35 ஆண்டுகளுக்கு பிறகு ஓரு ஆண் பிரதமர்! #Bangladesh #KhaledaZia

வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த நாட்டில் ஆண் ஒருவருக்கு பிரதமராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
Tarique Rahman
Tarique RahmanWalid Bin Salauddin - Facebook
Published on

வழக்கமாக முதன்முறையாக பெண் ஒருவர் பிரதமராகியுள்ளார் அல்லது ஆட்சியைப் பிடித்துள்ளார் என்கிற செய்திகள்தான் உலா வரும். தற்போது, 'முதன்முறையாக ஆண் ஒருவர் ஆட்சியைப் பிடித்துள்ளார். அதுவும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு!' என அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து செய்தி பரவி வருகிறது.

வங்கதேசத்தில் 13வது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், கலிதா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கலிதா ஜியா கடந்த டிசம்பர் மாதத்தில் காலமானார். இதையடுத்து, வெளிநாட்டில் வசித்து வந்த கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தாய்நாடு திரும்பி, கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். நடந்து முடிந்த தேர்தலில் டாகா- 17 மற்றும் பொகுரா- 6 ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றார்.

கடந்த 2018 - ம் ஆண்டு கலிதா ஜியா சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து தாரிக் ரஹ்மான் கட்சியின் செயல் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். வங்கதேசத்தின் மற்றொரு பெண் அரசியல் தலைவரான ஷேக் ஹசீனாவை கொலை செய்யத் திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்தன. எனினும், கடந்த 2008 ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு குடிபெயர்ந்த அவர், அங்கேயே வாழ்ந்து வந்தார். 2024ம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்ததது. தாய்நாட்டில் இருந்து விரட்டப்பட்ட அவர் , இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால், 17 ஆண்டுகளுக்கு பிறகு தாரிக் ரஹ்மானுக்கு தாய்நாடு திரும்ப இருந்த தடை விலகியது.

வங்கதேச தேசியக் கட்சியை தாரிக் ரஹ்மானின் தாத்தாவும் கலிதா ஜியாவின் தந்தையுமான ஜியாவூர் ரஹ்மான் தோற்றுவித்தார். 1981ம் ஆண்டு நடந்த ராணுவப்புரட்சியின் போது, அவர் கொல்லப்படவே, கலிதா ஜியா அரசியலுக்குள் நுழைந்தார். 1991ம் ஆண்டு முதன்முறையாக வங்கதேச பிரதமருமானார். வங்க தேசத்தைப் பொறுத்தவரை, கடந்த 1988 முதல் 90ம் ஆண்டு வரை, காஷி ஜப்பார் அகமது என்பவர் பிரதமராக இருந்தார். இவர்தான் அந்த நாட்டின் கடைசி ஆண் பிரதமர். தொடர்ந்து, கலீதா ஜியாவும் பின்னர், ஷேக் ஹசீனாவும் பிரதமராக அந்த நாட்டை ஆண்டு வந்தனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் அந்த நாட்டில் ஆட்சியில் இருந்தனர்.

தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாட்டில் வங்கதேச தேசிய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. கடைசியாக இந்தக் கட்சி 2001 முதல் 2006ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. இந்த சமயத்தில், இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் உறவு மிகவும் சீர் குலைந்து போனது. அரசியல் முடிவுகளை தாரிக் ரஹ்மான் எடுத்தே காரணமென்றும் சொல்லப்பட்டது. வங்கதேசத்தின் 'இருட்டு அரசர் 'என்றும் அந்த நாட்டு பத்திரிகைகள் தாரிக் குறித்து பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதின. இதையடுத்தே, ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவளிக்கத் தொடங்கியது.

Tarique Rahman and his family members with Chief Adviser Professor Muhammad Yunus
Tarique Rahman and his family members with Chief Adviser Professor Muhammad Yunus pressinform.gov.bd - Wikipedia

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே வெற்றி ஊர்வலங்களை நடத்த வேண்டாம் என்று வங்கதேச தேசியக் கட்சி தொண்டர்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கட்சி தெரிவித்துள்ளது. மாற்று மத வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றதும் வங்கதேச தேசியக் கட்சி இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளது. வங்கதேச தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நஸ்ருல் இஸ்லாம் கான் கூறுகையில், ''புதிய அரசின் கீழ் இந்தியாவுடனான உறவு மேம்படும். எங்கள் தலைவருக்கு மோடி வாழ்த்துத் தெரிவித்ததற்கு நன்றி. வங்கதேச மக்களின் தீர்ப்பை மோடி அரசும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்" என்றார்.

வங்கதேசத்தில் மொத்தம் 299 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 151 தொகுதிகள் தேவை என்கிற நிலையில், 181 தொகுதிகளில் வங்கதேச தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி கட்சிகள் 68 இடங்களை கைப்பற்றியுள்ளன.

Puthuyugam
www.puthuyugam.com