இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே பெண்கள் அர்ச்சகர்களாக, பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களில் மட்டுமே அதுவும் சாத்தியமாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீநாராயணகுருவால் உருவக்காப்பட்ட குத்ரோலி ஸ்ரீ கோகநாத கோவிலில் பெண்கள் அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் இங்கு பெண்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். 2023ம் ஆண்டு முதல் தமிழகத்திலும் 3 பெண்கள் அர்ச்சகர்களாக பணியாற்றுகின்றனர். ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் கோவில் நடத்தும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து இவர்கள் அர்ச்சகர்களாகியுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண் அர்ச்சகர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது, மற்றொரு தென்மாநிலமான கேரளாவில் முதன்முறையாக பெண் ஒருவர் அர்ச்சகராகியுள்ளார். திருச்சூரை சேர்ந்த ஜெயலட்சுமி (58) என்பவர் கேரள தேவசம் போர்டு அங்கீகரித்த விதிகாச்சார்யன் திலகன் தந்திரி என்பவர் நடத்தி வரும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து அர்ச்சகராகியுள்ளார். இவருடன், சேர்ந்து மேலும் இரு பெண்கள் அர்ச்சகராக பயிற்சி பெற்று வந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அவர்கள் பின்வாங்கி விட்டனர். தற்போது, ஜெயலட்சுமி அர்ச்கராகியிருப்பதால், அடுத்த பேட்ஜில் மேலும் 3 பெண்கள் சேர்ந்துள்ளனர். பயிற்சி முடித்ததும் இவர்கள் பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள்.
ஜெயலட்சுமி சிறந்த யோகா ஆசிரியரும் கூட. இவருக்கு சிவானந்தன் என்ற கணவரும் இரு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் அகில் தனது மனைவியுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். இளையமகன் அதுல் ஆனந்த் அபுதாபியில் வசிக்கிறார். அர்ச்சகரானது குறித்து ஜெயலட்சுமி கூறுகையில், 'எனது கணவரும் குடும்பத்தாரும் கொடுத்த, உற்சாகத்தால் என்னால் இந்த அர்ச்சகராக முடிந்துள்ளது. கோவிலில் கருவறையை திறந்து பூஜை செய்யும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்' என்கிறார்.