மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தனது ஆட்டங்களை இலங்கையில் விளையாடுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் கொழும்புவில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. களமிறங்கிய அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது . பாகிஸ்தானின் தொடக்க வீராங்கனைகளான ஒமைமா சோஹைல், சிட்ரா ஆமின் ஆகியோர் மருபா அக்தர் வேகப்பந்துவீச்சில் அடுத்தடுத்து 'கோல்டன் டக் ' அவுட்டானார்கள். இந்த போட்டியில் வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்தான் மருபா அக்தர்தான். ஆட்ட நாயகி விருதையும் இந்த ஆட்டத்தில் அவர் பெற்றார்.
இவர் வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்ல , சிறந்த ஆல்ரவுண்டரும் கூட. கடந்த 2023 ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முதன்முதலில் கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். அதே ஆண்டில், ESPNcricinfo சார்பாக சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதையும் பெற்றார். தற்போது நடந்து வரும் மகளிர் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மருபாவை வங்கதேச மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதே மக்கள், ஒரு காலக்கட்டத்தில் மருபா அக்தரையும் அவரின் குடும்பத்தினரையும் வெறுத்து ஒதுக்கி வைத்த காலமும் இருந்தது. வறுமையின் பிடியில் சிக்கி , தனது குடும்பத்தினர் வாழ்ந்த காலம் குறித்து மருபா அக்தர் , தற்போது, உருக்கத்துடன் பேசியுள்ளார்.
தனது வாழ்க்கை போராட்டம் குறித்து மருபா அக்தர் கூறியதாவது, 'வங்கதேசத்தில் நீல்பார்மரி மாவட்டத்தில் சயத்பூர் என்பதுதான் எனது சொந்த ஊர். தந்தை , விவசாயி. வீட்டில் பெரிய அளவில் பணம் கிடையாது. உடுத்த நல்ல ஆடை கூட கிடையாது. இதனால் எங்கள் வீட்டை சுற்றி வசிப்பவர்கள் எங்களிடம் ஒட்ட மாட்டார்கள். கல்யாணம் போன்ற நல்ல விஷயங்களுக்கு கூட அழைக்க மாட்டார்கள். காரணம்... எங்களிடம் நல்ல ஆடை இல்லாததுதான். ரம்ஜான் போன்ற பண்டிகை காலத்திலும் நாங்கள் புதிய ஆடை அணிந்தது கிடையாது. ஆனால், கிரிக்கெட் விளையாட நல்ல ஆர்வத்துடன் இருந்தேன். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்தான் எனது ரோல் மாடல். இதற்காக, நான் கடுமையாக உழைத்தேன். இப்போது நான் சம்பாதிக்கிறேன். எனது குடும்பத்துக்கு ஆதாரமாக இருக்கிறேன். என் சிறிய வயதில் எனது ஏழ்மை காரணமாக பலரும் இழிவுப்படுத்தினர். இப்போது, நான் அவர்கள் சாதிக்காததை சாதித்துள்ளேன். என்னை, இப்போது டி.வி.யில் அவர்கள் பார்க்கின்றனர். என்னை கொண்டாடுகிறார்கள். இதற்கு எனது விடா முயற்சிதான் காரணம்' என்கிறார் உருக்கத்துடன்.
விடா முயற்சி, கடும் உழைப்பால் வங்கதேச இளைஞர்கள், இளம் பெண்களுக்கு ரோல் மாடலாகியுள்ள மருபா அக்தர், கடந்த 2020ம் ஆண்டு வங்கதேசத்துக்காக முதன்முதலாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் இறங்கினார். இதுவரை, 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அவரின் பெஸ்ட். டி20 போட்டிகளில் 30 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளை மருபா வீழ்த்தியிருக்கிறார். தற்போது, 20 வயதே ஆவதால், வருங்காலத்தில் வங்கதேச அணிக்காக மருபா பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது.
தடைகளை வென்று சாதித்த மருபா போன்றவர்கள்தான், பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்கள்!