வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மனைவியுடன் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பல உலக நாடுகள் இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வெனிசூலா அதிபர் மதுரோ ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயேதுல்லா அலி கமெனியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இதனால், ஈரானின் உச்சபட்சத் தலைவருக்கும் ஆபத்து வரலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அயேதுல்லா அலி கமெனி மற்றும் கமெனிக்கு பிறகு பதவிக்கு வரவுள்ள அவரின் மகன் முஸ்தபா உள்ளிட்ட 20 பேர் ரஷ்யாவில் அரசியல் தஞ்சம் புகத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடேயே, மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரத்தையடுத்து, நைக் நிறுவனத்துக்கு உலகளவில் இலவசமாக பெரும் விளம்பரம் கிடைத்துள்ளது. மதுரோ கைது செய்யப்பட்ட போது, Nike Tech fleece சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்தார் . மதுரோவுக்கு டிராக் சூட் அணிவது மிகவும் பிடித்த விஷயம். அதேபோல, கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் டிராக் சூட் அணிவது மிகுந்த பிடித்த விஷயம்.
இந்த நிலையில், நைக் டிராக்சூட்டுடன் மதுரோ கைது செய்யப்பட்ட புகைப்படம் உலகம் முழுக்க பரவி வருகிறது. நைக் நிறுவனம் கேட்காமலேயே மதுரோ, அந்த நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக செயல்பட்டிருப்பதாக பலரும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டு வருகின்றனர். மதுரோ அணிந்திருந்த அதே மாடல் நைக் டிராக் சூட், சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. அமெரிக்காவில் இந்த ரக டிராக் சூட்கள் 145 டாலர்களுக்கும் ஜாக்கெட்டுகள் 125 டாலர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் இந்த ரக டிராக்சூட் ரூ.6,995 என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செய்தியாளர்களிடத்தில் , தன்னைk கடத்தி வந்து விட்டதாக மதுரோ கூறினார். தொடர்ந்து, நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டனிடத்தில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய மதுரோ, "நான் வெனிசூலா குடியரசின் அதிபர். கடந்த 3ம் தேதி முதல் என்னை கடத்தி வைத்துள்ளனர். கரகாஸ் நகரில் எனது வீட்டில் இருந்த என்னைk கடத்தியுள்ளனர். நான் குற்றம் செய்யாதவன். அப்பாவி. எனது மனைவி முற்றிலும் நிரபராதி "என்றார்.
இந்த சமயத்தில் நீதிமன்றத்தில் இருந்த ஒருவர், மதுரோவை பார்த்து, 'நீ செய்த குற்றங்களுக்கு இப்போது விலை கொடுத்து கொண்டிருக்கிறாய்' என்று கத்தினார். ஆனால், இதற்கு மதுரோவிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. நீதிமன்றத்தில் அமைதியாக இருந்தார்.
அதேவேளையில் , அமெரிக்க அரசின் தரப்பில் மதுரோ மீது, தீவிரவாத செயல்களுக்கு துணை போனதாகவும் கொகைன் போன்ற போதைப் பொருட்களை கடத்த உதவிக்கரமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மதுரோவின் மனைவி மற்றும் மகன்கள் மீதும் இதே குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் மதுரோ மற்றும் அவரின் மனைவி ஜாமீன் கேட்கவில்லை. இதனால், இருவரும் தொடர்ந்து, அமெரிக்க போலீசாரின் கஸ்டடியில் உள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 17ம் தேதி வருகிறது.
இந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய வெனிசூலா எதிர்கட்சித் தலைவரும் 2025ம் ஆண்டு நோபல் பரிசை வென்றிருந்தவருமான மரியா கொரினா மச்சாடோ, அடையாளம் தெரியாத இடத்தில் ஃபாக்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''வெனிசூலா இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ்தான் அந்த நாட்டில் மக்களுக்கு நடக்கும் துன்புறுத்தல், போதை மருந்து கடத்தல், ஊழல்களுக்கு மூல காரணமாக இருந்தவர். எனினும், நிர்வாக காரணங்களுக்காக வெனிசூலா உச்சநீதிமன்றம் அவரை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது. விரைவில் நான் வெனிசூலா திரும்புவேன்'' என்று கூறியுள்ளார்.
வெனிசூலாவில் ஜனநாயகம் மலர போராடி வரும் மரியா, நாடு திரும்பினால் பல அரசியல் மாற்றங்கள் அந்த நாட்டில் நடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.