ஜோதி.
இந்தநிலையில், வங்கதேச கேப்டன் மீது அதிர்ச்சிக்கரமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஜகாரானா ஆலம். இது தொடர்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு ஆலம் அளித்துள்ள பேட்டியில், 'களத்தில் சரியாக விளையாடாத ஜூனியர் வீரர்களை தனது அறைக்கு அழைத்து அடிப்பதை நிகர் வழக்கமாக வைத்திருந்தார். வளர்ந்து வரும் வீராங்கனைகளை மிரட்டுவார். இது அடிக்கடி நிகழும். அவர் ஒரு டாக்சிக். தொடர் குற்றவாளி. வங்கதேச அணி நிர்வாகமும் இதைக் கண்டு கொள்ளவில்லை. சக சீனியர் பந்து வீச்சாளர் நஹிதா அக்தரும் ஆல்ரவுண்டர் ரிது மோனியும் கேப்டனுடன் சேர்ந்து சதி செய்து தேசிய அணியில் இருந்து என்னை வெளியேற்றினர்" என்று தெரிவித்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதத்துக்குப் பிறகு, வங்கதேச மகளிர் அணியில் ஆலம் இடம் பெறவில்லை. இந்த நிலையில், அவரின் பேட்டி வெளியாகி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு வங்கதேச அணி நிர்வாகம் உடனடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'இந்த குற்றச்சாட்டுகளை வாரியம் தெளிவாகவும் உறுதியகவும் மறுக்கிறது. இவை அடிப்படை ஆதாரமில்லாதவை. ஜோடிக்கப்பட்டவை மற்றும் உண்மையற்றவை. வங்காளதேச மகளிர் அணி சர்வதேச அளவில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வரும் நேரத்தில் , இதுபோன்ற அவதூறான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவது துரதிர்ஷ்டவசமானது. வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியுடன் தற்போது தொடர்பில் இல்லாத ஒருவர் இத்தகையை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பது உள்நோக்கம் கொண்டது. அணியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது. பகிரங்கமாக தவறான தகவல்களை வெளியிட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்கள் மகளிர் அணியின் தலைமையை முற்றிலும் நம்புகிறோம். ஆலம் கூறிய குற்றச்சாட்டுக்கு எங்கு தேடியும் ஆதாரம் இல்லை ' என்று கூறப்பட்டுள்ளது.
வங்கதேச அணியின் கேப்டன் நிகரும் உடனடியாக இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நான் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக என்னால் பேச முடியாது அல்லது பதில் சொல்ல எதுவும் இல்லை என்று அர்த்தமல்ல. இந்த அணி நம் அனைவருக்கும் சொந்தமானது. வங்கதேச அணி நல்லதொரு கட்டத்தை கடந்து செல்லும்போது எதிர்மறையான அறிக்கைகள், தனிப்பட்ட வெறுப்புகள், கோபம் மற்றும் கடுமையான வார்த்தைகளைப் காண்பது வேதனையைத் தருகிறது. இதுபோன்ற கருத்துக்களைச் சொன்னவர் ஒரு காலத்தில் இந்த அணியை நேசித்தவர். அணியைக் கட்டியெழுப்ப உதவியவர். அதன் வெற்றிகளையும் தோல்விகளையும் உடனிருந்து கண்டவர் என்பதுதான் எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. யாராவது அணியிலிருந்து நீக்கப்படும்போது அல்லது ஃபார்மில் இல்லாத போது, அவர்களுக்குப் பதிலாக மற்றொருவர் வரும் சமயத்தில் திடீரென்று அணியைப் பற்றி தவறாக சொல்வது நியாயமா? இதுதான் அவர்களை மோசமாக சிந்திக்க வைத்துள்ளது. வதந்திகளைப் பரப்புவது தற்காலிக கவனத்தை மட்டுமே பெறும். ஆனால், நிரந்தராமாக பலனளிக்காது'' என்று கூறியுள்ளார்.