ஆசியக் கோப்பை போட்டி இறுதிப் போட்டிக்கு முன்னதாக தனக்கு சூர்யகுமார் யாதவ் தனியாக கை கொடுத்ததாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் 3 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியது. இந்த ஆட்டங்களின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்கிக் கொள்ளவில்லை. அதோடு, இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்தும் கோப்பையை பெற மறுத்து விட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில், "ஆசியக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடுவர்களுடன் சந்திப்பு நடந்த போது, என்னிடத்தில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனியாக கை கொடுத்தார். அப்போது, அங்கு கேமராக்கள் எதுவும் இல்லை. பப்ளிக்காக கை கொடுக்கத்தான் மறுக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட உத்தரவை அவர் பின்பற்றுகிறார் என்று கருதுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடத்தில் இருந்து கோப்பையை இந்தியா பெற மறுத்தது குறித்து சல்மான் ஆகா கூறுகையில், "இந்த தொடர் முழுவதுமே இந்தியா எங்களை மரியாதைக் குறைவாக நடத்தியது. கை கொடுக்க மறுத்ததன் மூலம் எங்களை அவமானப்படுத்தியது. சொல்லப்போனால், அவர்கள் எங்களை அவமதிக்கவில்லை. கிரிக்கெட்டைதான் அவமதித்துள்ளனர். நல்ல அணி வீரர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். நாங்கள் சென்று எங்கள் மெடலைப் பெற்றோம். எங்கள் கடமையை நிறைவு செய்தோம். நான் எந்த கடினமான வார்த்தையையும் பயன்படுத்த விரும்பிவில்லை. இப்படி , ஒரு நடத்தையை இப்போதுதான் பார்க்கிறேன். இது போன்ற நடத்தை கிரிக்கெட்டுக்கு நல்லது அல்ல. நான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மட்டுமல்ல, கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ரசிகர்களில் ஒருவன். இந்த போட்டியை ஏராளமான குழந்தைகள் பார்க்கின்றனர். அவர்களுக்கு நாம் ரோல் மாடல்களாக இருக்க வேண்டும். இப்படி, நடந்து கொண்டால் நாம் அவர்களை கவர மாட்டோம்.
இந்த ஆசியக் கோப்பை தொடரில் நாங்கள் இந்தியாவுடன் சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை. இந்தியாவை விட நாங்கள் அனைத்து விதங்களிலும் பின்தங்கியுள்ளோம். 1990களில் பாகிஸ்தான் இந்தியாவை எளிதாக வீழ்த்தி விடும். இப்போது, அவர்களை வீழ்த்துவது கடினமாக உள்ளது. இது அவர்களின் காலம். நாங்கள் விரைவில் இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு வலு பெறுவோம். ஆசியக் கோப்பை தொடரில் எங்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்." என்றார்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்து விட்டது. முன்னதாகவே , ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
எனினும், பரிசளிப்பு விழாவில் ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவரான மோஷின் நக்விதான் கோப்பையை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இந்திய அணி வீரர்கள் கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து பெற மாட்டோம் என்று உறுதியாக மறுத்து விட்டனர். இந்திய வீரர்கள் முடிவை ஏற்று நக்வி விலகிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்தான் கோப்பையை வழங்க நின்று கொண்டிருந்தார். பாகிஸ்தான் வீரர்கள் மட்டும் ரன்னர்ஸ் அப் பரிசை வாங்கிச் சென்றுவிட்டனர். இந்தியா ஆசியக் கோப்பையைப் பெறவில்லை. மெடலையும் வாங்கவில்லை. தனிப்பட்ட விருதுகளை வென்ற வீரர்கள் மட்டும் விருதைப்பெற்றனர்.
இதனால், மோஷின் நக்வி வேண்டுமென்றே சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிறது.