350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்; மிரள வைக்கும் சவுதி!

வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க சவுதி அரசு கடுமையாக மெனக்கெடுகிறது.
Saudi Arabia's NEOM Stadium, part of the ambitious NEOM project, will be the world's first "sky stadium,
Saudi Arabia's NEOM Stadium, part of the ambitious NEOM project, will be the world's first "sky stadium,@Rainmaker1973 - X
Published on

கத்தாரில் கடந்த 2022ம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் நடைபெற்றது. ஒரு இஸ்லாமிய நாட்டில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இந்தப் போட்டியை நடத்துவதற்காக கத்தார் 220 பில்லியன் டாலர்களை செலவிட்டது. அந்தச் சின்ன நாட்டுக்குள் பல இடங்களில் பிரமாண்ட கால்பந்து மைதானங்கள் உருவாக்கப்பட்டன. இந்தத் தொடரில் அர்ஜெண்டினா சாம்பியன் ஆனது. பல ஆண்டுகள் கால்பந்து விளையாடி வந்த லயனல் மெஸ்ஸி முதன்முறையான உலகக் கோப்பையை கையில் ஏந்தி பரவசமடைந்தார். அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பையைப் பெறச் சென்றபோது, கத்தார் ஆட்சியாளர் ஷேக் தாமின் பின் ஹமாத் அல்தானி, மெஸ்ஸியின் தோளில் ஒரு கருப்பு அங்கியை அணிவித்தார். இது அரபு ஆண்களின் பாரம்பரிய உடை ஆகும். இப்படி, கத்தார் உலகக் கோப்பை சிறப்பாக நிறைவுற்றது.

கத்தாரைத் தொடர்ந்து, மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியாவில் வரும் 2034ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. ஆசிய நாடுகளில் நடக்கும் 3வது உலகக் கோப்பைத் தொடர் இதுவாகும். முன்னதாக கடந்த 2002ம் ஆண்டு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து ஃபிஃபா உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளன. 2034ம் ஆண்டு சவுதியில் நடக்கப் போகும் உலகக் கோப்பைத் தொடர், 25வது எடிசன் ஆகும். அதாவது, வெள்ளி விழா உலகக் கோப்பை தொடர்.

Design structure
Design structure @wikipedia

எனவே, இந்தத் தொடரை மிக பிரமாண்டமாக நடத்தி உலக நாடுகளின் நன் மதிப்பைப் பெற்று விட வேண்டுமென்பதற்காக சவுதி அரேபியா கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியுள்ளது. இந்தத் தொடருக்காக தலைநகர் ரியாத்தில் மட்டும் 8 மைதானங்கள் கட்டப்படவுள்ளன. இங்கு புதியாக கட்டப்படவுள்ள கிங் சல்மான் மைதானத்தில் 92 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். அது போல், ஜெட்டாவில் 4 மைதானங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதற்கான கட்டுமானங்கள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில், சவுதி அரேபியா நேற்று ஒரு வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் தரையில் இருந்து 350 மீட்டர் உயரத்தில் அழகுற ஒரு கால்பந்து மைதானம் வடிவமைக்கப்பட்டிருந்த காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ வைரலானது. அதாவது உலகக் கோப்பை கால்பந்துத் தொடருக்காக தரையில் இருந்து 350 மீட்டர் உயரத்தில் ஒரு மைதானத்தை கட்ட சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இப்படி ஒரு மைதானம் அமைக்கப்பட்டால், உலகமே சவுதியை வாய் பிளந்து பார்க்கும் என்பது சவுதி அரசின் எண்ணம். இந்த மைதானம் சவுதியின் நியோம் நகர கட்டுமானத்தின் (Neom megacity project) ஒரு பகுதியாக கட்டப்படுகிறது. சுமார் 46 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து இந்த மைதானத்தில் போட்டியை காண முடியும். இந்த மைதானம் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் முற்றிலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று சவுதி அரசு கருதுகிறது. இந்தக் கட்டுமானத்தின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளார். அவரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த மைதானம் அமையவுள்ளது. இந்த மைதானத்துக்கு இளவரசர் சல்மான் மைதானம் என்ற பெயரே சூட்டப்படவுள்ளது.

நியோம் நகரம் என்பது சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் தபுக் மாகாணத்தில் அமையவுள்ள பிரமாண்ட நகரமாகும். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நகரத்தின் கட்டுமானத்தில் சவுதி அரசு ஈடுபட்டுள்ளனது. இந்த நகரை உருவாக்க 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிக்க திட்டமிடப்பபட்டுள்ளது. பிரமாண்டமான கட்டடங்கள், சாலைகள், உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த நகரம் அமையவுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தைக் கட்டி முடித்து விட வேண்டும் என்பது அந்த நாட்டு அரசின் திட்டம்.

ஆனால், அதேவேளையில் இந்த நகரத்தின் கட்டுமானத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும், மனித உரிமை மீறல் போன்ற விஷயங்களில் சவுதி அரசு ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு. இந்த விமர்சனத்தை வைத்து, சவுதி அரேபியாவுக்கு 2034ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டபோது, பல உலக நாடுகள் ஃபிஃபா அமைப்பை கடுமையாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

Puthuyugam
www.puthuyugam.com