11 கோடி பரிசு..நண்பர்களுக்கு உதவிய நல்ல மனம்..!

லாட்டரியில் பரிசு வென்ற நபர், அந்த பணத்தை என்ன செய்ய போகிறார் என்பதை அறிந்தால், அனைவரும் வியப்படைவார்கள்.
11 கோடி பரிசு வென்ற அமித்
11 கோடி பரிசு வென்ற அமித்
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள கோட்புட்லி என்ற இடத்தை சேர்ந்தவர் அமித் ஷெக்ரா. காய்காறி வியாபாரி. சாலையோரத்தில் வண்டியில் கடை போட்டு காய்கறிகளை விற்று, அதில் வந்த வருவாயில் குடும்பத்தை ஓட்டி வந்தார். இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு லாட்டரிச் சீட்டுகளை வாங்க தனது நண்பரிடத்தில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். அமித்தின் லாட்டரி மோகம் பற்றி அறிந்த அந்த நண்பரும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு பஞ்சாப் மாநிலம் பதின்டா நகருக்கு சென்று, தனது மனைவி பெயரில் ஒரு லாட்டரியையும், தனது பெயரில் ஒரு லாட்டரியையும் அமித் வாங்கினார். பின்னர், வழக்கம் போல தனது காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி லூதியானா நகரில் நடந்த லாட்டரி குலுக்கலில் அமித் வாங்கிய இரு லாட்டரிகளுக்குமே ஜாக்பாட் அடித்தது. அவரின், மனைவிக்காக வாங்கிய லாட்டரிக்கு ஆயிரம் ரூபாய்தான் பரிசு விழுந்தது. ஆனால் அமித் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான 11 கோடியே விழுந்து விட்டது. தகவல் அறிந்ததும், அமித் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய் விட்டார். அக்கம்பக்கத்தினரும் அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர். இங்கு, லாட்டரியில் அமித் பரிசு வென்றதைவிடவும் அவர் கூறிய சில விஷயங்கள்தான் நெட்டிசன்களை நெகிழ வைத்து விட்டது.

lottery advt
lottery advt

அமித் கூறுகையில், 'எனது வாழ்க்கை ஒரே நாளில் மாறி விட்டது. பஞ்சாப் அரசுக்கும் லாட்டரி ஏஜன்சிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஹனுமனின் தீவிர பக்தர். என்னை அவர் கைவிடவில்லை. இந்தப் பணத்தில் எனக்கு லாட்டரி வாங்க பணம் கொடுத்து உதவிய நண்பருக்கு கொஞ்சம் கொடுப்பேன். எனது நண்பர்களின் இரு மகள்கள் சிறு வயதிலேயே தாயை இழந்தவர்கள். நானும், சிறு வயதில் தாயை இழந்தவன். தாய் இல்லாத வலியை நான் உணர்ந்தவன். அதனால், எனது நண்பர்களின் குடும்பத்திலுள்ள - தாயை இழந்த - மகள்களின் பெயரில் தலா 50 லட்சம் வங்கியில் டெபாஸிட் செய்ய போகிறேன். இது, அவர்களின் வருங்கால வாழ்வுக்கு உதவிக்கரமாக இருக்கும். மீதித் தொகையை கொண்டு எனக்கு நல்லதொரு வீடு கட்ட வேண்டும். எனது குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டுமென்பதே எனது லட்சியம் 'என்றார்.

லாட்டரியில் வென்ற பணத்தை, தான் மட்டுமே வைத்துக் கொள்ளாமல், தனக்கு உதவிய நண்பருக்கும், நண்பர்களின் மகள்களுக்கும் அமித் வழங்க முடிவு செய்த விஷயத்தை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டினர். அதே வேளையில், சிலர் 'பரிசு வென்ற பிறகு, மீடியாக்களில் தென்படாமல் இருப்பதே நல்லது. அமித் வெகுளியான மனிதர் போல தெரிகிறார். மற்றவர்கள், அவரை ஏமாற்றி விடக் கூடாது 'என்றும் கூறியுள்ளனர்.

பஞ்சாப் லாட்டரியில் 11 கோடியை வென்ற அமித், பரிசு வென்ற லாட்டரியுடன் தனது வங்கிக்கணக்கு விவரத்தை லூதியானாவிலுள்ள பஞ்சாப் மாநில லாட்டரி இயக்குரகத்திடம் அளித்துள்ளார். வரி கழிவுகள் போக, மீதித்தொகை அவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthuyugam
www.puthuyugam.com