வைரலாகியிருக்கும் எப்ஸ்டின் ஃபைல்ஸ்!- யாரிந்த எப்ஸ்டின்? #EpsteinFiles

இந்தக் கதை இவரோடு இங்கே முடியப்போவதில்லை! எப்ஸ்டின் இறந்துவிட்டான். ஆனால், அவன் உருவாக்கிய அதிகார–குற்ற அமைப்பு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!
Representation of Epstein Files
Representation of Epstein FilesAI GENERATED
Published on

ஒரே வரியில் சொல்வதானால், ஜெஃப்ரி எப்ஸ்டின் (Jeffrey Epstein) எனப்படும் அமெரிக்கன் ஓர் அரசியல் புரோக்கர், பொருளாதார புரோக்கர், பாலியல் புரோக்கர்! மூன்றையும் ஒன்றுக்குள் ஒன்றாகப் புகுத்தி மிகப்பெரும் பில்லியனரானவன்! எல்லாவற்றுக்கும் உச்சமாக, 18 வயதுக்குக் கீழான நூற்றுக்கணக்கான சிறுமிகளைத் தன் பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய ஒரு பீடோஃபைல் குற்றவாளி!

ஏனிந்தத் திடும் பரபரப்பு?

எப்ஸ்டின் தற்போது உயிரோடில்லை எனினும், அவன் சம்பந்தப்பட்ட போட்டோக்கள், விடியோக்கள், ஈமெயில்கள், ஆவணங்கள் அடங்கிய மிகப்பெரிய கோப்பு ஒன்று பொதுவெளியில் வெளியாகியிருக்கிறது. அதில், அமெரிக்கா, இங்கிலாந்து, சில ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பற்றிய  குறிப்புகளும் உள்ளன. இந்தியாவின் பெயரும் இதில் அடிபடுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் அரசியல், பொருளாதார லாபங்களுக்காக அவனோடு தொடர்பிலிருந்தார்களா? அல்லது அவனது பாலியல் சேவைகளிலும், குற்றத்திலும் பங்குபெற்றார்களா? அந்தக் குறிப்புகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை. அதுவே, இந்த விசயம் இப்போது விவாதப் பொருளானதற்குக் காரணம். அவனது விர்ஜின் ஐலேண்ட் எனப்படும் தீவுக்கு யாரெல்லாம் வந்து போனார்கள்? அங்கு என்னென்னவெல்லாம் குற்றச் செயல்கள் நடந்துகொண்டிருந்தன? அவற்றில் இவர்களுக்கெல்லாம் எந்தளவுக்குப் பங்கு இருந்தது? இதெல்லாம்தான் இப்போது நம் முன்னாலிருக்கும் முக்கியமான கேள்விகள்.

எப்ஸ்டினின் வளர்ச்சி!

1953ல் அமெரிக்கா, நியூயார்க்கில் பிறந்த எப்ஸ்டின் கல்லூரிப்படிப்பைக்கூட முழுமையாக முடிக்காமல், 21 வயதிலேயே ஃபிராடுத்தனம் செய்து கொஞ்ச காலத்துக்குப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவன். 1970களின் பிற்பகுதியில் ஒரு வங்கியில் பணியாற்றினான். இயல்பிலேயே, கவர்ச்சிகரமான பேச்சு, புத்திசாலித்தனம் போன்றவற்றால் சீக்கிரமாகவே முன்னேறி, 1980களின் தொடக்கத்திலேயே ஒரு நிதி மேலாண்மை நிறுவனத்தை தொடங்கி வளர்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக பெரும் பணக்காரர்களுக்கான பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றி, இவனும் மிகப்பெரிய அளவில் வேகமாக வளர்கிறான். 1990கள் மற்றும் 2000களில் அமெரிக்காவின் மிகப்பெரிய அதிகார மையமான அந்நாள், பின்னாள் அமெரிக்க அதிபர்கள், இங்கிலாந்து அதிகார வர்க்கம், பிரபலமான தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என மிகப்பெரிய மனிதர்களோடு அவனுக்குப் பழக்கம் ஏற்படுகிறது.

அதே நேரம், சொந்தமாக தனித்தீவுகள், தனி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அமெரிக்காவின் பெரிய நகரங்கள்தோறும் பெரும் வீடுகள், அரண்மனைகள் என மிக வேகமாக வளர்கிறது அவனது சொத்துக்கள். அது மட்டுமல்லாது, அவனது பழக்கவழக்கம், தொழில் தொடர்புகள் அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அதைத்தாண்டியும் பரவுகிறது.

இதையெல்லாம் சாதிப்பதற்கு அவன் பெண்களையும், பாலியல் தொழிலையும் பயன்படுத்திக்கொண்டிருந்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், இதே காலகட்டத்தில்தான், அதாவது 1990களின் தொடக்கத்திலிருந்தே இன்னொரு கொடூரத்தையும் அரங்கேற்றி வந்திருக்கிறான். பொருளாதாரத்திலோ, உறவினர் பாதுகாப்பிலோ குறைவாக இருந்த 18 வயது நிரம்பாதப் பள்ளிச் சிறுமிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பணத்தாசை காட்டி அவனது பால்ம் தீவு எஸ்டேட்டுக்கு வரவழைத்து அவர்களின் அறியாமை, பயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பெருமளவில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியிருக்கிறான்.

பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. இப்போது சுமார் 40 வயதைத் தாண்டிய நிலையில் அந்தப் பெண்கள் அவர்களது 12, 14 வயதுகளில் நடந்த அச்சம்பவங்களை நினைவுகூர்கையிலும், கண்ணீர் வழிய நிற்பது நம் மனதை உலுக்குகிறது.

எப்ஸ்டினின் வீழ்ச்சி!

முதன்முறையாக பால்ம் தீவில் 2005ல் அவனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி போலீஸில் முறையிடுகிறாள். அப்போது எப்ஸ்டின் நினைத்துக்கூட பார்க்க முடியாத உயரத்திலிருக்கிறான். அதிகாரம் எனும் திரைமறைவுக் கரங்கள் அவனைக் காக்க, 2009ல் வெறும் 18 மாத சிறைத் தண்டனையோடு தப்பிவிடுகிறான். அதுவும் அடையாளச்சிறை! அதாவது வாரத்துக்கு 6 நாட்கள் அவன், அவனது நிறுவனப் பணிகளுக்காக 12 மணி நேரம் வெளியே போய்விட்டு வரலாமாம். இரவில் தங்குவதற்காக மட்டும் சிறைக்கு வந்தால் போதுமானது. ஒரு பீடோஃபைல் குற்றவாளிக்கு இப்படி ஒரு தீர்ப்பு என்பது அநீதியின் உச்சம் என்றே பார்க்கப்படுகிறது.  

Jeffrey Epstein and his Private Island
Jeffrey Epstein and his Private IslandWikipedia

அப்போது அவன் தப்பினாலும், உண்மை அவ்வளவு எளிதில் உறங்கிவிடுதில்லை. அவை மண்ணில் புதைக்கப்பட்ட விதைகள் போல! தாமதமானாலும், முளைத்து மேலே வந்துவிடும். அவனுக்குக் கிடைத்த 2009 தண்டனையால் மனம் குமைந்துகொண்டிருந்த, அவனால் பாதிக்கப்பட்ட வர்ஜீனியா லூயிஸ் ஜிஃப்ரே (Virginia Louise Giuffre) எனும் பெண், அவன் நிம்மதியாக உலவுவதை பார்க்கப் பொறுக்காமல் தவித்துக் கொண்டிருந்தார். 2015 வாக்கில் எப்ஸ்டினின் அனைத்துக் குற்றங்களிலும் உடனிருந்து உதவிய அவனது பெண் தோழியான கிலெயின் மேக்ஸ்வெல் (Ghislaine Maxwell) எனும் பெண் மீது வழக்குத் தொடுக்கிறார். அப்போது களத்திலிறங்கிய ஜூலி.கே.பிரவுன் எனும் பெண் புலனாய்வுப் பத்திரிகையாளர், ’மியாமி ஹெரால்ட்’ பத்திரிகையில் ஜெஃப்ரி எப்ஸ்டினின் அத்தனைக் குற்றங்களையும், ஒரு தொடராகத் தோண்டித் துருவி எடுத்துக்கொண்டு வந்து கொட்டிவிட்டார்.

அவனுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுதும் உள்ளிருக்கும்படியான சிறைத் தண்டனை கிடைக்கும் என்று எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒருநாள், தீர்ப்பு வழங்கப்படும் முன்பாகவே விசாரணைச் சிறையிலிருந்த ஜெஃப்ரி எப்ஸ்டின் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். அன்று அங்கு பணியில் சிறைக்காவலர்கள் இல்லை, சிசிடிவி வேலை செய்யவில்லை! எப்படி செய்யும்? இம்முறை வசமாக மாட்டிக்கொண்ட எப்ஸ்டினை அதிகாரவர்க்கத்தால் கூட காப்பாற்ற முடியவில்லை. ஆனால், அதிகாரவர்க்கம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டது என்றுதான் பலராலும் கருத்துச் சொல்லப்படுகிறது.

எப்ஸ்டின் ஃபைல்ஸ்!

2015 வழக்கில் ஆதாரமாகச் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள்தான் எப்ஸ்டின் ஃபைல்ஸ் எனப்படுகின்றன. அதில்தான் ஆயிரக்கணக்கான போட்டோக்கள், விடியோக்கள், ஈமெயில்கள், லட்சக்கணக்கான பக்கங்களிலிருக்கும் ஆவணங்கள் எல்லாம் பொதிந்துள்ளன. இதில்தான் உலகெங்கிலுமுள்ள சுமார் 150 விஐபிக்களின் பெயர்கள் அடங்கியுள்ளன. இவை தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களால் 2024, 2025 சமயங்களில் பொதுவில் வெளியிடப் பட்டிருக்கின்றன. அதுதான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களின் ஆய்வுக்கு உள்ளாகியிருக்கிறது.

சம்பந்தப்பட்ட விவிஐபிக்களின் குற்றங்கள் மீண்டும் ஆராயப்படுமா? ஆதாரங்களுடன் வெளிப்படுமா? என்பதெல்லாம் பெரும் சந்தேகம்தான்!

2015 மறுவழக்குக்கும், இந்த ஃபைல்ஸ் வெளியாவதற்கும், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் கௌரவம் பறிக்கப்பட்டதற்கும் முக்கியக் காரணங்களுள் ஒருவராக பின்னணியில் இருந்தவர், எப்ஸ்டினின் விக்டிம்களில் ஒருவரான வர்ஜீனியா லூயிஸ் ஜிஃப்ரே. பின்னாளில் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்புகளை உருவாக்கி, அவர்களுக்கான மீட்புக்காக குரல்கொடுப்பவராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அவரால், இன்னும் தொல்லைகள் பல வரலாம், ஆண்ட்ரூ போல இன்னும் பலரும் பாதிக்கப்படலாம் என அதிகாரத்தின் மாயக்கரங்கள் நினைத்ததோ, அல்லது பல்லாண்டுப் போராட்டத்தினால் ஏற்பட்ட மனவழுத்தமோ தெரியவில்லை சென்ற ஆண்டு, 2025 ஏப்ரலில் அவரும் தற்கொலை செய்துகொள்கிறார். எப்ஸ்டினின் குற்றப்பின்னணி குறித்து அவர் எழுதி, அவரது இறப்புக்குப் பின் வெளியான ‘Nobody’s Girl’ எனும் புத்தகமும், வெளிவராத பல புதிய தகவல்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கதை இவரோடு இங்கே முடியப்போவதில்லை! எப்ஸ்டின் இறந்துவிட்டான். ஆனால், அவன் உருவாக்கிய அதிகார–குற்ற அமைப்பு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!

Puthuyugam
www.puthuyugam.com