வழக்கமாக கோயில்களுக்குச் சென்று கடவுள்களை வணங்குவோம். அது, பெருமாளாக இருக்கலாம். சிவனாக இருக்கலாம். அல்லது பார்வதியாக இருக்கலாம். ஹனுமானாவும் இருக்கலாம். ஆனால், ராஜஸ்தானில் என்பீல்டு பைக் ஒன்று சாமியாக உள்ளது என்பது விசித்திரமாக இருக்கிறது அல்லவா? புல்லட் பாபா கோவில் என்றும் இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை இணைக்கும் என்.ஹெச் 62 தேசிய நெடுஞ்சாலையில் ஜோத்பூர் அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. ஜோத்பூர் அருகேயுள்ள பாலி என்ற நகரத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் ரத்தோட். இவர், 1988ம் ஆண்டு தனது என்பீல்டு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓம் பிரகாஷ் ரத்தோட் இறந்து போனார். இதையடுத்து, போலீசார் அந்த பைக்கை எடுத்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். ஆனால், அடுத்த நாளே பைக் காணாமல் போய் விட்டது.
போலீசார் தேடிய போது, விபத்தில் ஓம் பிரகாஷ் ரத்தோட் இறந்த இடத்தில் அந்த பைக் தென்பட்டது. மீண்டும், போலீசார் அந்த பைக்கை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். ஆனால், அடுத்த நாளும் பைக் காணாமல் போய் விட்டது. இதனால், போலீசார் வியந்து போனார்கள். மீண்டும் அதே இடத்தில் பைக் தென்பட்டுள்ளது. இந்த முறை பைக்கை மீட்ட போலீசார், பெட்ரோலை முற்றிலும் அகற்றி விட்டு, இரும்பு சங்கிலி போட்டு அதை கட்டி வைத்தனர். ஆனால், இந்த முறையும் புல்லட் காணாமல் போய் விட்டது. மீண்டும், விபத்து நடந்த இடத்தில் புல்லட் இருந்தது. இதனால், போலீசார் ஆச்சரியப்பட்டு போனார்கள். உள்ளுர் மக்களும் விஷயம் அறிந்து வியந்தார்கள்.
இதையடுத்து, புல்லட்டுக்கும் ஓம் பிரகாஷ் ரத்தோடுக்கும் கோயில் கட்ட மக்கள் விரும்பினர். மக்கள் விருப்பத்துக்கு போலீசாரும் தடையாக இருக்க விரும்பவில்லை.
தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டு, அங்கு, சாமியாக என்பீல்டு புல்லட் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, மக்கள் அதை புல்லட் கோயில் என்று அழைத்தனர். புல்லட்டை சாமியாக மக்கள் வழிபட்டனர். இதற்கிடையே, இரவு நேரத்தில் இந்த பைக்கை ஓம் பிரகாஷ் ரத்தோட் ஓட்டுவதாவும் அதை தாங்கள் நேரில் பார்த்ததாகவும் உள்ளுர் மக்கள் கூற தொடங்கினர். தொடர்ந்து, ஓம் பிரகாஷ் ரதோடுக்கு அங்கு சிலை வடிவமைக்கப்பட்டது. தினமும் புல்லட்டுக்கு மாலையிட்டு ஹெட்லைட்டில் திலகமிட்டு மக்கள் வழிபடுகின்றனர். காணிக்கைப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த கோயில் அந்த பகுதியில் வெகு பிரபலம். என்.ஹெச் 62 தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த கோயிலில் நிறுத்தி வழிபட்டு விட்டு செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். புல்லட் பாபா பாதுகாப்பான பயணத்துக்கு உதவியாக இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் நம்புகின்றனர்.
என்பீல்டு பைக், கார் போன்றவற்றை காதலி போல நேசிக்கும் மனிதர்கள் பலரும் உண்டு. அந்த வகையில், சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்த குய் என்பவர், மரணத்திற்கு பின்னரும் தன்னுடைய கார் பிரியவே கூடாது என தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். கடந்த 2018ம் ஆண்டு குய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். இதனைத்தொடர்ந்து குய்யின் விருப்பத்தை குடும்பத்தினர் நிறைவேற்றினர். குய்யின் உடலை காரில் வைத்து பெரிய குழியில் புதைத்து, அவேரின் ஆசையை நிறைவேற்றினர். குய்யின் உடல் காருடன் புதைக்கப்பட்ட வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது.
அதேபோல, கடந்த 2024ம் ஆண்டு குஜராத் மாநிலம் அம்ரெலியில் தொழிலதிபர் ஒருவர், தான் முதன்முதலில் வாங்கிய வேகன் ஆர் காரை மண்ணுக்குள் புதைக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த கார் வாங்கிய பிறகு, தனது தொழில் பல மடங்கு பெருகியதால், சஞ்சய் போலேரா என்ற அந்த தொழிலதிபர் காரை அதிர்ஷ்டமானதாக பார்த்தார். இதனால், ஆயுட்காலம் முடிந்ததும், தனது காருக்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடத்தினார். 12 அடி குழி தோண்டப்பட்டு, கார் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது. அதன் நினைவாக, மரக்கன்றும் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 1500 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. காருக்கு இறுதிச்சடங்கு நடத்தவதற்காக சஞ்சய் போலேரா 4 லட்சம் வரை செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.