டாடா குழுமத்தின் மறைந்த முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் வளர்ப்பு தாயும், மற்றும் தற்போதைய டாடா குழுமத்தின் தலைவர் நோயல் டாடாவின் தாயருமான சைமன் டாடா மறைந்தார். அவருக்கு வயது 95.
முதுமை காரணமாக முதலில் துபாய் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் மும்பை அழைத்து வரப்பட்டு, பிரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
இந்தியாவின் மிகப் பெரிய காஸ்மெடிக்ஸ் நிறுவனமான லக்மே நிறுவனத்தை முன்னணி பிராண்டாக மாற்றியதோடு, வெஸ்டசைட் என்ற பிராண்டில் துணிகளை விற்கும் டிரெண்ட்ஸ் நிறுவனத்தையும் இவர்தான் உருவாக்கினார்.
சுவிட்சர்லாந்தில் ஜெனிவா நகரில் பிறந்த சைமன், 1953ம் ஆண்டு இந்தியாவை சுற்றி பார்க்க வந்தார். இரண்டு வருடம் கழித்து நேவல் டாடாவை திருமணம் செய்தார். பின்னர், 1960ம் ஆண்டுகளில் இருந்து டாடா குழுமத்தில் பணியாற்ற தொடங்கினார். டாடா ஆயில் மில்ஸ் கம்பெனியின் துணை நிறுவனமாக இயங்கி வந்த லக்மேவில் போர்டு உறுப்பினராக இணைந்தார். இதற்கு பிறகு,அந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி பிராண்டாக உயர்ந்தது. ஹமாம் சோப்பும் லக்மேவின் தயாரிப்புதான்.
சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில் இந்திய காஸ்மெடிக் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காஸ்மெடிக் பொருட்கள்தான் இந்திய சந்தையை ஆக்கிரமித்திருந்தன. இந்த சமயத்தில் இந்திய பெண்களின் மனநிலை, உடல்நிலைக்கு ஏற்ற வகையில் லக்மே நிறுவனத்தில் பல புதுமைகளை புகுத்தி பொருட்களை தயாரிக்க தொடங்கினார். இவருக்கு 'Cosmetic Czarina of India' என்ற செல்லப் பெயரும் உண்டு.
இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் நடந்து கொண்டிருந்த போது, லக்மே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்கள் இணைந்து 1996 ஆம் ஆண்டு 50:50 சதவிகித பங்களிப்புடன் கூட்டு நிறுவனத்தை உருவாக்க இவர்தான் அச்சாரமிட்டார். இதனால் லக்மே மற்றும் யூனிலீவர் நிறுவனங்கள் தங்கள் அழகு சாதனப் பொருட்களை கூட்டாக சந்தைப்படுத்தின. 1998 ம் ஆண்டு வாக்கில், லக்மே தனது பிராண்டுகள் மற்றும் 50 சதவீத பங்குகளை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துக்கு சுமார் ரூ.200 கோடிக்கு விற்றது.
இதைத் தொடர்ந்து, லக்மே நிறுவனம் அழகு சாதனப் பொருட்களிலிருந்து ஃபேஷன் மற்றும் துணிகள் சில்லறை விற்பனைக்கு மாறியது. இது ஆடைப் பிரிவில் வலுவான இந்திய பிராண்டுகளை உருவாக்கியது. தற்போது இந்திய சந்தையில் சில்லறை விற்பனைச் சங்கிலிகளான வெஸ்ட்சைட் மற்றும் ஜூடியோவின் தாய் நிறுவனமான டிரெண்ட்சை சைமன் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சைமன் மறைவு குறித்து டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: ''டாடா நிறுவனத்தின் தூண் போன்ற சைமன் டாடா மறைந்துள்ளார். லக்மே, வெஸ்ட் சைட் நிறுவனங்களை முன்னணி பிராண்டாக மாற்றிவர். டாடா அறக்கட்டளை மூலம் பல்வேறு சமுதாயப்பணிகளிலும் அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது பாசிடிவான எண்ணங்கள் எங்களுக்கு மிகுந்த பலத்தை கொடுத்தது. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர். இறைவன் அருகில் அவர் இளைப்பாறட்டும்.''
மைசன் டாடா மறைவுக்கு பல தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.