சவுதி அரேபியாவில் மதுவுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத், ஜெட்டா போன்ற நகரங்களில் மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு, முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்கள் 12 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தால் மது வாங்கிக் கொள்ள முடியும். எந்த நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் மது வாங்கத் தடை தொடர்கிறது. ஆனால், சவுதி அரேபியாவில் மது ஏற்கனவே தாராளமாக புழங்கிய காலக்கட்டம் இருந்தது.
ஒரே இரவில் நடந்த சம்பவத்தால் மதுவுக்கு முற்றிலும் அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டது. சவுதியின் முக்கிய துறைமுக நகரம் ஜெட்டா. இங்கு, ஏராளமான வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. இந்த நகரில் வசிக்கும் தூதரக அதிகாரிகள் அடிக்கடி மது பார்ட்டி நடத்துவது வழக்கம். கடந்த 1951ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜெட்டாவிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரி சிரில் உஸ்மான் என்பவரின் வீட்டில் மது விருந்து நடந்து கொண்டிருந்தது. இந்த விருந்தில் சவுதியின் இளம் இளவரசரான 19 வயதேயான மிஷரிஷ் பின் அப்துல்லாசிசும் கலந்து கொண்டிருந்தார். ஏராளமான பெண்களும் மது விருந்தில் பங்கேற்றனர். அப்போது, போதையின் உச்சத்தில் இருந்த இளவரசர் அப்துல்லாசிஸ் பெண்களிடத்தில் தகராறில் ஈடுபட்டார். இதனால் , அங்கு ஒருவித குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, மது விருந்தில் இருந்து இளவரசர் வெளியேற்றப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த இளவரசர் அடுத்த நாள் மது போதையில் வந்து, துப்பாக்கியால் சிரில் உஸ்மானை சுட்டுக் கொன்றார். அவரின், மனைவிக்கும் துப்பாக்கி சூடு விழுந்தது.
இந்த சம்பவம் சவுதிஅரேபிய மன்னர் குடும்பத்துக்கு பெரும் அவமானமாக அமைந்தது. மகனின் செயல்களால் மன்னர் கிங் அப்துல்லாசிஸ் கடும் கோபமடைந்தார். மிஷரியைக் கைது செய்ய உத்தரவிட்டார். தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, கணவரை இழந்த உஸ்மானின் மனைவியிடமே இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முறையைத் தீர்மானிக்கும் உரிமையை வழங்கினார். மேலும், மிஷரியின் தலை பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே ஒரு ஈட்டியில் தொடங்க விடப்படும் என்றும் மன்னர் உத்தரவிட்டார் .
ஆனால் , உஸ்மானின் மனைவி மரணதண்டனை வழங்க மறுத்து விட்டார். இளவரசரை மன்னித்து விட்டதாக அறிவித்தார். 70,000 அமெரிக்க டாலர்கள் நிதி இழப்பீட்டை பெற்றுக் கொண்டு சவுதியை விட்டு வெளியேறினார். எனினும், இளவரசர் சிறையில் அடைக்கப்பட்டார். வெளிநாட்டு கலாசாரங்களால்தான் மது பழக்கம் இளைஞர்களிடம் பரவுவதாக மன்னர் கருதினார்
விளைவாக, சவுதி அரேபியாவில் மதுவுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டு மது தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. வெளிநாட்டில் இருந்தும் மது இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. இப்படிதான், சவுதி அரேபியா மது இல்லாத நாடாக மாறியது. கள்ளத்தனமாக உள்நாட்டில் மது தயாரித்துப் பிடிபட்டால், கடும் தண்டனையும் விதிக்கப்பட்டது. 1952ம் ஆண்டில் இருந்து மது முற்றிலும் சவுதி அரேபியாவில் இருந்து மறைந்து போனது. கடந்த 70 ஆண்டுகளாக சவுதியில் மது இல்லை. சவுதி மக்கள் கள்ள மது அருந்தி பிடிபட்டால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது . வெளிநாட்டவர்கள் பிடிபட்டால், அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
சவுதி அரேபியாவில் இஸ்லாம் உருவாவதற்கு முன்னர் பல இனத்தவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தின் கவிதைகளும் வரலாற்றுப் பதிவுகளும் மது அருந்தும் கலாச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆனாலும், மிகக் குறைந்த அளவே மதுப் பழக்கம் இருந்துள்ளது. இஸ்லாத்தின் எழுச்சிக்குப் பிறகு, போதைப்பொருட்களைப் பற்றிய குரானின் அறிவுரை வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. எனினும், போதைப் பொருட்களுக்கு தடை விதிப்பது, பிராந்தியங்களுக்கு ஏற்றவகையில் அமல்படுத்தப்பட்டது. தற்போது, 2030ம் ஆண்டு சவுதி அரேபியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடைபெறவுள்ளது. அதோடு, 2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரும் நடக்கிறது. இதனால், ஏராளமான வெளிநாட்டு ரசிகர்கள் சவுதிக்கு வருவார்கள். மது, பீர் இல்லையென்றால் அந்த ரசிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், சவுதியில் படிப்படியாக மது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.