இதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறதோ, அதைப் பற்றி நான் இங்கு பேசப்போவதில்லை. ஆனால், ஒரு சில மரணங்களை அருகிலிருந்து பார்க்கும் துர்பாக்கியம் எனக்கிருந்ததால், அதைப் பற்றி சொல்ல வேண்டியதிருக்கிறது.
மிக நல்ல மனிதர். வாழ்வதற்கான மிகுந்த ஆசையும், பிரயத்தனமும் அவரிடமிருந்தது. ஆனால், கேன்சர் அவரது ஆசையை நிராகரித்துவிட்டது. நல்ல மனிதராச்சே, மரணம் சிரமம் தராது அவரை எடுத்துக்கொள்ளக் கூடாதா? அல்லது அவராவது ஓரளவு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோம், சரி போகலாம் என்ற நிறைவை அடைந்துவிடக்கூடாதா? இயற்கைக்கு முன்னால், நமது எந்த தர்க்கங்களுக்கும் விடை கிடையாது. இரண்டு வருடங்களாகப் வலியோடும், இயலாமையோடும், சிந்தனைக் குழப்பத்தோடும் போராடித்தான் இறந்தார் அவர்.
நாம் காணும் ஒவ்வொரு மரணமும், வாழ்க்கையின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. அது இறுதி அல்ல, ஒரு புதிய தொடக்கத்தின் அமைதி.
கடைசி விநாடியில் ஒரு புன்னகை, ஒரு அரவணைப்பு
ஆனால், அவரது இறுதி விநாடியில் அருகிலிருந்தேன். வாழ்நாள் முழுதும் பிறர் முன்னிலையில் மனைவியை அணைத்துக்கொள்ளாத அந்த மனிதர், அருகிலிருப்பவரை சட்டை செய்யாமல், மனைவியை அழைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். முகத்தில், நீண்ட நாட்களாகப் பார்க்க முடியாத ஒரு நிம்மதியான புன்னகை தோன்றியது. கண்களில் நிச்சயம் வலி இல்லை.
அந்தப் பார்வையில், வங்கிக் கணக்கை என்ன செய்ய வேண்டும்? சொத்துக்களைப் பிள்ளைகளுக்கு எப்படிப் பிரித்துத் தர வேண்டும்? மேஜை டிராயரில், முத்துவுக்குத் தர வேண்டிய ஒரு ஃபைல் இருக்கிறது என்ற தகவலைத் தர வேண்டுமே? என்ற எந்த விதமான லௌகீக விசயங்களைப் பற்றியும் கவலையும் இல்லை. அதே நேரம், இந்தப் பொல்லாத உலகில் நாமின்றிப் பிள்ளைகள் என்ன செய்யும்? வாழ்நாளெல்லாம் காதலித்துக் காத்த மனைவியை பிள்ளைகள் காப்பார்களா? எனும் கவலைச் சிந்தனையும் கூட இருந்ததாகப் படவில்லை எனக்கு. பூரண ஓய்வை நோக்கிச் செல்லும் ஒரு நிறைவுதான் (Perfect completion) இருந்தது என்பதைக் கண்டேன். இப்படியேத்தான் இன்னொரு நெருங்கிய உறவின் மறைவிலும் உணர்ந்தேன்.
ஒவ்வொரு கதையின் கடைசி வரியும் நிறைவானது
எந்த ஒரு கதையின் இறுதிக்கட்டமும் போராட்டமாய் இருக்கலாம்தான். ஆனால், அந்தக் கடைசி வரி நிறைவானதாகத்தான் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. எல்லோருக்கும் இருக்கக்கூடிய மரணம் குறித்தான பயம் அந்த விநாடியில் என்னை விட்டு விலகியது. உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்.
இதை எழுதி முடித்துவிட்டு ஜெமினியைக் கேட்டுப் பார்த்தேன், அறிவியல் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று, பார்த்துக்கொள்ளுங்கள், கீழே!
உடல் சார்ந்த உணர்வுகள்:
வலி குறைதல்: நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், மரணம் நெருங்கும் போது, உடலில் ஏற்படும் வலிகள் படிப்படியாகக் குறைவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
சுகமான உணர்வு: சிலர், ஒருவித அமைதியான, சுகமான உணர்வு ஏற்படுவதாக, மிதப்பதைப் போன்ற லேசான உணர்வு என்று விவரிக்கிறார்கள்.
மனம் சார்ந்த உணர்வுகள்:
அமைதி: பெரும்பாலானோர் கடைசி விநாடிகளில் பயம், பதற்றம் இல்லாமல் மிகவும் அமைதியான மனநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பிரிவு: சிலர் அழகான ஒளி அல்லது வெளிச்சத்தை நோக்கிப் பிரிந்து செல்வதாகவும், அது மிகவும் நிம்மதியான உணர்வை அளிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

