பாகிஸ்தானில் இருந்து 1971ம் நடந்த போரின் போது, கிழக்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. இந்தியா நடத்திய போரின் விளைவாகவே, வங்கதேசம் என்ற நாடே உருவானது. அப்போதிருந்தே வங்கதேசம் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதாக பரவலாக அந்த நாட்டு மக்கள் கருதுவது உண்டு. குறிப்பாக, வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்கள் நடத்திய புரட்சியின் விளைவாக ஷேக் ஹசினாவின் ஆட்சி வங்கேதசத்தில் இருந்து அகற்றப்பட்டது. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
வங்கதேச அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது, மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளானார்கள். ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் பலியானார்கள். இது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசினா மற்றும் வங்கதேச முன்னாள் உள்துறை அமைச்சரான அசாதுன்ஷா கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரும், இந்தியாவில்தான் தஞ்சமடைந்துள்ளார்.
இவர்கள், இருவரையும் வங்கதேசத்தின் தற்போதைய இடைக்கால அரசிடம் இந்தியா ஒப்படைக்க மறுத்து விட்டது. இதன் காரணமாக சமீப காலத்தில் வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு புரையோடிப் போய் இருந்தது. வங்கதேசத்தில் ஷேக் ஹசினா ஆட்சிக்கு எதிராக போராடிய மாணவ தலைவர்களில் முக்கியமானவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி. இவர், வங்க தேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவை அப்புறப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர். மேலும், உஸ்மான் ஹாடி இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்டவர். வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள வங்கதேச தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹாடி அறிவித்திருந்தார்.
ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே அதாவது , டிசம்பர் 12ம் தேதி மத்திய டாக்காவில் பினோய்நகர் பகுதியில் வைத்து ஹாடி சுடப்பட்டார் . மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை சுட்டுவிட்டு த்தப்பியதாக டாக்கா போலீஸ் கூறுகிறது. இதில், படுகாயமடைந்த ஹாடி உடனடி, சிகிச்சைக்கு பிறகு, சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ம் தேதி இரவு இறந்து போனார். 32 வயதேயான இளம் தலைவர் இறந்தது வங்கதேசத்தைக் கொந்தளிக்க வைத்தது. குறிப்பாக, தலைநகர் டாக்கா கொழுந்து விட்டு எரிந்தது.
டாக்காடவில் பல கட்டடங்கள், குடியிருப்புகள் தாக்கப்பட்டன. வங்கதேசத்தின் முன்னணிப் பத்திரிகைகளான டெய்லி ஸ்டார் மற்றும் புரோதம் ஆலோ ஆகியவற்றின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. உள்ளே, பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள். இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் எரித்துக் கொல்லப்பட்டார். வன்முறையாளர்கள் இந்தியாவின் தூண்டுதலின் பேரில்தான், ஹாடி கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், டாக்கா நகர போலீஸ் அதிகாரி நஸ்ருல் இஸ்லாம் கூறுகையில்,''ஹாடி கொலையில் முக்கியக் குற்றவாளிகள் கரீம் மவுசாத், அலாம்கீர் ஷேக் ஆவார்கள். டாக்காவில் கொலையில் ஈடுபட்ட இருவரும் வங்கதேசத்தின் Mymensingh மாவட்டத்திலுள்ள இந்திய எல்லை பகுதியான Haluaghat வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். புர்தி என்பவர் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார். பின்னர், ஷமி என்ற டாக்ஸி டிரைவர் அங்கிருந்து இருவரையும் மேகலாயாவிலுள்ள டூராடவுண் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரையும், இந்தியப் போலீசார் கைது செய்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. இதுவரை, இந்தியத் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. எனினும், நாங்கள் இந்திய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த தகவலை மேகலாயாவில் இந்திய எல்லை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதியாக மறுத்துள்ளனர். ''இந்திய - வங்கதேச எல்லைப் பகுதிக்குள் அப்படி யாரும் நுழைந்ததாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இது , முற்றிலும் தவறான தகவல்'' என்று அவர்கள் கூறியுள்ளனர்.