

ஒருபுறம், தாமிரபரணி எனும் பொருநை ஆற்றின் கரையில், தமிழரின் தொல்பழங்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கண்டறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே நேரம், தற்காலத் தமிழ் இலக்கியத்தைச் சீரோடு வளர்ப்பதிலும் திருநெல்வேலிக்குத் தனித்த இடமுண்டு.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், ரசிகமணி டிகேசியில் தொடங்கி கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, தி.க.சிவசங்கரன், சு.சமுத்திரம், நா.வானமாமலை, வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன் போன்ற எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளை தமிழுக்கு வழங்கிய பெருமை நெல்லைக்கு உண்டு.
கடந்த 10ம் தேதி தொடங்கிய, 9-வது பொருநை புத்தகக் காட்சி ’திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்’தில் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இது பிப்ரவரி 22ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கவிருக்கிறது. மழை, வெயிலால் பாதிப்பில்லாத வகையில் முழுதும் குளிரூட்டப்பட்ட அரங்குகளில், இந்தக் கண்காட்சி நடக்கிறது. நுழைவுக் கட்டணமோ, வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணமோ கிடையாது. வாசகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா, வெறும் புத்தக விற்பனைத் தளமாக மட்டுமின்றி, தென் தமிழகத்தின் அறிவுசார் அடையாளமாகவும் மாறிக் கொண்டுவருகிறது. அதற்கேற்ப, இந்த ஆண்டு பொருநை புத்தகக் காட்சி பல புதிய பரிமாணங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் அதிக அளவில், நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் தங்களின் ஆயிரக்கணக்கான படைப்புகளுடன் பங்கேற்றுள்ளன. சங்க இலக்கியம் முதல் சமகால ஏஐ தொழில்நுட்பம் வரையிலான புத்தகங்கள் ஒருபுறம் விற்பனைக்கு அணிவகுக்கின்றன.
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள் ஒருபுறம், ஒரு குட்டி ‘பொருநை அருங்காட்சியகமா’கவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது இளைய தலைமுறைக்குத் நம் வரலாற்றைக் கொண்டுசெல்லும் முயற்சியாக அமைந்துள்ளது.
மாலை நேரங்களில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பேச்சாளர்களின் உரைகள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றம், கவிதை மன்றங்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதோடு, வெவ்வேறு அரங்குகளில் ஓவியக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் மற்றும் விளைபொருட்கள் விற்பனை அங்காடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டி ஸ்டால்களும் உண்டு.
கடந்த சில ஆண்டுகளாக, நெல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பெரும்பேறாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் நெல்லையைச் சேர்ந்த கவிஞரும், கலை பதிப்பக நிறுவனருமான திரு. பாப்பாக்குடி இரா.செல்வமணி. மேலும், சமகால நெல்லை மண்ணின் படைப்பளர்களுக்கென்றே ஒரு தனி ஸ்டால் அமைக்கப்பட்டு அவர்களது நூல்கள் ஒருங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அலைபேசித் திரைகளில் மூழ்கியிருக்கும் நம் வீட்டுக் குழந்தைகளை புத்தக வாசனையை நோக்கி இழுக்க, இது ஒரு நல்வாய்ப்பு. சிறுவர்களுக்கெனத் தனி அரங்குகளும், கதை சொல்லும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் என்பன காலத்தின் ஆவணங்கள். ’புத்தகம் வாங்குவதை ஒரு செலவாகக் கருதாமல், அதை ஒரு முதலீடா’கக் கருதும் என்ற உயரிய பண்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்களும், தவறாது உங்கள் குடும்பத்தினருடன் ஒருமுறை பொருநை புத்தகக் காட்சிக்குச் சென்று வாருங்கள், ஒரு நல்ல புத்தகம் உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடக்கூடும்!