உலகக்கோப்பையை கைப்பற்றிய மகளிர் அணியை நாடே இப்போது, தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இந்த நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் நியூதன் கவாஸ்கர் (இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கரின் இளைய சகோதரி) சில வார்த்தைகளை உதிர்த்தார்.
"கண்ணுக்குத் தெரிந்து சிலர் வெற்றிக்கோப்பையை கையில் ஏந்துகின்றனர். கண்ணுக்குத் தெரியாத சிலர், அந்தக்கோப்பையை வெல்ல உதவியாக இருக்கின்றனர். எல்லாம் இருக்கும்போது உடன் ஒட்டிக்கொள்வது எப்படியிருக்கிறது? எதுவுமே இல்லாதபோது கூடவே நிற்பது எப்படி இருக்கிறது?''
எத்தகையை வலி இருந்திருந்தால் இத்தகைய வார்த்தைகளை அவர் கூறியிருப்பார். நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பி.சி.சி.ஐ 51 கோடியை பரிசாக அள்ளி கொடுத்துள்ளது. ஆனால், ஒரு காலக்கட்டத்தில் இந்திய மகளிர் அணியை பி.சி.சி.ஐ கண்டு கொண்டதே இல்லை. 2005ம் ஆண்டு உலகக்கோப்பை முதல் 2017ம் ஆண்டு உலகக் கோப்பை வரை, இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணமாக 1000 மட்டுமே வழங்கப்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியிருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இதையெல்லாம் விட கொடுமைகளை இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் சந்தித்துள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டுக்கு இந்திய மகளிர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது தங்குவதற்கு ஹோட்டல் அறை கூட பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்து தரவில்லை. அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டில் நமது வீராங்கனைகள் தங்கியிருந்து விளையாடினார்கள். அடுத்து 2003ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம். இப்போதும், பிசிசிஐ கை விட்டு விட்டது.
அப்போதுதான், இந்தத் தகவலை அறிந்த நடிகை ஒருவர் கண்கலங்கி போனார். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அந்த நடிகையின் பெயர் மந்திரா பேடி . கிரிக்கெட் உலகின் முதன் பெண் பிராட்காஸ்டர். 2000ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் உலகின் கமெண்டரி , விவாதங்கள் நடத்தும் குழு என் அனைத்திலும் ஆண்களே இடம் பெற்றிருப்பார்கள். இந்த ஆணாதிக்கத்தை உடைத்து, கமெண்டரி வுமனாக மாறியவர்தான் மந்திரா பேடி. 2003ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மந்திரா பேடியை பார்த்து உலகமே வியந்து போனது. கிரிக்கெட்டைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டே பிராட்காஸ்டராக களம் இறங்கியிருந்தார் அவர்.
பாலிவுட்டில் பெரிய நடிகை இல்லையென்றாலும், ஓரளவுக்கு சம்பாத்தியம் மந்திரா பேடிக்கு இருந்தது. இந்திய மகளிர் அணிக்கு உதவுவதற்காக விளம்பரங்களில் நடித்து, அந்தப் பணத்தை அப்படியே வழங்கினார் மந்திரா பேடி. இந்தப் பணத்தை கொண்டுதான், இந்திய மகளிர் அணியினர் 2003ம் ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடினர். அதுமட்டுமல்ல, தனது பிரபலத்தை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களை அணுகி மகளிர் அணிக்கு ஸ்பான்ஷர்களையும் மந்திரா பிடித்தார். 2003ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இந்திய மகளிர் அணிக்கு ஏதாவது ஒரு வகையில் அவர் உதவிக் கொண்டே இருந்தார். இந்திய மகளிர் அணி தடுமாறிய காலக்கட்டத்தில் கரம் கொடுத்து , கரை சேர்த்தவர் மந்திரா பேடி என்றால் அது மிகையல்ல.
பல ஆண்டு காலப் போராட்டத்துக்கு பிறகு, நடப்பு உலகக் கோப்பையில் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த தருணத்தில் மறக்காமல் மந்திராவின் உதவியை நினைவு கூர்ந்தார் நியூதன். அவர் கூறுகையில், '1973ம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டது. 2006ம் ஆண்டுதான் இந்திய அணியை பி.சி.சி.ஐ தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதுவரை, மகளிர் கிரிக்கெட் அணியினர் தங்களது ஆர்வத்தாலும், அர்ப்பணிப்புணர்வாலும் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தனர். பணமும் எங்களிடத்தில் இல்லை. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, பல NRI வீடுகளில் நமது வீராங்கனைகள் தங்கியிருந்து ஆடினர். இதையெல்லாம் அறிந்த நடிகை மந்திரா பேடி, புகழ்பெற்ற நிறுவனத்தின் வைர விளம்பரத்தில் நடித்து, அந்தப் பணத்தை எங்களுக்குக் கொடுத்தார். அந்தப் பணத்தை கொண்டுதான் அடுத்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். மந்திராவின் உதவியால்தான் நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம். யாருமே மகளிர் விளையாட்டைப் பார்க்காத காலக்கட்டத்தில் இந்த அணிக்கு அடித்தளமாக இருந்தவர் மந்திரா' என்று கூறியுள்ளார்.
கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு மந்திரா பேடி எக்ஸ் பதிவில் கூறிய வாழ்த்தில், 'என்ன ஒரு பயணம், எத்தனை போராட்டம், இனிப்பான வெற்றி. இது ஒரு நீண்ட காலப் பயணம் ' என்று பதிவிட்டிருந்தார்.