"கோப்பையை அந்த ஜென்டில்மேன் ஹோட்டலுக்கு எடுத்து சென்று விட்டார்''

பாகிஸ்தான் அமைச்சரிடத்தில் இருந்து இந்திய வீரர்கள் கோப்பையை பெற மறுத்த நிலையில், பி.சி.சி.ஐ கூறிய அதிர்ச்சித் தகவல்
India celebrating victory of Asia Cup 2025
India celebrating victory of Asia Cup 2025 indiancricketteam - Instagram
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோரை வீழ்த்தும் முனைப்பில் இருந்த பாகிஸ்தான் அணி , மற்றொரு இந்திய வீரரான திலக் வர்மாவை கணிக்கத் தவறி விட்டது. பாகிஸ்தான் அணி அபிஷேக், சூர்யகுமாரின் விக்கெட்டுகளை எளிதாக எடுத்து விட்டது.

ஆனால், நின்று விளையாடிய திலக் வர்மா அபாரமாக விளையாடி 69 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்த தொடரில் இந்திய அணியுடன் விளையாடிய 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோற்றுப் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு பி.சி.சி.ஐ ரூ. 21 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

முன்னதாக, இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்றால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அந்த நாட்டு அமைச்சருமான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இது குறித்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் முன்னதாகவே தெரிவித்தும் விட்டார். சூர்யகுமாரின் முடிவை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்பட்டது. பாகிஸ்தான் தரப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனாலும், இறுதிப் போட்டிக்கு கோப்பையைப் பரிசளிக்க மோஷின் நக்வி வந்திருந்தார். போட்டி முடிந்ததும், கோப்பை மற்றும் மெடல்களுடன் நக்வி பரிசளிக்க போடியத்துக்கு வந்தார். ஆனால், அவரிடத்தில் இருந்து இந்திய கேப்டன் சூர்யகுமார் கோப்பையை பெற மறுத்து விட்டார். இதையடுத்து , ஆசிய கோப்பையும் மெடல்களையும் ஏ.சி.சி. நிர்வாகம் மீண்டும் எடுத்து சென்று விட்டது. பின்னர், இந்திய வீரர்கள் வெறும் கையுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Celebrating Wicket
Celebrating WicketAsia Cricket Council

இந்த சம்பவம் குறித்து பி.சி.சி.ஐ பொது செயலாளர் தேவஜித் ஷைகியா கூறுகையில், "இந்திய மக்களின் சென்டிமென்ட் காரணமாக இந்த முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசின் கருத்தை ஒட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகப் போர் புரியும் ஒரு நாட்டு அமைச்சரிடத்தில் இருந்து கோப்பையை வாங்க மாட்டோம். இதையடுத்து அந்த ஜென்டில்மேன், கோப்பையையும், மெடல்களையும் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தூக்கிச் சென்று விட்டார். இத்தகையை குழந்தைத்தனமான நடத்தையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

15 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தானுடன் எந்த இரு தரப்பு கிரிக்கெட் தொடரையும் நாங்கள் விளையாடவில்லை. ஆசியக் கோப்பை போன்ற ஐ.சி.சி தொடர்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில்தான் அந்த அணியை நாங்கள் எதிர்த்து விளையாடுகிறோம். இது தொடர்பாக, ஐ.சி.சியிடம் நாங்கள் புகார் அளிப்போம். இந்த தொடரில் 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தானை வீழ்த்தியிருப்பது நாடு முழுவதுமே ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், 'விளையாட்டுக் களத்தில் நிகழ்த்தப்பட்ட சிந்தூர் ஆபரேஷன். அதே ரிசல்ட், வெற்றி!'என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா, ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, அமிதாப்பச்சன், பி.வி.சிந்து, ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்களும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

Puthuyugam
www.puthuyugam.com