சாதனைகளின் நாயகிகள்! #IndiaWomensCricket

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய  கிரிக்கெட் அணி வீராங்கனைகள்
வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள்
Published on

பெண்கள் உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக சாம்பியனாகி அசத்தியுள்ளது இந்திய மகளிர் அணி. மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ 51 கோடியை பரிசாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அவற்றை பார்க்கலாம்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்ரிக்க அணிக்கு 299 ரன்களை இலக்காக வைத்தது. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட இரண்டாவது ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை குவித்திருந்தது.

இந்த தொடரில் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதி ஆட்டத்தில் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முன்னதாக, கடந்த 2005ம் ஆண்டு நீத்து டேவிட் 1982ம் ஆண்டு சுபாங்கி குல்கர்னி ஆகியோர் ஒரே உலகக் கோப்பை தொடரில் 20 விக்கெட்டுகள் எடுத்தே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தீப்தி ஷர்மா இந்த தொடரில் 200 ரன்களையும் அடித்திருந்தார். இதனால், தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஓபனர் ஸ்மிரிதி மந்தனா இந்த தொடரில் 434 ரன்களை அடித்தார். சராசரி 54.25 ஆகும். முன்னதாக , கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 409 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் தொடக்க வீராங்களை ஷஃபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் அடித்திருந்தார். இது, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய ஓபனிங் பேட்டரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். முன்னதாக, 2017ம் ஆண்டு பூனம் ராவுத் இங்கிலாந்துக்கு எதிராக 86 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம்.

உலகக் கோப்பை நாக்அவுட் சுற்று ஆட்டங்களில் மட்டும் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 331 ரன்களை அடித்து புதிய சாதனை படைத்தார். சராசரி 110.33 ஆகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை பெலின்டா கிளார்க் நாக்அவுட் சுற்று ஆட்டங்களில் 330 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் இந்த தொடரில் 12 சிக்ஸர்களை விளாசியிருந்தார். முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தியான்ட்ரா டோட்டீன் 2017ம் ஆண்டு தென்னாப்ரிக்காவின் லிஸ்லே ஆகியோர் ஒரே தொடரில் 12 சிக்ஸர்களை அடித்திருந்தனர். தற்போது, இவர்களின் சாதனையை ரிச்சா கோஷ் சமன் செய்துள்ளார்.

தீப்தி ஷர்மா
தீப்தி ஷர்மா BCCI

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. தொடரின் தொடக்க ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று பலமான அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது . குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால், தொடர் தோல்விகளால் துவண்டுவிடாத இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் அற்புதமாக ஆடி வெற்றியை பெற்றது. வங்கதேசத்துடனான கடைசி லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. புள்ளிகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது. தொடர்ந்து இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன்களை சேஸ் செய்து இமாலய வெற்றியை ருசித்தது. இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையும் கைப்பற்றியது.

இதனால், மகளிர் உலகக் கோப்பை தொடரில், தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வி கண்டாலும், உலகச் சாம்பியனான அணி என்கிற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

Puthuyugam
www.puthuyugam.com