பிரிட்டன் பெண்ணுக்கு 80 வயதில் இந்திய குடியுரிமை ... பின்னணி என்ன?

கேரளாவில் கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி கிடையாது. ஆனால்,பெபிதா சேத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருந்தது.
Pepita Seth receives Indian Citizenship.
Pepita Seth receives Indian Citizenship. @shorts_91 and Wikipedia
Published on

இந்தியக் கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்டு கேரளாவில் செட்டிலான பிரிட்டனைச் சேர்ந்த பெபிதா சேத்துக்கு முதிர்ந்த வயதில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்தவர் பெபிதா சேத். 1942ம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவரது, தாத்தா இந்தியாவில் பிரிட்டன் ராணுவ வீரராக பணியாற்றியவர். அந்த வகையில், பெபிதா இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஒரு முறை தாத்தாவின் டைரியை எடுத்து படித்தபோது, பெபிதாவுக்கு இந்தியா மீது மிகுந்த பற்று ஏற்பட்டது.

தொடர்ந்து, தனது 27 வயதில் இந்தியாவுக்கு பெபிதா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர், இந்தியாவில் கேரளாவில் திருச்சூரில் செட்டிலாகி விட்டார். கேரளா, திருச்சூரில் சேலை உடுத்தி இந்தியப் பெண்கள் போலவே வாழத் தொடங்கினார். பெபிதா சிறந்த எழுத்தாளர் மற்றும் புகைப்பட கலைஞரும் ஆவார்.

கேரள கோயில்கள், கலாசாரம், தெய்யம் உள்ளிட்ட நடனக்கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். குருவாயூர் கேசவன் என்ற யானை கேரள மக்களின் அன்புக்குரியது. குருவாயூர் கோயில் யானையான இதற்கு, கோயில் அருகேயே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு குருவாயூர் கேசவன் மீது கேரள மக்கள் அன்பு கொண்டிருந்தனர். கடந்த 1976ம் ஆண்டு இந்த யானை இறந்தது.

குருவாயூர் கேசவன் உயிரோடு, இருந்தபோது , அதனுடன் நெருங்கிப் பழகிய அனுபவமும் பெபிதாவுக்கு உண்டு. குருவாயூர் கேசவனை இவர் எடுத்த விதவிதமான புகைப்படங்கள் வெகு பிரபலம். குருவாயூர் கேசவன் பற்றி பெபிதா சேத் கூறுகையில், ''அவனை நான் ஒரு விலங்காக பார்க்கவில்லை. அவனது பார்வையில் ஒரு தெய்வீக சக்தி தெரியும்'' என்று சிலாகித்துள்ளார்.

கேரளாவில் குருவாயூர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி கிடையாது. ஆனால், 1981ம் ஆண்டு முதல் பெபிதா சேத்துக்கு கேரளாவிலுள்ள எந்த கோயிலுக்கும் செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அவர் ஆற்றிய சேவைக்காக கடந்த 2012ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

Pepita Seth
Pepita Sethmanorama online

கேரளா தத்தெடுத்துக் கொண்ட மகள் என்ற செல்லப்பெயரும் பெபிதா சேத்துக்கு உண்டு. இந்தியாவில் 53 ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி விட்டாலும் , அவருக்கு இதுவரை இந்தியக் குடியுரிமை வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்தியக் குடியுரிமை பிப்ரவரி 7ம் தேதி பெபிதாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது, அவருக்கு 80 வயதாகும் அவரிடத்தில், திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் பாண்டியன் இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கினார்.ஆவணங்களை பெற்றுக் கொண்ட பெபிதா சேத், 'இந்தியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்' என்று கூறி மகிழ்ந்தார். தான் எழுதிய சில புத்தகங்களை மாவட்ட ஆட்சியருக்கு பரிசாக வழங்கி பெபிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பெபிதா சேத்தின் கணவரின் பெயர் ரோஷன் சேத் . இவர் வேறு யாருமல்ல ரிச்சர்ட் அட்டன்பாரோ இயக்கத்தில் வெளியான ஆஸ்கர் பரிசு வென்ற 'காந்தி ' படத்தில் ஜவஹர்லால் நேரு பாத்திரத்தில் நடித்தவர்தான்.1980ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். 2004ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்ற விட்டனர். பெபிதா எழுதிய புத்தகங்களில் Temples of Malabar ,God’s Mirror , The Theyyams of Malabar ஆகிய புத்தகங்கள் வெகு பிரபலம்.

Puthuyugam
www.puthuyugam.com