மகனுக்கு சுப்ரமணியன் சந்திரசேகர் பெயர் வைத்தது ஏன்? - எலன் மஸ்க்

எனது பார்ட்னர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது பலரும் அறியாதது.
Elon Musk & Partner Shivon Ziliz Welcomes Their 4th Kid
Elon Musk & Partner Shivon Ziliz Welcomes Their 4th Kid Wikimedia/Twitter
Published on

உலக பணக்காரரான எலன் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் எனப் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். 2000ம் ஆண்டு எலன் மஸ்க் ஜஸ்டின் வில்சன் என்பவரை மணந்தார். 2008ம் ஆண்டு இந்த திருமணம் முறிந்தது. இவருக்கு 4 மனைவிகள் என்று சொல்கிறார்கள். மொத்தம் 14 குழந்தைகளுக்கு எலன் மஸ்க் தந்தை.

கடைசியாக, நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவான் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் எலன் மஸ்க் 14-வது குழந்தையைப் பெற்றெடுத்தார். எலன் மஸ்க்குக்கு ஒரு திருநங்கை மகளும் உண்டு. இவரின் பெயர் சேவியர் மஸ்க். தனது தந்தையின் பெயரை சேவியர் துறந்துவிட்டார். எலன் மஸ்க்குடன் எந்த ரீதியிலும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்று சேவியர் மஸ்க் வெளிப்படயாகவே கூறி விட்டார். தனது பெயரை விவியன் ஜென்னா என்றும் மாற்றிக் கொண்டார்.

எலன் மஸ்க் குழந்தைகளை பெற்றுக் கொள்வதை அதிகம் விரும்புகிறார். பிறப்பு விகிதம் குறைய கூடாது என்பது அவரின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில், நோபல் பரிசு வென்ற இந்திய விஞ்ஞானியின் பெயரை தனது மகனுக்கு சூட்டியது குறித்து நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் எலன் மஸ்க் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'எனது பார்ட்னர் ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே எங்களுக்கு பிறந்த மகனுக்கு 'சேகர் ' என்ற மிடில் பெயரை சூட்டியுள்ளோம். 1983ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாகவே இந்த பெயரை சூட்டினோம். ஷிவான் இந்தியாவில் வாழவில்லை. ஆனால், அவர் குழந்தையாக இருந்த போது தத்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர், தனது வாழ்க்கையை கனடாவில் தொடங்கினார். ஒரு தந்தையாக எனது வாழ்க்கையை நிறைவாகவே வாழ்கிறேன் 'என்றார்.

ஹெச்1 பி விசா பற்றி கேட்ட போது , எலன் மஸ்க் கூறியதாவது,

'இந்தியர்களின் திறமையால் அமெரிக்காதான் அதிகம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஹெச் -1 பி விசா விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்தவே டிரம்ப் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதுவும், தேவையானதாகவே நான் கருதுகிறேன் . ஹெச்- 1 பி விசா வழங்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதே எனது கருத்து' என்று தெரிவித்தார்.

Subrahmanyan Chandrasekhar
Subrahmanyan ChandrasekharBy American Institute of Physics (AIP)/Wikipedia

எலன் மஸ்க்கின் பார்ட்னர் ஷிவான் சிலிஸ் கடந்த 2017ம் ஆண்டு நியூராலிங் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது, அந்த நிறுவனத்தின் இயக்குனராகவும் சிறப்பு செயல்பாட்டுத்துறையின் தலைவராகவும் உள்ளார். கனடாவிலுள்ள ஒன்டாரியோ நகரில் வளர்ந்தவர். அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலையில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றவர். நியூராலிங் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னதாக ஐ.பி.எம், பூமாரங் போன்ற நிறுவனங்களில் பணி புரிந்தார்.

எலன் மஸ்க்குடன் ஷிவானுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில், Strider , Azure ஆகியோர் இரட்டை குழந்தைகள். அடுத்து Arcadia என்ற மகளும் seldon Lycurgus என்ற இளைய மகனும் உண்டு.

சுப்ரமணியன் சந்திரசேகர் யார்?

இந்திய விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் 1910ம் ஆண்டு பாகிஸ்தானிலுள்ள லாகூரில் பிறந்தவர். பின்னர், சென்னையில் குடும்பம் குடியேறியது.

திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றவர். லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் 1933ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பிறகு, 1937ம் ஆண்டு முதல் சிகாகோ பல்கலையில் வானியல் ஆராய்ச்சியாளராக 27 ஆண்டுகள் பணி புரிந்தார். கடந்த 1983ம் ஆண்டு நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் ஏ.ஃபவுலருடன் இணைந்து இவருக்கு வழங்கப்பட்டது. 1995ம் ஆண்டு சுப்ரமணியன் சந்திரசேகர் மறைந்தார்.

இயற்பியலில் 1930ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற சர் சி.வி ராமன், சுப்ரமணியன் சந்திரசேகரின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

Puthuyugam
www.puthuyugam.com