அமெரிக்காவின் மேயராக முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு உகாண்டாவை பூர்வீகமாக கொண்ட சோரன் மம்தானி ஜனநாய கட்சி சார்பில் போட்டியிட்டார். குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். அக்டோபர் 25ம் தேதி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கிட்டத்தட்ட 20 லட்சம் வாக்குகள் பதிவாகின. கடந்த 50 ஆண்டுகளில் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு இவ்வளவு அதிக வாக்குகள் பதிவானது இதுவே முதன்முறை. இதில், 9, 48,202 வாக்குகள் - அதாவது பதிவான மொத்த வாக்குகுளில் 50. 6 சதவிகிதத்தை - பெற்று மேயர் பதவிக்கு தேர்வாகியுள்ளார் சோரன் மம்தானி. ஆண்ட்ரூ குவாமோ 7,76,547 வாக்குகளுடன் 2வது இடத்தை பிடித்தார். குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவுக்கு 1,37,030 வாக்குகளே கிடைத்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூயார்க் நகரின் முதல் இஸ்லாமிய மத்தை சேர்ந்த மேயர் என்ற பெருமையை சோரன் மம்தானி பெற்றுள்ளார். 34 வயதான மம்தானி நியூயார்க் நகரின் இளம் மேயர் என்ற பெருமையையும் அவர் பதவியேற்கும் நாளான ஜனவரி 1ம் தேதி பெறுவார். அதோடு, நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் ஆப்ரிக்க மேயர் என்கிற பெருமையும் மம்தானிக்கு கிடைக்கும்.
உகாண்டாவில் கம்போலா என்ற நகரில் பிறந்த சோரன் மம்தானியின் தாயார் யார் தெரியுமா? சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற படங்களை இயக்கிய மீரா நாயர்தான் . தந்தையின் பெயர் மக்மூத் மம்தானி. ஏற்கனவே , தனது முதல் கணவர் மிட்ச் எப்ஸ்டீனை மீரா நாயர் விவாகரத்து செய்த நிலையில், 1988 ம் ஆண்டு தனது மிசிசிப்பி மசாலா என்ற படத்துக்காக உகாண்டாவில் சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, மீரா மஹ்மூத் மம்தானியைச் சந்தித்து காதல் வயப்பட்டார். தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1991ம் ஆண்டு சோரன் மம்தானி பிறந்தார். 7 வயது வரை உகாண்டாவில் வாழ்ந்த சோரன் பின்னர், பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறினார். 2018ம் ஆண்டு அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமையை பெற்றார்.
இவர், கல்லூரி காலத்தில் இருந்தே அரசியல் வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினார். புலம் பெயர்ந்தோர் நலன், மலிவு விலை வீடுகள், பொதுப் போக்குவரத்து போன்றவற்றை முன் வைத்து பிரசாரத்தை மேற்கொண்டார். இதனால் இளைய தலைமுறை மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு இவருக்கு கிடைத்தது. இவரை, வெற்றி பெற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் நியூயார்க் நகரின் இளைஞர்கள் மேயர் தேர்தலில் அதிகளவில் வாக்குகளை செலுத்தியதாக கூறப்படுகிறது.
எல்லோரையும் வம்பிழுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சோரன் மம்தானியையும் விட்டு வைக்கவில்லை. சோரன் மம்தானியை பக்கா கம்யூனிஸ்ட் என்று கடுமையாக விமர்சித்ததோடு, நியூயார்க் நகர மேயரானால், குடியுரிமையைப் பறித்து கைது செய்து நாடு கடத்த போவதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தர். அதோடு, நியூயார்க் நகரின் அடிப்படை தேவைக்கான நிதியை தவிர பிற நிதிகள் அனைத்தையும் முடக்கி விடுவேன் என்றும் டிரம்ப் மிரட்டியிருந்தார். டிரம்பின் மிரட்டலுக்கு பணியாத நியூயார்க் நகர மக்கள் சோரன் மம்தானியை மேயராகத் தேர்வு செய்து அழகு பார்த்துள்ளனர். டிரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.