sதற்போது . இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பா.ஜ.க-வில் இணைந்து பணியாற்றியவர். கடந்த 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை டெல்லி கிழக்கு தொகுதி பாஜ எம்.பியாகவும் இருந்தார். பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவையோ இந்திய கிரிக்கெட் பற்றியோ விமர்சித்தால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கும் வழக்கம் கம்பிருக்கு உண்டு. ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகிய அவர், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். இந்திய அணியின் பயிற்சியாளாகவும் மாறினார். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை கவுதம் கம்பிர் பயிற்சியின் கீழ் இந்திய அணி வென்றது. அடுத்ததாக, ஆசிய கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது.
இப்படிப் பயிற்சியாளராக இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கும் கவுதம் கம்பிர் மீது காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது அதிர்ச்சிக்கரமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த ஷாமா முகமது வேறு யாருமல்ல கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தின் போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பிட்னஸ் குறித்து விமர்சனம் செய்தாரே அதே காங்கிரஸ் கட்சி பிரமுகர்தான். அப்போது, "இந்திய கிரிக்கெட் கேப்டன்களிலேயே கவர்ச்சி குறைந்தவர் ரோகித் சர்மா " என்று ஷாமா குறை கூறியிருந்தார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு கருத்தை இந்தியாவின் பிரபல கட்சியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டது கடும் கண்டனத்துக்குள்ளானது. உடனடியாக, ஷாமா தனது கருத்தை வாபஸ் வாங்க வேண்டுமென காங்கிரஸ் கட்சித் தலைவர்களே வற்புறுத்தினர். தொடர்ந்து, ரோகித் சர்மா தனது பிட்னெஸ்ஸில் அக்கறை காட்ட வேண்டுமென்ற நோக்கத்தில்தான், அத்தகைய கருத்தை வெளியிட்டதாக ஷாமா விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் தான் தென்னாப்பிரிக்க" ஏ "அணிக்கு எதிரான இரு நான்கு நாள் ஆட்டங்களுக்கு இந்திய "ஏ "அணி 22 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சர்ஃபராஸ் கானின் பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து, கம்பிர் பக்கம் திரும்பியிருக்கும் ஷாமா முகமது, இந்த முறை மற்றொரு வெடிகுண்டை வீசியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில்,' மும்பை வீரர் சர்பராஸ்கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. காரணம் அவரின் பெயர்தான். இங்கேதான், கம்பிர் எங்கே நிற்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்' என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஷாமாவின் இந்த கருத்து கிரிக்கெட் உலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்திய முன்னாள் வீரர் அதுல் வாசன் ஷாமாவின் கருத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார். அதுல் வாசன் கூறியதாவது, "ஷாமாவின் இந்த கருத்து எதிர்பாராதது. இந்திய கிரிக்கெட் சிஸ்டத்தை அவமதிப்பது போன்றது. பாகிஸ்தானில் இஸ்லாத்தை தழுவினால்தான் கிரிக்கெட் உலகில் சர்வைவல் ஆக முடியும். அல்லது கிரிக்கெட்டை விட்டுப் போய் விட வேண்டுமென்கிற நிலை உள்ளது. அங்கே கிறிஸ்தவ கிரிக்கெட் வீரர்கள்கூட இஸ்லாத்தை தழுவுகின்றனர். இந்து வீரர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையா இந்தியாவில் உள்ளது? வகுப்புவாதத்தை தேவையில்லாமல் கிரிக்கெட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். நான் இந்திய கிரிக்கெட்டர். இந்தியாவில் யார் எங்கே இருந்து வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்த உணர்வு எனக்குள் ஏற்பட்டதே இல்லை. வீரரின் திறமை மட்டும்தான் பார்க்கப்படுகிறது. இந்திய அணியை 12 ஆண்டுகள் கேப்டனாக இருந்து வழி நடத்திய முகமது அசாருதீன் யார் என்பதை ஷாமா வசதியாக மறந்து விட்டார். தற்போதைய , இந்திய அணியில் கூட முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சர்பராஸ்கான் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது தேர்வாளர்களின் முடிவு. அதற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் புறக்கணிப்படுகிறார் என முடிவு செய்து விமர்சிப்பதன்மூலம் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் இந்திய கிரிக்கெட் அமைப்பையும் அவமதிக்கிறீர்கள் என்றே அர்த்தம்."
கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் ஷாமாவின் ட்வீட் மீண்டுமொரு உரையாடலைத் தொடங்கியிருக்கிறது!